குடும்பம் எனும் ஆனந்த நிலையம்: இன்று(மே 15 ) உலக குடும்பதினம்

Updated : மே 15, 2019 | Added : மே 15, 2019 | கருத்துகள் (1)
Advertisement
குடும்பம்,ஆனந்த நிலையம், உலக குடும்ப தினம்

எல்லோரையும் இணைத்து வைத்திருக்கும் ஒற்றுமைச் சங்கிலி குடும்பம், உறவுகளின் வரவைக் கற்றுத்தருவது குடும்பம். அனுபவ ஞானம் தரும் போதிமரமும் குடும்பம்தான்.

கணவன், மனைவி, குழந்தைகள், தந்தை, தாய், சகோதர-சகோதரிகள், மாமன் -மாமி, சித்தப்பா-சித்தி, தாத்தா- பாட்டி என்று உறவுகளின் உன்னத ஆலயம் குடும்பம். அமைதி நிலவும் ஆனந்த நிலையமும் குடும்பம்தான்.அன்பும் பாசமும் நேயமும் விட்டுக்கொடுத்தலும் குடும்பத்தின் உயரிய மதிப்பீடுகள். பொறுமையையும் விட்டுக் கொடுத்தலையும் குடும்பம் கற்றுத் தருகிறது. பிறவியாகிய பெருங்கடலைக் கடக்க உதவும் தெப்பம் குடும்பம்தான்.

உறவுகளால் கோர்த்துக் கட்டப்பட்ட பாசக் கதம்பம் குடும்பம்.நெஞ்சுக்குள் நுழைகிற பாசமொழியைக் குடும்பங்களே கற்றுத்தருகின்றன.இடைவெளிகளை இட்டுநிரப்பும் இனிய பணியைக் குடும்பங்கள் இன்னமும் செய்கின்றன. சகமனிதர்களை மதிக்கக் கற்றுத்தரும் பண்பாட்டுக்கூடம் குடும்பம். அடுத்த தலைமுறையை உருவாக்கும் கடமை குடும்பங்களுக்கே உண்டு. நிஜமான அன்பை, திடமான உறுதியை, வளமான வாழ்க்கையை தருவது குடும்பங்கள். வழிதவறிச் செல்கிறபோது வழிநடத்தும் கலங்கரைவிளக்குகள் குடும்பங்கள்தான்.
குழந்தைகளின் வழிகாட்டிகள் பெற்றோர்கள்தான்! பெற்றோர்களை நகலெடுத்தே குழந்தைகள் வளர்கின்றன. அமைதி தவழும் இல்லம் இறைவன் வாழும் இல்லம்.வீட்டுக்குள் நுழைந்த உடன் நிம்மதியும் அமைதியும் கிடைக்காவிட்டால் அது இல்லம் இல்லை. குற்றங்களை உற்றுப் பார்க்கும் உருப்பெருக்கியன்று குடும்பம். மகிழ்வலைகள் குடும்பத்தை மேம்படுத்துகின்றன.

கணவன் மனைவி உறவுஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் கணவன் மனைவி உறவே குடும்பத்தின் ஆணிவேராகத் திகழ்கிறது. மனைவிக்குகணவன் மீது மரியாதை, கணவனுக்கு மனைவி மீது நம்பிக்கை இருந்தால் மட்டுமே இல்லம் இனிய சொர்க்கமாக அமையும்.ஆனால் இன்று திருமணம் பேசும்போதே மணமகனின் தாய் தந்தையர் தங்களோடு இருக்கக்கூடாது என்று கேட்கும் பெண்பிள்ளைகள், வருகிற பெண்ணைக் கொடுமைப்படுத்தி அல்ப சந்தோஷம் அடையும் மாமியார்களால் குடும்ப அமைப்பு ஆடிக்கொண்டிருக்கிறது.

உறவுவலையை அறுத்தெறியும் கூர்கத்தி நம் கோபம்தான்.சினத்தைச் சிந்தியதால் சீரழிந்த குடும்பங்கள் எத்தனை எத்தனை! பொறுக்கவும் பிடிக்காமல் இருக்கவும் பிடிக்காமல் வெறுப்பைச் சிந்தி வெட்டவெளியான குடும்பங்கள் ஆயிரம்ஆயிரம். திருமணமான ஒரே ஆண்டுக்குள் தானே பெரியவர் என்கிற தன்முனைப்பால் விவாகரத்தை நோக்கி நீதிமன்றம் நகரும் தம்பதியர் கூட்டம் கூடிக்கொண்டே இருக்கிறது. மகிழ்ச்சி இல்லா குடும்பங்கள் மரணவீடுகளுக்கு ஒப்பானது.ஆயிரம் காலத்துப் பயிர் கண் எதிரே கருகிக்கொண்டிருக்கிறது.

குடும்பம் என்பது செங்கலால் கட்டப்பட்ட கட்டடத்தில் நடக்கும் இல்லறம் மட்டுமல்ல, அது அன்பான உள்ளங்கள் உள்ளன்போடு வாழும் அன்பு ஆலயம்.பெற்றோர்உறவுகளின் உன்னதத்தைக் குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். அளவுகடந்த பாசத்தின் காரணமாக குழந்தைகளைக் கண்டிக்காமல் விட்டால் அக்குழந்தைகள் வழிதவறிச்செல்லும். வீட்டின் வலியையும் வாய்ப்புகளையும் குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். உங்கள் கனவுமூட்டைகளைச் சுமக்கும் சுமைதாங்கியல்ல குழந்தைகள்.

குழந்தைகளோடு மனம்விட்டுப் பேசுங்கள். அன்பைக் கொட்டி வளர்க்கும் இல்லம் பாசத்தை வளர்க்கும் உள்ளம். சரியாக வளர்க்கப்படாத குழந்தைகள் சமூகத்தின் நச்சுமரங்களாக மாறுகின்றன. அலைபேசியின் தொடுதிரைகளுக்குள்ளாகத் தொலைந்து கிடக்கிற இளைய சமுதாயத்திற்கு யதார்த்தத்தைக் கற்றுத் தரவேண்டியவர்கள் பெற்றோர்கள்.

ஒருவரையொருவர் புரிந்துகொள்ளாததால் சண்டைகளும் பூசல்களும் நிறைந்த இடங்களாகக் குடும்பங்கள் மாறின. தன் கருத்தே சிறப்பானது, நானே பெரியவன் என்கிற உயர் எண்ணம் சீட்டுக்கட்டுகள் சிதறி விழுகிற மாதிரி குடும்பங்களைக் குலைத்துவிடும். எல்லோர்க்கும் உள்ளமுண்டு, யாருடைய மனமும் புண்படாமல் பேசப்பழகுங்கள்.“ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு” என்பது அறிவியலுக்கான கோட்பாடு மட்டுமில்லை, குடும்ப வாழ்வியலும் அதைத்தான் பேசுகிறது. சிறகுகளைக் கத்தரித்துவிட்டுப் பறக்கச் சொல்கிறது இந்த குடும்பஅமைப்பு என்கிறவர்களுக்குப் பதில், இந்தியாவின் பண்பாட்டை இந்தக் குடும்ப அமைப்பே காக்கிறது என்பதுதான்.
வீடு என்பதுதங்குமிடம் என்ற அளவில் மட்டும் நாம் புரிந்துகொண்டிருக்கிறோம், ஆனால் அமைதி தங்குமிடம், மகிழ்ச்சி பொங்குமிடம் என்று நாம் அறியாமலிருக்கிறோம்!ஒருசெடியைப் பதியன்போட்டு இன்னோர் இடத்தில் நடும்போது தாய்மண்ணைக் கொஞ்சம் எடுத்துச்சென்று அச்செடியோடு வைப்போமே; அதேபோல்தான் நம் குடும்பம் நாற்றங்காலாய் அமைந்து இன்னொரு வீட்டிற்குதிருமணம் முடித்துச் செல்வதற்கேதுவாய் நம் பண்பாட்டையும் நம் பழக்கவழக்கத்தையும் கற்றுத்தருகிறது.

அவ்வகையில் குடும்பம் உறவுகளின் அருமை சொல்லித்தரும் பண்பாட்டுப் பயிற்சிக்கூடம்.குடும்பம்ஆலமரத்தில் விழுதுகளும் அன்பெனும் வேரை நம்பியே உள்ளன. முரண்கள் ஒருபோதும் அரண்களாக இருக்கமுடியாது! சண்டையிட்டு மண்டையுடைக்க குடும்பம் ஒன்றும் போர்க்களம் இல்லை. காட்டுப்பறவைகள்கூட ஒற்றுமையாக இருக்கும் போது வீட்டுஉறவுகள் நாம் ஏன் இணக்கமின்றி பிணக்கத்தோடு அலையவேண்டும்?

பிரிவினைகளும் பிறவினைகளும் நம் குடும்பங்களின் பிரிவுகளுக்கும் பிளவுகளுக்கும் காரணமாகலாமா?அன்பு ஒருபோதும் அடிமைத்தனம் செய்யாது, அன்புக்கு ஈடு இந்த உலகில் ஏதும் கிடையாது, காற்றுக்கு இன்னும் மாற்று வராததுமாதிரி அன்புக்கு மாற்று எங்கும் எப்போதும் கிடையாது.இனிய குடும்பங்கள்'வாட்ஸ் ஆப்'களில் மட்டுமா! வாழ்க்கையிலும் குழுக்களாகவல்லவா நாம் இயங்குகிறோம்!

சொல்லுக்குள் முள்ளை வைத்த குடும்பங்கள் உள்ளுக்குள் வருத்தத்தோடல்லவா வாழும்! போட்டி போட்டு வாழ்வதற்குக் குடும்பம் ஒன்றும் பந்தயக்கூடமல்ல.அன்பை விதைக்கும் ஆனந்தக்கூடம்! உறவுகளின் வரவுகளில்தான் குடும்பத்தின் மகிழ்ச்சி குடியிருக்கிறது. வாடிப்போகாத முகங்கள், தேடிச்செல்லாத பாதங்கள், சொத்துக்கு மட்டுமே சொந்தம் கொண்டாடும் சொந்தங்கள். உறவாயில்லை பரவாயில்லை என்று சொல்லும் கூட்டம், இவையெல்லாம் இனியும் நடக்க வேண்டாம்.

குடும்பத்தின் சந்தோஷம் என்பது சங்கடங்களையும் சவால்களையும் இணைந்து எதிர் கொள்வதில் தான் இருக்கிறது என்று புரிந்தவர்கள் வெற்றிகரமாகக் குடும்பம் நடத்துகிறார்கள். உருகத் தொடங்குகிற ஐஸ்கிரீமையும் வேகமாகப் பருகத்தொடங்குகிற குட்டி குழந்தைகளை போல் மனமிருந்தால் எந்தத் துன்பமும் நம்மை அணுகப்போவதில்லை. வனங்களைப் போல் நம் மனமும் மாறக்கூடாது, நம் தினங்களை ரணங்களால் மூடக்கூடாது.

கைதவறி விழுகிற கண்ணாடிக் குவளைகள் அல்ல நம் குடும்பங்கள், பட்டை தீட்ட தீட்ட ஜொலிக்கிற உறுதியான வைரங்கள் நம் குடும்பம் என்று உலகுக்கு உணர்த்துவோம். அப்படி இருந்தால், திருமலையில் திருவேங்கடமுடையான் அருள்பாலிக்கும் ஆலயம் மட்டுமன்றி, உள்ளம் பூரிக்கும் நம் இல்லமும் ஆனந்த நிலையம்தான்.
-முனைவர் சவுந்தர மகாதேவன்
தமிழ்த்துறைத் தலைவர்
சதக்கத்துல்லாஹ்அப்பா கல்லுாரி
திருநெல்வேலி
99521 40275

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sakthivel Ponmalai - CHENNAI,இந்தியா
15-மே-201919:47:10 IST Report Abuse
Sakthivel Ponmalai அருமையான பதிவு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X