பொது செய்தி

தமிழ்நாடு

திட்டப்பணியா? காவிரி குழாய் உடைப்பு பணியா? ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டத்தில் பரிதவிப்பு

Added : மே 18, 2019
Advertisement

ஈரோடு: ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டப்பணிக்காக அலட்சியமாக தோண்டப்படும் குழிகளால், காவிரி குடிநீர் பிரதான குழாய்கள் பல இடங்களில் உடைந்து, மக்கள் சிரமப்படுகின்றனர்.
ஈரோடு மாநகராட்சி மக்களுக்கு, நல்ல குடிநீரை வழங்கும் வகையில், பவானி அருகே ஊராட்சிகோட்டை என்ற இடத்தில் இருந்து, 484 கோடி ரூபாய் செலவில், ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதற்காக, நவீன இயந்திரங்கள் மூலம் குழி தோண்டி, குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. இவ்வாறு பணி நடக்கும் இடங்களில், காவிரி கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாய், கிளை மற்றும் வீடுகளுக்கு செல்லும் குழாய்கள், தினமும் பல இடங்களில் உடைபடுவது வாடிக்கையாகி உள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும், ஈரோடு மாநகராட்சி ஒன்றாவது மண்டலம் ஆர்.என்.புதூர், ஜவுளி நகர், பவானி சாலை பகுதியில் பல இடங்களில், காவிரி குடிநீர் திட்ட பிரதான குழாயை உடைத்துள்ளனர். இதனால், இரண்டு முதல் ஐந்து நாட்கள் வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. சீரமைப்பு முடிந்த பிறகே, தண்ணீர் வழங்குகின்றனர். இதுபோல, கடந்த மாதங்களில் குழாயை உடைத்த இடங்களில், தரமாக சீரமைக்காததால், வாகனங்கள் செல்லும்போது மீண்டும் உடைவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுபற்றி, காந்திய மக்கள் இயக்க மாவட்ட தலைவர் பெரியசாமி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது: ஊராட்சிகோட்டை குடிநீர் திட்ட பணியால், பல இடங்களில், காவிரி குடிநீர் குழாய் உடைந்ததால், ஆர்.என்.புதூர், பாலக்காட்டூர், சி.எம்.நகர், கொத்துக்காரன்புதூர், மாதேஸ்வரா நகர், ஜவுளி நகர் பகுதிகளில், மூன்று மாதமாக பிரச்னை நிலவுகிறது. மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம், மாவட்ட நிர்வாகத்திடம் புகார் செய்தும், அலட்சியம் தொடர்கிறது. காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்தால், அதை மாநகராட்சி நிர்வாகம் சீரமைப்பதை தவிர்த்து, ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டப்பணி செய்யும் ஒப்பந்ததாரர் மூலமே, சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்விடத்தை சரி செய்தால் மட்டுமே, தொடர்ந்து பணி செய்ய அனுமதிக்க வேண்டும். உடைப்பு ஏற்படும்போது, எந்தெந்த பகுதியில் தண்ணீர் வினியோகம் நிறுத்தப்படுகிறதோ, அப்பகுதிக்கு, ஊராட்சிகோட்டை குடிநீர் திட்ட ஒப்பந்ததாரர் மூலமே, லாரியில் குடிநீர் வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X