சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மே 12, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 'டவுட்' தனபாலு

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி: பொருளாதார மந்தம், வேலைவாய்ப்பின்மை என்றெல்லாம், எதிர்க்கட்சிகள் நீட்டி முழக்குகின்றன. இது, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட பிரச்னை இல்லை; 70 ஆண்டு கால பிரச்னை என்பதை, யாரும் மறந்து விடக் கூடாது.
டவுட் தனபாலு: இவற்றை எல்லாம் நீட்டி முழக்கித் தானே, நீங்க ஆட்சிக்கு வந்தீங்க... 70 ஆண்டு பிரச்னையை தீர்க்க, இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவைப்படும்... தேர்தல் பிரசாரத்தில், இதைச் சொல்லாமல் விட்டால், ஐந்தாண்டு கால கணக்கு கேட்கப்படுமே... இதற்கு எதற்கு ஆவேசப்படுறீங்க என்பது தான், மக்களின், 'டவுட்!'

பத்திரிகை செய்தி: 'அரசைக் கவிழ்ப்போம் என்று, கொக்கரிக்கிற கயமையை, வேரோடு வீழ்த்தி, நான்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், கடைசி நொடி வரை, இடையறாது பணியாற்ற வேண்டும்' என, கட்சியினருக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், இ.பி.எஸ்., ஆகியோர், வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
டவுட் தனபாலு: கடைசி நொடி வரை என்றால், ஓட்டுப்பதிவு முடியும் வரையா... இல்லை, ஓட்டு எண்ணிக்கை முடியும் வரையா... ஏன் இந்த, 'டவுட்'னா, ஓட்டுப்பதிவு இயந்திரம் வைத்திருக்கும் மையத்தில், தாசில்தார் சென்ற விவகாரம், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வருகை, அதிகாரிகள் குளறுபடியால் மறு ஓட்டுப்பதிவு என, எந்த பரபரப்பு ஏற்பட்டாலும், அது குறித்து, அ.தி.மு.க., வாயே திறக்காமல் இருக்கே... அதனால் தான் கேட்டோம்!

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: அரசியல் சட்டத்துக்கு விரோதமாக செயல்படும், புதுச்சேரி துணை நிலை கவர்னரை, மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும்.
டவுட் தனபாலு: புதுச்சேரியில், முதல்வர் நாராயணசாமி தலைமையில், காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருக்கு... துணை நிலை கவர்னர் விவகாரத்தில், மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில், டில்லியில் இருக்கும், காங்., தலைவர்களே போராடாமல் இருக்காங்க... இது, உங்களுக்கு எதையும் உணர்த்தலையா என்பது தான், என்னோட, 'டவுட்!'

பால்வளத் துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜி: தமிழகம் இன்று, ஓர் எளிமையான, வலிமையான முதல்வரை பெற்றுள்ளது. எந்த பிரச்னை என்றாலும், நேரடியாக சந்தித்து பேசும் வாய்ப்பு இன்றுகிடைத்துள்ளது.
டவுட் தனபாலு: 'ஜெயலலிதாவை, அமைச்சர்களால் கூட சந்திக்க முடியாது... அவர், தனி ராஜாங்கம் நடத்தி வந்தார்... அவரது மனசுக்குத் தோன்றியதை மட்டுமே, தன்னிச்சையாக முடிவெடுத்து, செயல்படுத்தினார்'னு, எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டு எல்லாம், நியாயமானது தான்னு, ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது மாதிரி, 'டவுட்' ஏற்படுதே...!

மத்திய அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர்: 'நீட்' தேர்வில் இருந்து, ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிப்பது சாத்தியம் இல்லை.
டவுட் தனபாலு: 'நீட்' தேர்வு விலக்கில், தீவிரமாக இருக்கும் மாநிலம், தமிழகம் மட்டும் தான்... தமிழக அரசை நிர்ணயிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த, நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கும் நேரத்தில், இப்படி கொளுத்திப் போடுறீங்களே... உள்ள நிலைமையைச் சொல்றீங்களா... உள்குத்தோடு சொல்றீங்களா என்ற, 'டவுட்' எழுகிறதே!

பள்ளி கல்வித் துறை அமைச்சர்,செங்கோட்டையன்: தேர்தல் முடிவுகளுக்குப் பின், கல்வித் துறைக்கென, தனி சேனல் ஏற்படுத்தப்படும்.
டவுட் தனபாலு: கல்வித் துறை தொடர்பாக, ஏற்கனவே அறிவித்த திட்டங்களைத் தான், ரொம்ப காலமா சொல்லி வர்றீங்க... செயல்படுத்தியதா, எப்போது பேசப் போறீங்க... அப்படியே, கேபிள், 'டிவி' கட்டணத்தைக்குறைப்பதாக, இந்த அரசு வாக்குறுதி அளித்திருக்கு... அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கு என்பது தான், மக்களின், 'டவுட்!'

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
12-மே-201906:07:42 IST Report Abuse
D.Ambujavalli தொண்டர்களெல்லாம் கடைசி நொடி வரை உழைத்து ஆட்சியைக் காப்பாற்றிக் கொடுங்கள் இரண்டு வருஷத்தில் இன்னும் நாலு தலைமுறைக்காவது நாங்கள் சேர்க்க வேண்டாமா? 'எங்களுக்கென்ன லாபம்?' என்கிறீர்களா, வெயில் மழை பாராது உழைத்து, நோய் வாய்ப்பட்டு, எந்த அரசு மருத்துவ மனையிலாவது உயிரை விட்டு, குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்துங்கள், அதுதான் நாங்கள் தரும் பெரிய பரிசு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X