சென்னை, மே 18-'குளிர்சாதன வசதி உள்ள, ரயில் பெட்டிகளில், பெண் பயணியரிடம் நகைகள் திருடி, மலேஷியாவில், சொகுசு ஓட்டல் நடத்திவருகிறேன்' என, போலீசில் சிக்கிய கொள்ளையன், வாக்குமூலம் அளித்து உள்ளான்.தமிழகத்தில், ஓடும் ரயில்களில், பெண் பயணியர் உள்ளிட்டோரின் நகைகள் திருடு போயின. டிப் - டாப் ஆசாமி ஒருவன் மீது, போலீசாருக்கு சந்தேகம் வந்தது; அவனை பிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டது.கடந்த, 7ம் தேதி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த, ஷாகுல் ஹமீது, 37, என்பவனை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவன் ரயில் கொள்ளையன் என்பது தெரிந்தது. கைது செய்யப்பட்ட அவன், புழல் சிறையில் அடைக்கப்பட்டான். அவனை, 10 நாட்கள் காவலில் எடுத்து, ரயில்வே போலீசார் விசாரித்தனர்.போலீசாரிடம், கொள்ளையன் ஷாகுல் ஹமீது அளித்துள்ள வாக்குமூலம்:என் சொந்த ஊர், கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள, தொக்காவு. முதல் மனைவியை விவகாரத்து செய்து விட்டேன். அவர் துபாயில் உள்ளார். இரண்டாவது மனைவி, சஹானா. இரு குழந்தைகள் உள்ளனர்; மலேஷியாவில் வசிக்கிறோம்.எப்போதும், டிப் - டாப்பாக உடை அணிவேன்.தமிழ், ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் உட்பட, ஆறு மொழிகளில் சரளமாக பேசுவேன். மும்பையில், 2012ல், பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில், நாக்பூர் போலீசாரிடம் சிக்கினேன்.ஜாமினில் வந்த பின், வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக, பலரிடம் மோசடி செய்து, மலேஷியாவுக்கு சென்று விட்டேன்.விமானம் வாயிலாக, 2016ல் இருந்து, சென்னைக்கு வந்து, தமிழகத்தில், ஓடும் ரயில்களில், குளிர்சாதன வசதி உள்ள, முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில், பெண் பயணியரிடம் நகைகளை திருடி வந்தேன்.அவற்றை, திருச்சூர் மற்றும் மும்பையில் அடகு வைத்தேன்; 1 கோடி ரூபாய் கிடைத்தது. அந்த பணத்தில், மலேஷியாவில், சொகுசு ஓட்டலை துவங்கினேன்; பங்குதாரராக ஒருவரை சேர்த்துக் கொண்டேன்.என் மனைவி, ஓட்டல் நிர்வாகத்தை கவனித்துக் கொள்வார்; நான் திருட வந்து விடுவேன்.மாதம் தோறும், பிரான்ஸ், அல்ஜீரியா, நெதர்லாந்துமற்றும் உஸ்பெஸ்கிஸ்தான் நாடுகளில் இருந்து, 16 - 25 வயதுடைய பெண்களை அழைத்து வருவோம்.எங்கள் ஓட்டலில், 'மாடல் ஷோ' நடத்துவோம். தொழிலதிபர்கள் வருவர். அவர்களுடன், அந்த பெண்களை பழக வைத்து, மதுவுடன் விருந்து படைத்து, பணம் பறித்து வந்தேன்.அல்ஜீரியாவைச் சேர்ந்த, ஜாஸ்மின் என்பவரை, மூன்றாவது மனைவியாக்க, திருமண ஏற்பாடுகளையும் செய்து வந்தேன்.
இந்நிலையில், எங்கள் ஓட்டலின் பங்குதாராக இருந்தவரை, 'கழற்றி' விட முடிவு செய்தேன். அவருக்கு தர வேண்டிய தொகையை திரட்டுவதற்காக, ஒரு மாதத்திற்கு முன், சென்னைக்கு வந்து, ரயில்களில் திருடி வந்தேன்.இவ்வாறு, அவன்வாக்குமூலம் அளித்துஉள்ளான்.110 சவரன் மீட்புநான்கு ஆண்டுகளாக, போலீசாருக்கு, 'டிமிக்கி' கொடுத்து வந்த, ஷாகுல் ஹமீதை கைது செய்த, சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், தாமஸ் ஜேசுதாசன், கயல்விழி உள்ளிட்டோரை, ரயில்வே, டி.ஜி.பி., - சைலேந்திர பாபு பாராட்டி, சன்மானம் வழங்கினார்.ஷாகுல் ஹமீதை, திருச்சூர் மற்றும் மும்பைக்கு அழைத்துச் சென்ற போலீசார், பெண் பயணியரிடம் திருடு போன, 110 சவரன் நகைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.