புதுடில்லி, அரசியல் கட்சிகளில், 'டுவிட்டர்' சமூக வலை தளத்தில் பின்தொடர்வோர் எண்ணிக்கையில், 1.1 கோடி பேருடன், நாட்டில் முதலிடத்தில், பா.ஜ., உள்ளது. காங்.,கை, 51.5 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.'டுவிட்டர் சமூக வலைதளத்தில், பா.ஜ.,வை பின்தொடர்வோர் எண்ணிக்கை, 1.1 கோடியை தாண்டியுள்ளது.
இது புதிய மைல்கல்லாகும்' என, பா.ஜ.,வின் சமூக ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.டுவிட்டர் புள்ளிவிபரங்களின்படி, காங்., கட்சியின் டுவிட்டர் கணக்கை, 51.5 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடியை, 4.7 கோடி பேர் பின்தொடர்கின்றனர். அதே நேரத்தில், காங்., தலைவர் ராகுலை, 94 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவாலை, 1.49 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, 'டுவிட்டர், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில், ஒட்டுமொத்தமாக அதிகமானோர் பின்தொடரும், அரசியல்வாதிகளில், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, 18.27 கோடி பேருடன் முதலிடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில், 11.09 கோடி பேருடன், பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது இடத்தில் உள்ளார்.