புது டில்லி : இந்தியாவில், இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.,) எனப்படும் பயங்கரவாத அமைப்பினர் புதிய கிளை துவங்கியிருப்பதாக அறிவித்துள்ளனர். இது இந்திய பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதப்படுகிறது.

ஐ.எஸ்., அமைப்பு உலகெங்கும் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து அதிபயங்கரவாத செய்களில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்திய இலங்கை குண்டுவெடிப்பையும் அரங்கேற்றியது இந்த அமைப்பு தான். உலகின் பல நாடுகளும், ஐ.எஸ்., அமைப்பின் பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்த திணறி வருகின்றன.
இந்த நிலையில், காஷ்மீரில் சமீபத்தில் நடந்த அம்ஷிபோரா தாக்குதலுக்கு ஐ.எஸ்.அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும், நேற்று (மே.11) ஐ.எஸ்.அமைப்பின் செய்தி நிறுவனமான 'அமக்' நியூஸ் ஏஜென்சி வெளியிட்டுள்ள செய்தியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தெற்கு காஷ்மீர், சோபியான் மாவட்டத்தில் உள்ளது அம்ஷிபோரா கிராமம். இங்கு சமீபத்தில் பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் சண்டையிட்டது. இதில், அந்த பயங்கரவாதிகள் பெரிதும் இயந்திர துப்பாக்கிகளையே இந்த சண்டையில் பயன்படுத்தியுள்ளனர்.
நம்ப முடியவில்லை
முதன் முதலில், 2017 ம் ஆண்டில் தான், காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு பின்னால், ஐ.எஸ்.அமைப்பின் உதவி இருப்பதாக முதன் முதலில் சந்தேகம் எழுந்தது. அதன் பின் இப்போதைய தாக்குதலும், சர்வதேச செய்தி நிறுவனங்கள் மற்றும் உளவு அமைப்புகளின் சந்தேகமும் காஷ்மீரில் ஐ.எஸ்., ஊடுருவல் குறித்த அபாயத்தை உணர்த்துகின்றன.
ஆனால், காஷ்மீர் மாநிலத்தின் போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், '' இப்போதும் எங்களால், ஐ.எஸ்., அமைப்பின் கிளை இருக்குமா என்பதை உறுதியாக நம்ப முடியவில்லை. எனினும், இந்திய ராணுவமும், பாதுகாப்பு படைகளும் எத்தகைய பயங்கரவாதிகளையும் சந்திக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளோம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE