பாலகுமாரனுக்கு ஆராதனை

Updated : மே 17, 2019 | Added : மே 17, 2019
Advertisement

சென்னை வாணி மகால் அரங்கம் நிரம்பிவழிந்தது.

மக்கள் உட்காரக்கூட இடமில்லாமல் பக்கவாட்டுகளிலும் படிக்கட்டுகளிலும் நின்று கொண்டு இருந்தனர்.மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனுக்கு முதலாம் ஆண்டு நினைவு நாள்.இதனை நினைவு நாள் என்று சொல்லி கனத்த சோகத்திற்கு உள்ளாக்கிவிடாமல் ஆராதனை விழா என்று சொல்லி அவரது நினைவுகளை அவருக்கு பிரியமான வாசகர்களுடன் பாசமாக பகிர்ந்து கொண்டாடும் விழாவாக்கிவிட்டனர்.


வந்தவர்கள் அனைவருக்கும் பாலகுமாரன் படம் போட்ட ஒரு துணிப்பை இலவசமாக வழங்கப்பட்டது, அதில் தமிழத்தின் முக்கிய கோயில்களின் பிரசாதங்கள் இருந்தது மேலும் ‛அய்யனின் அமர ஜீவிதங்கள்' மற்றும் ‛பாலகுமாரன் நினைவு தடங்கள்' என்ற இரண்டு நுால்கள் இருந்தன.உண்மையிலேயே இது வந்திருந்தவர்களுக்கு ஒரு பெரிய பொக்கிஷம்தான்.


இந்த விழாவினை இணைந்து நடத்திய மயிலை யோகிராம் சுரத்குமார் சத்சங்கத்தின் சுந்தர் அவ்வளவு பெரிய கூட்டத்தில் என்ன அடையாளம் கண்டு இந்த பொக்கிஷத்தை என்னிடமும் சேர்ப்பித்தார் அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

ஒ.எஸ்.அருண் குழுவினரின் பாடல்களோடு நிகழ்ச்சி துவங்கியது.மழைப்பாட்டு நிறைய கைதட்டல் வாங்கியது.எழுத்தாளரைக் கொண்டாடும் இந்த விழாவில் வளர்ந்து வரும் இன்னோரு எழுத்தாளரை பாராட்டி மகிழ்ந்தனர்.நரன் என்ற அந்த எழுத்தாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் பாராட்டுப் பத்திரமும் வழங்கி கவுரவித்தனர்.

இந்த விழாவில் பேச்சாளர் பாரதிபாஸ்கர், பாஜக.,இல.கணேசன், உள்ளீட்டோர் பங்குபெற்று பாலகுமாரனுடான தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

அவரைப்பற்றி பாரதி தமிழன் தயாரித்த ஆவண படமும்,பாலகுமாரனின் உதவியாளராக இருந்த ராம்ஜியின் பேச்சும்தான் விழாவின் ஹைலைட்.

படைப்பாளி சமூகத்திற்கு எந்த அளவிற்கு பிரயோசனமாக இருக்கவேண்டும் என்பதை ஆவணபடம் எளிமையாக எடுத்துச் சொன்னது.பாலக்குமாரனால் தங்கள் வாழ்க்கை எப்படி மேம்பட்டது என்பதை வாசகர்கள் பகிர்ந்து கொண்டவிதம் அருமை.

நிறைவாக பாலகுமாரனின் உதவியாளர் ராம்ஜி பேச்சு யாரும் எதிர்பாரதது எல்லோரையும் கண்ணீர் வரவைத்தது.

இடுப்பில் செருகிய கத்தியுடன் ஒரு ரவுடியாக பன்றி மேய்த்துக் கொண்டிருந்த நான் புத்தகம் படிப்பேன் என்றோஅது என் வாழ்க்கையை புரட்டிப் போடும் என்றோ கனவிலும் நினைத்துப் பார்த்தது இல்லை.

யாருய்யா அது பாலகுமாரன் அந்த ஆள் எழுதுனல ஒரு புத்தகம் வாங்கிட்டு வா என்று தெனவட்டாக வாங்கி படிக்க ஆரம்பித்தேன் படித்து முடித்தேன் என்னை ஏதோ செய்தது திரும்ப திரும்ப படிக்க ஆரம்பித்தேன் அதிலேயே அமிழ்ந்து போனேன்.பிறகு அவரது அனைத்து எழுத்துக்களையும் தேடி தேடி வாசிக்க ஆரம்பித்தேன்.

சீ..என்ன பிழைப்பு பிழைத்துக் கொண்டு இருக்கிறோம் என்று என்னையே நான் திட்டிக் கொண்டு தடம் புரண்டு சென்று கொண்டிருந்த வாழ்க்கையை மாற்றிக் கொண்டேன் மானசீகமாக அவரையே குருவாக ஏற்றுக்கொண்டேன்.

குருவை ஒரு நாள் பார்க்க முடிவு செய்து சென்னை வந்தேன் அவரை சந்தித்தேன் பரவசம் அடைந்தேன் என் அனுபவத்தை வாழ்க்கையை அவரிடம் இறக்கிவைத்துவிட்டு திரும்ப எத்தனித்தேன்.

எங்கே போகிறாய் என்னோட உதவியாளனாக இங்கேயே இருந்துவிடு என்றார் யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம், அவர் கேசட்டில் பதிந்து சொன்ன கதைகளையும்,காவியங்களையும் தட்டச்சு செய்தவன் என்ற முறையில் முதலில் அவரது படைப்புகளை படித்து அனுபவித்தவன் நான்.

அவர் ஒரு கடுமையான உழைப்பாளி ஒரு புத்தகத்தை முடித்ததும் அடுத்த புத்தகம் எழுதுவதுதான் அவருக்கு ஒய்வு. ஒரே நேரத்தில் சமூகம் புராணம் சினிமா என்று எல்லா தளத்திலும் எழுதும் வல்லமை இருந்தது.நேர்மையும் பாசமும் மிகுந்தவர்.யோகிராம் சுரத்குமாரை அவர் குருவாகக் கொண்டு இருந்தாா் அவரை இப்போது நாங்கள் பலர் குருவாகக் கொண்டுள்ளோம்.அவர் அவரது எழுத்துக்களின் மூலம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் நமக்கு ஆசீர்வாதம் செய்து கொண்டுதான் இருப்பார் என்று சொல்லி முடித்தார்.

இந்த விழாவினை பாலகுமாரனின் மகன் சூர்யா பாலகுமாரன் தலைமையில் அவரது மொத்த குடும்பத்தினரும் இணைந்து சிறப்புடன் நடத்தினர்.அதிலும் சூர்யா பாலகுமாரன் இனி வரும் பாலகுமாரனின் ஒவ்வொரு ஆராதனை விழாவும் எழுத்தாளர்களை கொண்டாடும் விழாவாகத்தான் இருக்கும் என்றார் மகிழ்ச்சியாகவும்,நெகிழ்ச்சியாகவும்..

-எல்.முருகராஜ்.

murugaraj@dinamalar.in


Advertisement


வாசகர் கருத்து

sivakumar - Qin Huang Dao,சீனா
18-ஜூலை-201913:56:58 IST Report Abuse
sivakumar எழுத்து சித்தர் அவர்களுக்கு இதை விட மிக சிறப்பாக யாராலும் குரு பூஜை (அஞ்சலி) விழா சிறப்பாக நடத்த முடியாது. எழுத்து சித்தர் அவர்கள் தமிழ் சமுதாயத்திற்கு அளித்த பங்களிப்பு மிகவும் மகத்தானது. ஸ்ரீ ராம்ஜி அவர்கள் கூறியது போல் அவரது எழுத்துக்கள் பலரது வாழ்க்கையை சீர் திருத்தி உள்ளது அதை நான் கண்கூடாக பார்த்து இருக்கிறேன். இனி ஒவ்வொரு ஆராதனை விழாவும் எழுத்தாளர்களை கொண்டாடும் விழாவாகத்தான் இருக்கும் என்று அன்னாரது மகன் (மகன் தந்தைக்கு ஆற்றும் சிறப்பு) அறிவித்து உள்ளது மனதை மிகவும் தொட்டது. இதுதான் நாம் எல்லோரும் அன்னாருக்கு செய்யும் பதில் மரியாதை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X