தமிழ்நாடு

போலி சுகாதார சான்று! பள்ளி கல்லூரி விடுதிகளுக்கு தாராள வினியோகம்

Added : மே 15, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை மாநகராட்சியை அதிர வைத்த, போலி பிறப்பு, இறப்பு சான்றிதழ் விவகாரம், போலி சான்றிதழ் கொடுத்து, மாநகராட்சி பள்ளியில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் விவகாரம் போன்று, பள்ளி, கல்லுாரி, தங்கும் விடுதிகளுக்கு, மாநகராட்சியால் வழங்கப்பட்டதாக, போலி சுகாதார சான்றிதழ் அச்சடித்து வினியோகம் செய்யப்பட்ட விவகாரம், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தில்
 போலி சுகாதார சான்று! பள்ளி கல்லூரி விடுதிகளுக்கு தாராள வினியோகம்

சென்னை மாநகராட்சியை அதிர வைத்த, போலி பிறப்பு, இறப்பு சான்றிதழ் விவகாரம், போலி சான்றிதழ் கொடுத்து, மாநகராட்சி பள்ளியில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் விவகாரம் போன்று, பள்ளி, கல்லுாரி, தங்கும் விடுதிகளுக்கு, மாநகராட்சியால் வழங்கப்பட்டதாக, போலி சுகாதார சான்றிதழ் அச்சடித்து வினியோகம் செய்யப்பட்ட விவகாரம், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய, மாநகராட்சி அதிகாரிகளை கண்டறிய, விஜிலென்ஸ் விசாரணை நடந்து வருகிறது.

பள்ளி, கல்லுாரி மற்றும் தங்கும் விடுதிகள், ஒவ்வொரு ஆண்டும், பொது சுகாதார துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம், சுகாதார சான்று பெற வேண்டும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட நிறுவனங்கள், மாநகராட்சி சுகாதாரத்துறையிடம், சான்று பெற விண்ணப்பிக்க வேண்டும்.உறுதி தன்மைவார்டு சுகாதார ஆய்வாளர், சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் உள்ள உணவருந்தும் இடம், கழிப்பறை, குடிநீர் தொட்டி உள்ளிட்ட கட்டமைப்புகளை ஆய்வு செய்வார்.அதோடு, தீயணைப்பு நிலைய சான்று மற்றும் கட்டடத்தின் உறுதித்தன்மை சான்றை ஆய்வு செய்து, சுகாதார சான்று வழங்குவார்.

இந்த சுகாதார சான்று வழங்க, விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிறுவனங்கள், புரோக்கர்கள் வாயிலாக, லஞ்சம் கொடுத்து, சான்றிதழ் பெறுகின்றனர்.அவ்வாறு, குறுக்கு வழியில் சான்றிதழ் பெறுவோருக்கு, மாநகராட்சி அதிகாரிகளும், புரோக்கர்களும் கூட்டணி வைத்து, அதிகாரிகளின் கையெழுத்தையே போலியாக போட்டு, சான்றிதழ் வழங்கி இருப்பது, தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆவணங்கள்அடையாறு மண்டலத்தில் இருந்து, இந்த போலி சுகாதார சான்று விவகாரம் வெளியாகி, மாநகராட்சி விஜிலென்ஸ் விசாரணை வரை சென்றுள்ளது.திருவான்மியூர், சைதாப்பேட்டை, பெருங்குடி, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லுாரி, விடுதிகளுக்கு, 76 போலி சுகாதார சான்று வழங்கியது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சுகாதார ஆய்வாளர், துப்புரவு அதிகாரி, மண்டல சுகாதார அதிகாரி ஆகியோரின், கையெழுத்தை போன்று போலியாக கையெழுத்திட்டு, எந்த ஆவணங்களையும் பரிசீலனை செய்யாமல், போலி சான்று வழங்கி உள்ளனர்.போலி சான்றை, மண்டலத்தில் உள்ள சில சுகாதார அதிகாரிகள் சேர்ந்து தயாரித்தது, மாநகராட்சி விஜிலென்ஸ் அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அடையாறு மண்டலம்

இது தொடர்பாக, சில நாட்களுக்கு முன், அடையாறு மண்டல சுகாதார அதிகாரி, துப்புரவு அதிகாரி மற்றும் சுகாதார ஆய்வாளர்களிடம், விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.மேலும், பட்டாபிராம், பாஸ்கர் என்ற புரோக்கர்கள் வாயிலாக, போலி சான்றுகள், நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதும், விசாரணையில் தெரியவந்துள்ளது.இவர்களுக்கும், சுகாதார அதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பது, தற்போது தெரிய வந்துஉள்ளது.

சந்தேகம்

பள்ளி, கல்லுாரி, விடுதிகளில் இருந்து, தொற்று நோய் பரவாமல் தடுக்க வேண்டி, இடத்தை சுகாதாரமாக வைத்து இருப்பதை உறுதி செய்து, சுகாதார சான்று வழங்கப்படுகிறது.ஆனால், போலி சுகாதார சான்று வழங்கியதன் மூலம், சென்னையில் உள்ள கல்வி நிறுவனங்கள், விடுதிகளின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அதோடு, அத்துறை அதிகாரிகளின் செயல் மீதும், பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

மாநகராட்சி, உயர் அதிகாரிகள் தலையிட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், 'ஆன்லைன்' வழியாக சுகாதார சான்று வழங்க, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.போலி சான்றிதழ் சம்பந்தமான விசாரணை, தீவிரமாக நடக்கிறது. தரகர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், நிறுவனங்களில் இருந்து போலி சுகாதார சான்றுகளை பறிமுதல் செய்துள்ளோம். அதில் உள்ள, கையெழுத்துகளை ஆய்வுக்கு உட்படுத்த உள்ளோம்.

விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணையில், போலி சான்றிதழில், யாருக்கெல்லாம் தொடர்புள்ளதோ, அவர்கள் எல்லாரும் சிக்குவர். புரோக்கர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சுகாதார துறை உயர் அதிகாரிகள்

வெளிச்சத்திற்கு வந்தது எப்படி?

அடையாறு மண்டலம், 182வது வார்டு துப்புரவு அதிகாரி, சிவகுமார், தேர்தல் நேரத்தில், திருவான்மியூரில் உள்ள, ஒரு பெண்கள் விடுதியை ஆய்வு செய்து, சுகாதார சான்றிதழை வாங்கி பார்த்துள்ளார். அவை, 178வது வார்டு சுகாதார ஆய்வாளர், அதே வார்டு துப்புரவு அதிகாரி மற்றும் மண்டல சுகாதார அதிகாரி ஆகியோர் கையெழுத்திட்ட, போலி சுகாதார சான்று என, தெரிய வந்தது.

அதேபோன்று, பெருங்குடி மண்டல சுகாதார ஆய்வாளர்கள் ஆய்விலும், போலி சான்று வழங்கியது தெரிய வந்தது. இவர்கள் மூலம், போலி சுகாதார சான்று வழங்கியது, வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சிக்க போவது யார்?

அனைத்து, போலி சுகாதார சான்றுகளிலும், 178வது வார்டு சுகாதார ஆய்வாளர் கையெழுத்து போடப்பட்டுள்ளது. சான்றுகளில் உள்ள தேதியில், 178வது வார்டில், வைரம் என்ற பெண் சுகாதார ஆய்வாளர் பணியில் இருந்துள்ளார். 'போலி சான்று வழங்கியதில், தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை' என, அவர், சுகாதார உயர் அதிகாரிகள் மற்றும் விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். மேலும், இடைத்தரகர் பட்டாபிராமிடம், சுகாதாரத்துறை விசாரணை நடத்தி உள்ளது. 179வது வார்டு சுகாதார ஆய்வாளர், குணசீலன், போலி சான்று வழங்க உதவியதாக, பட்டாபிராம் கடிதம் எழுதி கொடுத்துள்ளார்.
போலியாக தயாரித்த நபர் சிக்காமல் இருக்கவும், வைரத்தை சிக்க வைக்கவும், போலி சான்று தயாரித்துள்ளதாக, சக சுகாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.மூடி மறைக்க முயற்சி!போலி சுகாதார சான்று வழங்கிய சம்பவம், லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு முன், மண்டல சுகாதார அதிகாரி, உஷா கவனத்திற்கு வந்துள்ளது. அவர், சுகாதார ஆய்வாளர்கள் வைரம், குணசீலன் மற்றும் துப்புரவு அதிகாரி, சிவகுமார், சக்தி உமைபாலன் ஆகியோரிடம் விசாரித்துள்ளார்.

உயர் அதிகாரிகள், தேர்தல் பணியில் தீவிரமாக இருந்ததால், அவர்களுக்கு தெரியாமல், மண்டல அளவில், போலி சான்றிதழ் பிரச்னையை முடித்து கொள்ளலாம் என, திட்டமிட்டு உள்ளனர். ஆனால், போலி சான்றுக்கு, தொடர்பில்லாத சில சுகாதார அதிகாரிகள் மீது பழி விழுந்துள்ளது. அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தான், தற்போது விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.7,000 ரூபாய்!ஒரு போலி சுகாதார சான்றுக்கு, 7,000 ரூபாய், சுகாதாரத் துறையினர் பெற்றுள்ளனர். தரகர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம், 10 - 15 ஆயிரம் ரூபாய், வாங்கி உள்ளனர். தரகர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மாநகராட்சியில் இது ஒன்றும் புதிதல்ல!

சென்னை மாநகராட்சியில், போலி சான்றிதழ் விவகாரம், இதற்கு முன் பலமுறை அம்பலமாகி உள்ளது. வெளிநாடு செல்லும் அதிகாரிகள், போலி சான்றிதழ் மூலம் பாஸ்போர்ட் பெற்றுச் சென்ற விவகாரத்தை, நம் நாளிதழ் அம்பலப்படுத்தியது. அடுத்ததாக, மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், போலி சான்றிதழ் மூலம், பணியில் சேர்ந்த விவகாரம், நம் நாளிதழ் மூலம் அம்பலப்படுத்தப்பட்டது.

இதில், ஒன்பது ஆசிரியர்கள், பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு அடுத்ததாக, போலி பிறப்பு, இறப்பு சான்றிதழ் விவகாரமும், நம் நாளிதழ் மூலம், வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதில், இரண்டு சுகாதார ஆய்வாளர்கள், பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த வரிசையில் தான், தற்போது, போலி சுகாதார சான்றிதழ் இடம் பெற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
15-மே-201913:59:56 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan 1971 க்கு பிறகு சேர்ந்த அரசு ஊழியர்களின் கல்வி சான்றிதழ்களை சரி பார்த்தால் நிறைய பேர் மாட்டுவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X