மாவீரர்
நேதாஜியின் புகழ் பரப்புவதை ஒன்றையே தன் லட்சியமாகக் கொண்ட மதுரையைச்
சேர்ந்த ஜெய்ஹிந்த் சுவாமிநாதனுக்கு நாளை ஐம்பதாவது பிறந்த நாள்.

நான்
வாழ்க்கையில் ஏதாவது உருப்படியாக எழுதியிருக்கிறேன் என்றால் அது
நேதாஜியின் படையில் இருந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் வீரத்தையும்
தீரத்தையும் பற்றி எழுதியதுதான் அதற்கு உறுதுணையாகவும் உதவியாகவும்
இருந்தவர் சுவாமிநாதன்தான்.

நம் நாடு சுதந்திரம் பெற
உழைத்தவர்கள், உதிரம்சிந்தியவர்கள் பலர் இன்னும் வெளிச்சத்தி்ற்கு
வரவேயில்லை அவர்களை எல்லாம் தேடிப்பிடித்து ஊடக வெளிச்சத்திற்கு
கொண்டுவரும் அரும்பணியைச் செய்துவருபவரும் சுவாமிநாதன்தான்.
உதாரணத்திற்கு
சொல்லவேண்டும் என்றால் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் பக்கம் உள்ள
தும்படைக்கா கோட்டை என்ற குக்கிராமத்தில் பிறந்து நேதாஜியின் ஒற்றர்
படையில் சேர்ந்து பின் பிரிட்டிஷாரால் 18 வயதிலேயே துாக்கிலிடப்பட்ட
தென்னாட்டு சிங்கம் ராமுவைப்பற்றி முதன் முதலில் என்னை எழுதவைத்தவரே
சுவாமிநாதன்தான்.
ராமு படித்த பள்ளிக்கு வருடம் தவறாது
சென்று அங்குள்ள பள்ளி மாணவ மாணவியருக்கு தன்னால் முடிந்த அளவிற்கு பேனா
நோட்டு புத்தகம் வழங்கி ராமுவைப்பற்றியும் அவரது வீரத்தைப் பற்றியும் அந்த
பிஞ்சுகளின் நெஞ்சில் விதைத்துவருபவர்.
நேதாஜியின்
படையில் இருந்தவர்கள் என்று தெரிந்தால் போதும் அவர்கள் எந்த மூலையில்
இருந்தாலும் தேடிப்பிடித்து ஆராதிப்பவர்,எனக்கு அறிமுகம் செய்துவைப்பவர்.
தேசபக்தி
நிரம்பப் பெற்ற சுவாமிநாதன் அதை நேதாஜியின் வழியாக கொண்டு செல்லும்
எண்ணத்துடன் தேசிய வலிமை என்ற மாத இதழை நடத்தினார்.இந்த பத்திரிகைக்கு
இவர்தான் ஆசிரியர் இவர்தான் படைப்பாளி இவர்தான் அச்சிடுபவர் இவர்தான் காலை
நேர ரயில் பயணிகளியிடம் ஒடிஒடி விற்பவர்.
பலரது
பாராட்டையும் ஆரோக்கியமான விமர்சனத்தையும் பெற்ற இவரது பத்திரிகைக்கு
தோள் கொடுக்கவும் ,பொருளாதாரத்தால் துவண்டு போன நேரத்தில் இவரை
துாக்கிப்பிடிக்கவும் ஆள் இல்லாத காரணத்தால் இதழ் நின்று
போய்விட்டது
வெள்ளை உடையுடனும், உள்ளத்துடனும் மதுரையை வலம்வரும் இவரைத் தெரிந்தவர்கள் யார் பார்த்தாலும் சரி அல்லது இவருக்கு தெரிந்தவர்கள் யாரைப் பாா்த்தாலும் சரி சிரித்த முகத்துடன்‛ ஜெய்ஹிந்த்' என்று சொல்லி ராணுவ சல்யூட் வைப்பார் இதன் காரணமாக ஜெய்ஹிந்த் சுவாமிநாதன் என்பதே இவரது அடையாளமாகிப்போனது.
கடந்த முப்பது
ஆண்டுகளாக மதுரையில் உள்ள நேதாஜி சிலை முன்பு அவரது பிறந்த நாள்,சுதந்திர
தினம்,குடியரசு தினம் போன்ற நாட்களை விமரிசையாக கொண்டாடி
வருகிறார்.கொண்டாட்டம் என்றால் இளைஞர்களை கொண்டு ரத்ததானம்
நடத்துதல்,நேதாஜி படைவீரர்களையும்,தியாகிகளையும் கவுரவித்தல்,தேசபக்தி
தொடர்பான நுால் வெளியிடுதல்,அனைவருக்கும் சுதந்திர தின கொடியினை
குத்திவிடுதல் போன்றவைகள்தான்.
சென்னை கிறி்ஸ்டியன்
கல்லுாரியில் எம்.ஏ.,முடித்த கையோடு பல்வேறு வேலைகள் இவரை விரும்பி அழைத்த
போதும் இவரது விருப்பம் எல்லாம் நேதாஜி புகழ் பாடுவதிலேயே இருந்துவிட்டது
இதற்கு காரணம் விமானப்படையில் இருந்த இவரது தந்தை ஊட்டிய வீரமும்,
அறிமுகப்படுத்திய நேதாஜி படை வீரர்களும்தான்.
பொது
புத்தியோடும் பொருளாதார புத்தியோடும் பார்த்தால் சுவாமிநாதன் கையில்,
பையில் காசில்லாத வெறும் ஆள்தான் ஆனால் கொண்ட லட்சியத்திற்காக வாழ்வதில்
இவரே பெரும் ஆள்.லட்சங்களை சம்பாதிக்கும் சராசரி வாழ்க்கையை விட நேதாஜியின்
புகழ் பரப்பும் லட்சிய வாழ்க்கையே மேலானது என்ற உயர்ந்த எண்ணத்தோடு
வாழும் சுவாமிநாதனைப் பாராட்ட நினைப்பவர்களும்,உங்கள் பகுதியில் உள்ள
நேதாஜி படையில் பணியாற்றி வெளியே தெரியாமல் இருக்கும் வீரர்கள்,
வீராங்கனைகளைப் பற்றி தகவல் சொல்லவும் அவரது இந்த எண்ணுக்கு போன்
செய்யவும்:99943 35501.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE