பொது செய்தி

தமிழ்நாடு

இளம்பெண்ணுக்கு முதுகு எலும்பு வளைவு நோய்; 11 மாதம் தொடர் சிகிச்சையில் குணப்படுத்தி சாதனை

Updated : மே 17, 2019 | Added : மே 16, 2019
Advertisement
இளம்பெண்ணுக்கு முதுகு எலும்பு வளைவு நோய்; 11 மாதம் தொடர் சிகிச்சையில் குணப்படுத்தி சாதனை

சென்னை : முதுகு எலும்பு வளைவு நோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு, 11 மாதங்கள் தொடர் சிகிச்சை அளித்து குணமாக்கி, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், சாதனை படைத்துள்ளனர்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் திவ்யபாரதி, 19. இவர், 2017 டிசம்பர் முதல், முதுகு எலும்பு வளைவு எனப்படும், நரம்பு நார்க்கட்டி நோயால் பாதிக்கப்பட்டார்.நடக்க முடியாமல், படுத்த படுக்கையாக, கால்களில் உணர்வற்று இருந்தார். அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும், நோய் குணமாக வில்லை.கடந்த, 2018, பிப்., 17-ம் தேதி, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த, முட நீக்கியல் துறை மருத்துவர்கள், முதுகு எலும்பு வளைவில், வலி உணர்வுஇல்லாமல் இருப்பதை கண்டறிந்தனர். அறுவை சிகிச்சை செய்து, எலும்பு வளைவை சீரமைக்க, மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

முடநீக்கியல் துறைத் தலைவர், இஸ்மாயில், முதுகெலும்பு அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர், நல்லி யுவராஜ் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர், 2018, ஜூன் 21 முதல், திவ்யபாரதிக்கு, படிப்படியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.முதற்கட்டமாக, தலையில் பொருத்தக்கூடிய வளையம் போன்ற ஒரு கவசம், அவருக்கு பொருத்தப்பட்டது.இந்த கவசம் மூலம், நாள் ஒன்றுக்கு, 1 மில்லி மீட்டர் என, ஆறு வாரங்கள் வரை, முதுகு எலும்பு நகர்த்தப்பட்டது.

பின், முதுகு எலும்பு மீண்டும் பழைய நிலைக்கு செல்லாமல் இருக்க, அறுவை சிகிச்சை மூலம், திருகாணி மற்றும் கம்பி பொருத்தப்பட்டது. டிச., 11ம் தேதி, திவ்யபாரதி மெல்ல நடக்க ஆரம்பித்தார். தற்போது பூரணமாக குணமடைந்துள்ளார்.இது குறித்து, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர், ஜெயந்தி கூறியதாவது:மரபு குறைபாட்டில், நரம்பு நார்க்கட்டி நோய் ஏற்படுகிறது. இந்நோய் பாதித்தவர்களுக்கு, நரம்பு மண்டலமும், எலும்புகளும் அதிகம் பாதிக்கும்.

முதுகு எலும்புகளில் வளைவுகள் உண்டாகும். திவ்யபாரதி, 11 மாதங்கள் மருத்துவமனையில் தங்கி இருந்து, சிகிச்சை பெற்றுள்ளார். தற்போது, நல்ல நிலையில் உள்ளார்.தனியார் மருத்துவமனையில், இந்த சிகிச்சை மேற்கொள்ள, 20 - 22 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அரசு மருத்துவமனையில், முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், இந்த சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.

தயாராகிறது குறும்படம்!
ராஜிவ் காந்தி மருத்துவமனை, முதுகெலும்பு அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர், நல்லி யுவராஜ் கூறியதாவது:சாலை விபத்து, கட்டட பணி, மரத்தில் இருந்து கீழே விழுதல் என, பல்வேறு விபத்துகளில், பொதுமக்களுக்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்படுகிறது. அவ்வாறு பாதிக்கப்படுபவர்களை, எவ்வாறு மருத்துவமனைக்கு கொண்டு செல்வது என்பது குறித்த விழிப்புணர்வை, பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில், குறும்படங்கள் தயாரிக்கும் பணி, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் விறுவிறுப்பாக நடக்கிறது.கை, கால்களில் முறிவுகள் ஏற்பட்டால், அதை சரி செய்ய முடியும். தண்டுவடம் பாதிக்கப்பட்டால், அதற்கு சிகிச்சையே கிடையாது.இந்த விளம்பரங்கள், தொலைக்காட்சி, திரையரங்குகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில், விரைவில் திரையிடப்பட உள்ளன.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X