ஏழு கட்டங்களாக தேர்தலை சந்திக்கும் பீஹாரின், 40 தொகுதிகளில், நாளந்தாவில், 19ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. 21 லட்சம் வாக்காளர்கள் உள்ள இந்த தொகுதியில், 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
உலகின் முதல் பல்கலைக் கழகங்களில் பெருமை மிக்கதாக கருதப்படும், நாளந்தா பல்கலைக் கழகம், இங்கு தான் அமைந்திருந்தது. அதன் சிதிலங்கள் தான் இப்போதும் உள்ளன.புத்த பிரான் ஞானோதயம் பெற்ற இந்த பகுதியில், சமதா கட்சி நிறுவனர், முன்னாள் மத்திய அமைச்சர், ஜார்ஜ் பெர்னாண்டஸ், மூன்று முறை, எம்.பி.,யாகிஉள்ளார்.கடந்த, 2004ல், இங்கிருந்து, நிதிஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும், சில மாதங்களிலேயே, முதல்வரானதும் அவர் ராஜினாமா செய்தார்.பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் தலைவருமான, நிதிஷ் குமாரின் சொந்த ஊர், இந்த தொகுதியில் தான் உள்ளது. அவர் சார்ந்துள்ள, குர்மி என்ற ஜாதியினர் மட்டும், இங்கு, ஐந்து லட்சம் பேர் உள்ளனர்.அவர் கட்சியைச் சேர்ந்த, கவுஸ்லேந்திர குமார், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, இரண்டு முறை அவர் வெற்றி பெற்றுள்ள நிலையில், 'ஹாட்ரிக்' சாதனை படைப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு, இந்த தொகுதி மக்கள், நிதிஷ் குமார் மீது அளப்பரிய நம்பிக்கை கொண்டுள்ளனர்.நிதிஷ் கட்சி வேட்பாளருக்கு போட்டியாக, பீஹார் முன்னாள் முதல்வர், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலைவர், ஜிதன் ராம் மஞ்சியின் ஆதரவு பெற்ற, அசோக் ஆஸாத், மெகாகத்பந்தன் வேட்பாளராக நிற்கிறார்.எனினும், நிதிஷ் குமாரின் ஆள், கவுஸ்லேந்திர குமாருக்கு தான், வெற்றி வாய்ப்பு அதிகம் என, கூறப்படுகிறது.- கன்ஹையா பெலாரி -சிறப்பு செய்தியாளர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE