பாலியா : இந்தியாவில் பிரச்னை வரும்போதெல்லாம் இத்தாலிக்கு செல்லும் ராகுல், ஓட்டு கேட்டும் இத்தாலிக்கே போகட்டும் என, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

இந்தியாவில் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்துவருகிறது. 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், கடைசி கட்ட ஓட்டுப்பதிவு, மே 19ம் தேதி நடக்க இருக்கிறது. மொத்தமுள்ள 59 தொகுதிகளில் உ.பி.,யில் கோரக்பூர், மகாராஜ்கன்ச், குஷி நகர், டியோரியா, பன்ஸ்கான், கோஷி, சாலம்பூர், பாலியா, வாரணாசி, காசிம்பூர், சந்தவுலி, மிர்சாபூர் மற்றும் ராபர்ட்ஸ்கான் ஆகிய 13 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.
பாலியா நகரில் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: இந்தியாவில் பிரச்னை ஏற்படும் போதெல்லாம் காங்கிரஸ் தலைவர் ராகுல், இத்தாலிக்கு சென்று விடுகிறார். இந்திய மக்களுக்கு ராகுல், பிரியங்கா ஏதேனும் நல்லது செய்ய நினைத்தால், அவர்கள் இருவரும் இத்தாலிக்கு சென்று விடுவது நல்லது. அங்கு சென்று அவர்கள் ஓட்டு சேகரிக்கலாம்.

ராணுவ ஹெலிகாப்டர் தொடர்பான ஊழல் வழக்குகளிலும் காங்., பல முறைகேடுகளை செய்துள்ளது. இடைத்தரகரான கிறிஸ்டியன் மைக்கேலை வழக்கிலிருந்து தப்பவும், அவர் இத்தாலிக்கு செல்லவும் உதவியாக இருந்ததே காங்கிரஸ் கட்சி தான். இவ்வாறு யோகி பேசினார்.