கேளடி கண்மணி படத்தில் 'கற்பூர பொம்மை ஒன்று, கைவீசும் தென்றல் ஒன்று...,' துவங்கும் பாடலில்,'தாய் அன்பிற்கே ஈடேதம்மா, ஆகாயம்கூட அது போதாது, தாய் போல யார் வந்தாலுமே, உன் தாயைப் போலே அது ஆகாது...,'என தாய் அன்பின் மேன்மையை பதிவு செய்தவர் 'புதுக்கவிதை தாத்தா' கவிஞர் மு.மேத்தா.
அன்னையின் மேன்மையை உணர்த்தும் அவரது பதிவு...
உலகில் உதிக்கிற ஒவ்வொரு நாளும் அன்னையர் தினம்தான். முழுக்க அன்னையே உலகமாக இருந்த நாம், உலகை முழுமையாக புரிந்து கொள்ளும்போது, அன்னையை மறந்துவிட்டு, உலகின் சூழல்களில், உலகைப் பற்றிய கவலைகளில் ஈடுபடத்துவங்குகிறோம். எப்போதாவது தாயைப் பார்க்கிறபோது, நினைக்கிறபோது அவரை கொண்டாடுகிறோம்.
உலகில் எதையும் நாம் வெல்ல முடியும். ஆனால் ஒரு தாயின் இதயத்தை வெல்ல எந்த தனயனாலும், எத்தகைய தளகர்த்தர்களாலும் இயலாது. தாய்மொழி, தாய் நாடு, தாய் வீடு என மரியாதை சொற்களால் அன்னையை உலகம் கவுரவப்படுத்துகிறது. தாய்க்கு உண்மையான இடம், மரியாதை கொடுக்கிறோமா என வளர்ந்து பெரியவர்களான ஒவ்வொருவரும் இதயத்தில் எழுப்ப வேண்டிய கேள்வி. அனைத்துமாக இருந்த தாய், தாரம் வந்தபின் இரண்டாம் நிலைக்கு தள்ளப்படுகிறாள் என்பது இச்சமூகத்தில் பார்க்கிற உண்மை.
தாயின் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என்பதையே பாடலில் பதிவு செய்தேன். அன்னையர் தினம் என்பது தாய் தன்னை எப்படியெல்லாம் வளர்த்தாள், உருவாக்கினாள் என்பதை எண்ணிப் பார்க்கிற, அவரை கொண்டாடுகிற நாள். வீட்டின் மூலையில் பெட்டி, படுக்கை போல் ஒதுக்கிவைக்கிற பொருள் அல்ல தாய். எந்த நிலைக்கு நாம் உயர்ந்தாலும் முதல் நிலையில் நாம் வணங்க, ஆசீர்வாதம் பெறத்தக்கவர் தாய். அடுத்தது தந்தை. அடுத்தது நம்மை நம்பி வந்த மனைவி.
தாய் படிக்காதவளாக இருக்கலாம். ஆனால் உலகம் அன்பை தாயிடம்தான் படித்துக் கொள்கிறது. எனது தாய்க்கு நான் மூத்த மகன். எனது உலகமாக அவர் இருந்தார். அவர் பார்த்த முதல் உலகமாக நான் இருந்தேன். எனக்காக துன்பம், கோபம், குறைகளை பொருட்படுத்தாமல் அவர் அன்பு காட்டியது இயல்பானது. அந்த அன்புதான் கவிதை, கதை, எழுத்து, பேச்சு, உறவாக வளர்கிறது. இந்நாளில் எனது தாயையும், உலகில் உள்ள அனைத்து அன்னைகளையும் வணங்குகிறேன் என்றார்.
அன்பு பாராட்ட 94443-83232.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE