பொது செய்தி

தமிழ்நாடு

திண்டாட்டம்! சுற்றுலா மையங்களில் பயணிகள்...அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதி

Added : மே 16, 2019
Advertisement

குன்னுார்:ஊட்டி, குன்னுார் போன்ற முக்கிய சுற்றுலா மையங்களில்,போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், பயணிகள் அவதிப்படும் நிலை தொடர்கிறது.
நீலகிரிக்கு ஆண்டுதோறும் வரும், 35 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். அதில், கோடை சீசன் காலகட்டங்களில் மட்டும், 15 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த கால கட்டத்தில், ஊட்டி, குன்னுாருக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் என்பது போதிய அளவில் இல்லை.குறிப்பாக, சுற்றுலா மையங்களில் இருக்க வேண்டிய, குடிநீர், போதிய கழிப்பிட வசதிகள் இல்லை. தமிழகத்தின் பிற மாவட்டங்கள்; கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து, நீண்ட துார பயணத்துக்கு பின்பு, ஊட்டி, குன்னுார் வரும் சுற்றுலா பயணிகள், தங்கள் வாகனங்களை 'பார்க்கிங்' செய்ய போதிய இடமில்லை.ஊட்டியின் புறநகர் பகுதிகளில் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்பட்டாலும், அங்கு அவர்கள் முதலில் தேடுவது, கழிப்பிட வசதிகளை தான். ஆனால், அங்கு அத்தகைய வசதிகள் இல்லாத காரணத்தால், குறிப்பாக, பெண்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். பெரும்பாலான பயணிகள் திறந்த வெளிகளை கழிப்பிடமாக பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.அதற்கு பின்பு, ஊட்டி, குன்னுாரில் உள்ள முக்கிய சுற்றுலா மையங்களுக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் செல்லும் போது, அங்குள்ள சில கழிவறைகளில் அனைவரும் செல்ல முடியாத சூழல் உள்ளது. சில கட்டண கழிப்பிடங்களில், 5 முதல், 10 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதால், நடுத்தர வர்க்க பயணிகள் அதிருப்தி அடைகின்றனர். இதனால், மகிழ்ச்சியான சுற்றுலா பயணம் திருப்தி இல்லாமல் போகும் சூழ்நிலை உருவாகிறது.இதை தவிர, பல சுற்றுலா மையங்களில், நகராட்சியின் சார்பில் ஏலம் விடப்பட்ட, 'பார்க்கிங்' பகுதிகளில் கட்டணம் குறித்த போர்டு வைக்கப்படவில்லை. இதனால், சுற்றுலா பயணிகளிடம் நிர்ணயித்த தொகையை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிலை தொடர்கிறது. போலீசாரும்; நகராட்சி அதிகாரிகளும் இதனை கண்டு கொள்வதில்லை.
உணவு விலை 'விர்ர்ர்'
மாவட்டத்தில் உள்ள பல உணவகங்களில், உணவுக்கு கூடுதல் விலை நிர்ணயித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் விருப்ப உணவுகளை உட்கொள்ள முடியாமல் திரும்பும் நிலை ஏற்படுகிறது. பயணிகளுக்கு துாய்மையான வெந்நீர் வழங்க மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட்டும், பல ஓட்டல்களில், சுகாதாரமற்ற தண்ணீர் வழங்கப்படுகிறது. இதனை உணவு துறை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.மக்கள் சேவை மைய ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில், ''நீலகிரியில் சுற்றுலாவை மேம்படுத்த உருவாக்கப்படும் திட்டங்கள் அறிவிப்புடன் நின்று போகின்றன. ''ஆட்சிகள் மாறும் போது, 'பார்க்கிங்' உட்பட உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து வெளியாகும் அறிவிப்புகளை செயல்படுத்த, மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. ''வரும் ஆண்டிலாவது, இத்தகைய பிரச்னைகளுக்கு தீர்வு காண, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
விடுதிகளில் கட்டணம் அதிகம்
அனுமதியில்லாத காட்டேஜ்கள், தங்கும் விடுதிகள் புற்றீசல் போல் பெருகியுள்ள நிலையில், பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் போது, கட்டணம் பல மடங்கு உயர்வதால், பல சுற்றுலா பயணிகள் வாகனங்களில் உறங்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும், தங்களின் பயண திட்டங்களை ஓரே நாளில் முடித்து ஊர் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது போன்ற அடிப்படை பிரச்னைகளுக்கு இது வரை, மாவட்ட நிர்வாக அதிகாரிகள்; கோடை சீசன் குழுவினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X