கேபினட் செயலர் ஆகிறார் கிரிஜா?

Added : மே 18, 2019
Advertisement
 கேபினட் செயலர் ஆகிறார் கிரிஜா?

கேபினட் செயலர் ஆகிறார் கிரிஜா?

அடுத்து ஆட்சி அமைக்கப் போவது, மீண்டும், பா.ஜ., கூட்டணியா அல்லது காங்கிரஸ் கூட்டணியா என, அரசியல் வட்டாரங்கள் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. ஆனால், டில்லி அதிகாரிகள் வட்டாரங்களில், எந்தெந்த அதிகாரிகளுக்கு முக்கிய பதவிகள் கிடைக்கும் என, பட்டிமன்றம் நடந்து வருகிறது.மத்திய அரசு அதிகாரிகளில், சக்தி வாய்ந்தவர், கேபினட் செயலர். அனைத்து செயலர்களுக்கும், 'பாஸ்' இவர் தான்.இப்போது, பிரதீப் குமார் சின்ஹா, கேபினட் செயலராக உள்ளார். இவர் பதவி ஓய்வு பெற்றுவிட்டாலும், இவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில், பதவி நீட்டிப்பு முடிவடைகிறது.இந்த பதவிக்கு நியமிக்கப்படும் அதிகாரி, மத்திய அரசின் இரண்டு முக்கிய துறைகளில் பணியாற்றியவராக இருக்க வேண்டும். அடுத்து அமைய இருக்கிற அரசு, முதலில், இந்த பதவிக்கு சிறந்த, மூத்த அதிகாரியை நியமிக்க வேண்டும்.இப்போது, தேசிய அளவில், மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருப்பவர், தமிழக தலைமைச் செயலர், கிரிஜா வைத்தியநாதன். இவருக்கு, கேபினட் செயலர் பதவி கிடைக்குமா என, டில்லி அதிகாரிகள் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால், இவர் மத்திய அரசுப் பதவிகளில், அதிகமாக பணியாற்றியதில்லை என, சொல்லப்படுகிறது.இதைத் தவிர, உளவுத்துறை தலைவர், 'ரா' அமைப்பின் தலைவர் என, முக்கிய பதவிகளுக்கான அதிகாரிகளையும், புது அரசு நியமிக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி, மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இப்போது, அஜித் தோவல், இந்த பதவியில் உள்ளார். மோடி, மீண்டும் பிரதமராக வந்தால், தோவல் மாற்றப்படலாம் என, அதிகாரிகள் கூறுகின்றனர்.

குழந்தைகள் சர்ச்சையில் பிரியங்கா

உ.பி., மாநிலம் அமேதி லோக்சபா தொகுதியில், காங்., தலைவர் ராகுல் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில், அவரது தங்கை பிரியங்கா, முழுமூச்சாக பிரசாரம் செய்தார். பிரசாரத்துக்கு இடையே, பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த குழந்தைகளையும் சந்தித்தார் பிரியங்கா. அப்போது, மோடிக்கு எதிராக, மோசமான கோஷங்களை அந்த குழந்தைகள் எழுப்ப, இந்த வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரிய சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. எப்படி குழந்தைகளை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தலாம் என, விமர்சனங்களும் எழுந்தன.இப்பிரச்னையில், அகில இந்திய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், களம் இறங்கியது. 'குழந்தைகளை பிரசாரத்தில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம்; அந்த குழந்தைகள் குறித்த விபரங்களை கொடுங்கள்' என, பிரியங்காவிடம் கேட்டது. ஆனால், விபரங்களை அளிக்க, பிரியங்கா மறுத்துவிட்டார்.இந்த பதில் தான் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த, ஆணையம், 'நீங்கள் கொடுக்காவிட்டாலும், அவர்கள் யார் என்பதை எப்படியும் கண்டுபிடித்து விடுவோம். அவர்களை யார் பிரசாரத்திற்கு அழைத்து வந்தனர் என்பதையும் தெரிந்து கொண்டு, மீண்டும் உங்களிடம் வருகிறோம்' என, கூறியுள்ளதாம்.உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் தான், இந்த குழந்தைகள் பிரசாரத்திற்காக ஏற்பாடு செய்து, பிரியங்காவையும் சந்திக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த குழந்தைகள், ஆணையத்தின் விசாரணையில் சிக்கிவிடக் கூடாது என்பதில், கண்டிப்பாக உள்ளாராம் பிரியங்கா. இதனால், காங்கிரஸ்காரர்கள், இந்த குழந்தைகளைப் பாதுகாப்பதில், கவனமாக உள்ளனராம்.
இவர் இப்படி!

இரண்டு மாதங்களாக நடந்த தேர்தல் பிரசாரம், ஒரு வழியாக முடிந்தது. இன்று, கடைசி கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது.வறுத்தெடுக்கும் வெயிலில் பிரசாரம் செய்து, நிறம் மாறிப் போயினர், அரசியல் தலைவர்கள். பிரசாரத்தின் போது, ஒவ்வொரு தலைவரும், அவர்களுடைய உடல்நிலையையும் கவனித்துக் கொள்ள வேண்டும். இதற்காக, கட்சியினர் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். குறிப்பாக, பிரசாரத்தில் இருந்த போது, சாப்பாட்டு விஷயத்தில், தலைவர்கள் கண்டிப்புடன் இருந்தனராம்.பிரதமர் மோடி, பிரசாரத்தின் போது, திரவ உணவைதான் எடுத்துக் கொள்வார். எலுமிச்சை அல்லது ஆரஞ்சு பழரசம் குடிப்பாராம். தவிர, அடிக்கடி விரதம் அனுசரிப்பதால், சாப்பாடு விஷயத்தில், கட்சியினருக்கு சிக்கலே வந்ததில்லையாம்.காங்., தலைவர் ராகுலுக்கு, சமோசா ரொம்ப பிடிக்கும். இதை அறிந்து, கட்சியினர் அவ்வப்போது, அவருக்கு சமோசா சப்ளை செய்வது வழக்கம். ஹெலிகாப்டரில் பயணம் செய்யும் போது கூட, கட்சியினர் கொடுத்து அனுப்பிய சமோசாவை ருசித்து சாப்பிடுவாராம். ஆனால், ராகுலும், உணவு விஷயத்தில் கறார்; அளவோடு தான் சாப்பிடுவாராம்.மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான, மம்தா பானர்ஜி, அடிக்கடி வெள்ளரிக்காய் சாப்பிடுவார். இவருக்கு, நடப்பது மிகவும் பிடிக்கும். தினமும், 20 கி.மீ., நடப்பாராம். இதனால் தான், தேர்தல் பிரசாரத்தில், காரிலிருந்து இறங்கி, நடந்தே பிரசாரம் செய்வது, இவரது பாணியாகி விட்டது. இவரது வாகனத்தில், வெள்ளரிக்காய், இருப்பு வைக்கப்பட்டிருக்குமாம்.பா.ஜ., தலைவர், அமித் ஷாவும், சாப்பாட்டு விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பார். இவருக்கு சர்க்கரை வியாதி என்பதால், உணவு விஷயத்தில் ஏகப்பட்ட கட்டுப்பாடு. பிரத்யேக உணவு வகைகள் தான், இவருக்கு பரிமாறப்படும்.காங்., பொதுச் செயலர், பிரியங்கா, பிரசாரத்தின் போது, பாதாம் பருப்புகளை, கொறிப்பது வழக்கம். ஆனாலும், மிதமாகத் தான் சாப்பிடுவாராம்.

எதிர்க்கட்சியினர் தயார்

தேர்தல் ஆணைய அலுவலகம், இந்த முறை படு பரபரப்பாக செயல்பட்டது. பா.ஜ.,வுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக, அநேகமாக, எல்லா எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டியுள்ளன. இது மட்டுமல்லாமல், தினமும், காலை, மதியம், மாலை என, ஏதாவது ஒரு எதிர்க்கட்சி, தேர்தல் ஆணையர்களைச் சந்தித்து, பா.ஜ.,வுக்கு எதிராக புகார் அளிப்பது, வழக்கமாக மாறிப்போனது.இதில், தெலுங்கு தேச கட்சி தலைவரும், ஆந்திர முதல்வருமான, சந்திரபாபு நாயுடு தான் முன்னிலை வகித்தார். ஆந்திராவிலிருந்து, இதற்காகவே, அடிக்கடி டில்லி பறந்து வந்தார், சந்திரபாபு.'ஓட்டுப்பதிவு இயந்திரம் சரியில்லை; ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும்' என, தினந்தோறும், ஏதாவது ஒரு கட்சி சார்பில், புகார் அளிக்கப்பட்டது.'ஓட்டுப் பதிவு இயந்திரத்தை, யாரும், எதுவும் செய்ய முடியாது; அதில் தவறு நடக்க வாய்ப்பே இல்லை' என, தேர்தல் ஆணையம் திரும்ப திரும்ப சொல்லி வந்தாலும், சில எதிர்க்கட்சிகள் அதை நம்ப மறுக்கின்றன. உச்ச நீதிமன்றமும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்திற்கு ஆதரவாகவே தீர்ப்பளித்துள்ளது.பா.ஜ., மீண்டும் வெற்றி பெற்று, மோடி பிரதமரானால், 'ஓட்டுப்பதிவு இயந்திரம் தில்லுமுல்லு தான் காரணம்' என, சாக்கு சொல்ல, எதிர்க்கட்சிகள் தயாராகிவிட்டன. '300 சீட்களுக்கு மேல் ஜெயிப்போம்' என, அமித் ஷாவும், மோடியும் திட்டவட்டமாக சொல்கின்றனர்.'எப்படி இவ்வளவு தீர்மானமாக சொல்ல முடிகிறது. அப்படியென்றால், ஏதாவது உள்குத்து நடக்கிறதா; ஓட்டு இயந்திரங்களில் கைவைத்து விட்டார்களா' என, இப்போதே, எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்ப துவங்கிஉள்ளனர். 'வழக்கம் போல, தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஓட்டு இயந்திரங்கள் மீது பழிபோட தயாராகிவிட்டனர்' என, பா.ஜ.,வும் பதிலடி கொடுக்கத் துவங்கிவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X