பொது செய்தி

தமிழ்நாடு

சுத்தமா இல்லை! சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதிகள்... கண்டுகொள்ளாத துறைகளால் மக்கள் அலறல்

Added : மே 15, 2019
Advertisement
 சுத்தமா இல்லை! சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதிகள்... கண்டுகொள்ளாத துறைகளால் மக்கள் அலறல்

உடுமலை:திருமூர்த்திமலை, அமராவதி போன்ற சுற்றுலா தலங்களில், பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் கூட மேம்படுத்தாததால், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைகின்றனர்.
உடுமலை அருகே, மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள, திருமூர்த்தி மற்றும் அமராவதி அணை முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. பஞ்சலிங்கம் அருவி, அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை, வண்ண மீன் பூங்கா ஆகியவை திருமூர்த்திமலையில் அமைந்துள்ளன. இதே போல், அணைப்பூங்கா, முதலைப்பண்ணை, மூங்கில் பண்ணை போன்றவை அமராவதி அணைப்பகுதியில் உள்ளன.
கிடப்பில் திட்டங்கள்
திருமூர்த்திமலையில் சுற்றுலா வளர்ச்சிக்கான திட்டங்கள் மேம்படுத்தப்படும் என, அரசால் நடத்தப்படும் ஒவ்வொரு ஆடிப்பெருந்திருவிழாவிலும், அறிவிக்கப்படும். அமைச்சர்கள், அதிகாரிகள் பல்வேறு திட்டங்கள் உடனடியாக நிறைவேற்றப்படும் என, அவ்விழா மேடையில் பேசுவது வழக்கம்.ஆனால், இதுவரை எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. குறிப்பாக, திருமூர்த்தி அணை கரையில், பூங்கா அமைக்க பொதுப்பணித்துறை சார்பில் கருத்துரு அனுப்பி, பல ஆண்டுகளாகியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.அணையில் பல ஆண்டுகளாக படகு சவாரியும் முடங்கியுள்ளது. பஞ்சலிங்கம் அருவியில், கழிப்பிடம், உடை மாற்றும் அறை உட்பட வசதிகள் இல்லாமல், சுற்றுலா வருவோர் பாதிப்படைகின்றனர். அருகிலுள்ள ஆழியாறு அணையில், பூங்கா மூலம் அதிக வருவாய் கிடைத்து வரும் நிலையில், திருமூர்த்தி அணைப்பகுதி மட்டும், வெறிச்சோடி இருப்பது தொடர்கதையாக உள்ளது.
அச்சச்சோ அமராவதி!
கேரளாவில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான மூணாறுக்கு உடுமலையில் இருந்து செல்லும் வழியில் அமராவதி அணை அமைந்துள்ளது. எனவே, பல்வேறு பகுதிகளில் இருந்து மூணாறுக்கு வருபவர்கள் அமராவதி அணைக்கும் செல்கின்றனர்.ஆனால், பராமரிப்பில்லாமல், பயமுறுத்தும் வகையில், அணைப்பூங்கா காணப்படுகிறது. 'பூங்காவை புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவில் துவங்கும்,' என்பதை மட்டுமே பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.பல ஆண்டுகளாகியும், பணிகள் நடக்காமல், சுற்றுலா வருபவர்களின் நிலை மட்டும் பரிதாபமாகி விடுகிறது. இந்த இரண்டு சுற்றுலா தலங்களிலும், தேவையான அறிவிப்பு பலகைகள் கூட வைக்கப்படவில்லை. மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரத்தில், வனத்தின் சாரலில், அமைந்துள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்தினால், அரசுக்கு வருவாய் கிடைப்பதுடன், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வையும், சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படுத்தும்.இந்தாண்டு கோடை விடுமுறை சீசன் துவங்கும் முன்பே, பல கோரிக்கைகள் விடுத்தும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என, இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.அசத்தும் கேரள வனத்துறைமேற்குத்தொடர்ச்சி மலையில், அமைந்துள்ள மறையூர், மூணாறு போன்ற சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்க, கேரள அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதன்படி, உடுமலை பகுதியில், சின்னாறு வன உயிரின காப்பகத்தில், உள்ள அரிய வகை விலங்குகள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல் பலகையை, ஆங்காங்கே வைத்து, சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றனர்.சுற்றுலா தலங்களில், மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பும் அளித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வருகையால், அம்மாநில அரசுக்கு வருவாயும், மலைவாழ் மக்களுக்கு நிலையான வேலைவாய்ப்பும் கிடைப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X