அவனியாபுரம், ''தேர்தல் பிரசாரங்களில் விதிமுறைகளை பின்பற்றினால் பிரச்னை ஏற்படாது,'' என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
மதுரை, சிவகங்கையில் அ.தி.மு.,க., நிர்வாகிகள் இல்ல திருமண விழாவில் பங்கேற்று சென்னை செல்ல வந்த அவர் மதுரை விமான நிலையத்தில் கூறியதாவது:
கமல் பேச்சு குறித்து ஊடகங்கள், அரசியல் கட்சிதலைவர்கள் பேசாமல் இருப்பது நல்லது என நீதிமன்றம் கூறியுள்ளதால், நான் கருத்து கூற இயலாது.தமிழகத்தில் பருவ மழை சரியாக பெய்யாததால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. வறட்சிப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வறட்சி பகுதிகளில் தேவையான குடிநீர் வழங்கப்படும். அதற்கான நிதியும் முன்கூட்டியே ஒதுக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு உள்ளதாக துணை வேந்தர் சூரப்பாவின் குற்றச்சாட்டு தவறானது.தேர்தல் பிரசாரத்தில் மத உணர்வுகளை துாண்டும் விதமாக பேசினால்,
தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்க முடியாது.
தேர்தல் விதிமுறையை பின்பற்றி அரசியல் தலைவர்கள் பேசினால் எந்த பிரச்னையும் ஏற்படாது, என்றார்.ஸ்டாலின், தினகரன் ஆகியோர் அதிக அளவில் தேர்தல் பிரசாரங்கள் மேற்கொண்டுள்ளது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, எங்களுடைய பிரசாரங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நான், துணை முதல்வர், கூட்டணி கட்சி தலைவர்கள் பிரசாரங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். எங்களை விட்டு விடுகிறீர்களே,' என முதல்வர் சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.