மரம் செய்ய விரும்புங்கள்!| Dinamalar

மரம் செய்ய விரும்புங்கள்!

Added : மே 18, 2019 | கருத்துகள் (2)
Share
  மரம் செய்ய விரும்புங்கள்!

மரம் செய்ய விரும்புங்கள்!
அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம், உக்கிரமாக இருக்கிறது. சில ஊர்களில் கோடை மழை கொட்டுகிறது; பல மாவட்டங்களில் வெயில் மண்டையை பிளக்கிறது. உடலெங்கும் வெப்பம் ஊடுருவும் முன், எங்காவது நிழலில் ஒதுங்குவோம் என, மனம் விரும்புகிறது.ஆனால், மரங்களைக் காணவில்லையே. நகர்புறங்கள் தான் என்றில்லாமல், கிராமப்புறங்களிலும், மக்கள் வசிப்பிடங்களிலும், மரங்கள் மாயமாகி விட்டன!மரங்கள் தன் வாழ்நாள் முழுவதும், நச்சு வாயுவை உள்வாங்கி, சுத்தமான பிராண வாயுவை தருகின்றன. மனித சமுதாயம் நலமாக வாழ, மரங்களே ஆதாரம். மாசடையாத மனித வாழ்க்கைக்கு, மரங்களே பிரதானம்.மரங்களால் தான் மழை பெய்கிறது. அது மட்டுமின்றி, ஓடை, குளம், குட்டைகளில், நிலையான நீரோட்டத்துக்கும், மரங்கள் தான் வழி வகுக்கின்றன.மரங்கள் வளராத அல்லது மரம் இல்லாத இடங்களை விட, மரங்கள் அடர்த்தியாக இருக்கும் இடங்களில், நிலத்தடியில், நீர் அதிகமாக ஊறுகிறது. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கு, அதிக அளவில் மரக்கன்றுகளை நட வேண்டும். அதிலும், நாட்டு மரங்களை நடுவதே சிறந்தது என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின், இங்கிலாந்து நகரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மேய்ச்சல் நிலங்களை விட, மரங்கள் நடப்பட்ட நிலங்கள், 67 மடங்கு அதிகமாக தண்ணீரை உள் வாங்குகின்றன என்பது தெரிந்தது.மரங்களின் அருமையை, நம் முன்னோர் அறிந்துள்ளனர். அதனால் தான், மனிதர்களைப் போலவே, மரங்களுக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளனர். சங்க இலக்கியங்களில், மரங்கள் பற்றிய ஏராளமான குறிப்புகள் உள்ளன.சங்க கால மக்கள், ஆலமரத்தை வணங்கியுள்ளனர். மேலும், 'அரசனின் செங்கோலை, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், ஆலம் விழுதுகளை போல தாங்க வேண்டும்' என, 'திரிகடுகம்' என்ற நுால் கூறுகிறது.தேற்றாங்கொட்டையை, தண்ணீரை சுத்தப்படுத்த பயன்படுத்துகிறோம். அந்த விதையை அரைத்து, கலங்கிய நீரில் போட்டால், சில நிமிடங்களில், அழுக்கு கீழே தங்கி, மேலே உள்ள நீர், குடிக்க ஏற்றதாக மாறி விடும்.இந்த மரம் மற்றும் அதன் விதையின் பெருமையை, 'கலித்தொகை' என்ற பழம்பெரும் தமிழ் நுால் கூறுகிறது.சங்க கால மக்கள், தாவரங்களில் இருந்தே நோய் தீர்க்கும் மருந்தை தயாரித்துள்ளனர். அத்துடன், மருந்தாக பயன்படுத்தப்பட்ட தாவரங்களை, மக்கள் பெரிதும் போற்றி, பாதுகாத்து வளர்த்து வந்தனர். அதனால் தான், முன்னோர் நீண்ட காலம் வாழ்ந்தனர்.கற்பூர விருட்சம் என, சொல்லும் அளவுக்கு, நம் தமிழகத்தின் பனை மரங்கள், பல விதமான பயன்களை அளித்து வருகின்றன. பழம்பெரும் தமிழ் நுால்கள் அனைத்துமே, பனை ஓலைகளில் தான் எழுதப்பட்டிருந்தன.'தமிழர்களின் நாகரிகம், ஆற்றோரங்களில் தான் தோன்றின' என, ஆய்வுகள் கூறுகின்றன. வைகை நதியின் கரையெங்கும், மருத மரங்கள் வளர்ந்திருந்ததால், 'மருதை' என, அழைக்கப்பட்ட அந்நகரம், காலப்போக்கில், 'மதுரை' ஆயிற்று என்கின்றனர்.
ஒவ்வொரு மரத்திற்கும், ஒவ்வொரு குணாதிசயம் உண்டு. புன்னை மரங்கள் சிலிர்த்தால்,மழை வரும் என்கின்றனர். இம்மரத்தின் பூக்கள் மற்றும் இலைகள், அதிக அளவில், பிராணவாயுவை வெளியிடுவதால், அதை சுவாசிக்கும் நமக்கு புத்துணர்வு கிடைக்கிறது.வேம்பு, வாகை,பூவரசு, போன்ற நாட்டு மரங்கள், வெப்பம், வறட்சியை தாங்கும் தன்மை கொண்டவை. வளர்க்க குறைந்த நீரே தேவைப்படும் இந்த மரங்கள், நிழல் தருவதுடன், சுற்றுச்சூழலையும் குளிர்ச்சியாக்குகின்றன.மனித வாழ்க்கையில், குழந்தை பருவம் துவங்கி, கடைசியில், கட்டையில் போகும் வரை, மரங்களும், மரத்திலான பொருட்களும் நமக்கு எத்தனையோ உதவிகளையும், நன்மைகளையும் செய்து வருகின்றன.தவழும் நிலையில் உள்ள குழந்தைகளுக்கு விளையாட, மரப்பாச்சி பொம்மை என்ற, சிறிய மரப்பொம்மையை, பெற்றோர் கொடுப்பர். குழந்தைகள் சில நேரம், அவற்றை வாயில் வைத்துக் கொள்ளும்; கொஞ்ச நேரத்தில், 'ஜொள்ளு' வடியும்.எனினும், அதனால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இப்போது, செம்மரம் என்கின்றனரே, அந்த மரத்திலிருந்து தயாரிக்கப்படுவது தான், மரப்பாச்சி பொம்மை!தவழும் குழந்தைகள், எழுந்து நடக்க தயாராகும் போது, மரத்தால் ஆன நடைவண்டி கொடுப்பர். அந்த வண்டியை தள்ளியபடி, தத்தித்தத்தி குழந்தைகள் நடக்கும் அழகே தனி!இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும், மரக்குதிரை எனப்படும், குதிரை போன்ற உருவத்தை, மரச் சட்டங்களால் செய்து, அதில் குழந்தைகளை வைத்து, பெற்றோர் ஆட்டுவர். அதில் மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கும் குழந்தைகளின் படங்கள், இப்போதும் பல வீடுகளில், 'போட்டோ'க்களாக மிளிர்வதை பார்க்கலாம்.
மழலை பருவம் தாண்டி, பள்ளி காலத்தில்,மர,'ஸ்கேல்' மற்றும் மரச் சட்டம் பொருத்திய சிலேட், மர பென்சில்,பரீட்சை அட்டை, பெஞ்ச்,டெஸ்க் என, அனைத்தும் மரத்தாலேயே இருந்தன.இவை மட்டும் தானா... ஆசிரியர்கள் கையில் இருக்கும் பிரம்பு, குச்சி போன்றவையும், மரத்தால் தான் இருந்தன.ஆனால், இப்போது இவற்றில் பெரும்பாலானவை மறைந்து, பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருட்களால் ஆனவை தான், குழந்தை பருவம் துவங்கி, பெரிய ஆளாக வரும் வரை, அனைத்து தரப்பினராலும் பயன்படுத்தப்படுகின்றன.இப்போது, நினைத்தாலே மகிழ்ச்சி தரும் இந்த பொருட்கள் எல்லாம், எங்கே சென்று விட்டன?குடியிருக்கும் வீட்டின் மானத்தை காப்பது, நிலைக்கதவுகள். அதையடுத்து, ஜன்னல்கள். மர வேலைப்பாட்டில் அவை, எத்தனை நுாறு ஆண்டுகள் ஆனாலும், அப்படியே இருந்தன; இப்போதும் இருக்கின்றன.வீட்டின் சமையல் அறைகளில் பயன்படுத்தப்படும் பொருட்களான, அரிவாள் மனை, தயிர் கடையும் மத்து, பூரிக்கட்டை, மரக்கரண்டி, அஞ்சறைப் பெட்டி போன்றவையும், மரப் பொருட்களாகவே இருந்தன. இவற்றில், அநேகம் மறைந்து விட்டன; ரசாயனம் பூசிய இரும்பு மற்றும் பிற உலோக பொருட்கள் வந்து விட்டன.வீடுகளின் உள்புறத்தை அலங்கரித்த, கட்டில், சேர், பீரோ, அலமாரி, ஊஞ்சல் எல்லாமே, மரங்களில் இருந்த வீடுகளில், இப்போது நிலைமை தலை கீழ்; ரசாயனம் சார்ந்த பொருட்களாக உள்ளன.கட்டை குத்தப்பட்ட வீடுகள்; பிரமாண்ட மர உத்திரங்களுடன் கூடிய விதானங்கள் என, கலைப்படைப்புகளாக திகழ்ந்த வீடுகள், இப்போது, கான்கிரீட் மயமாக மாறி விட்டன.அந்த காலத்தில் நிறைய மரங்கள் இருந்தன. குச்சில் வீடாக இருந்தாலும், அதன் முன், இரண்டு, மூன்று வேம்பு அல்லது பூவரசு மரங்கள் இருந்தன. பங்களா வீடுகள், மரத் தோப்புகளின் நடுவே அமைக்கப்பட்டிருந்தன. இதனால், மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.ஆனால், இப்போது வீடுகள் அதிகரித்து விட்டன; மரங்கள் குறைந்து விட்டன. அந்த பொருட்கள் இருந்த இடத்தில், பிளாஸ்டிக் மற்றும் ரசாயன பொருட்கள் குவிந்து விட்டன.இது மட்டுமா, வீடுகளின் பரண், மரத்தால் தான் அமைந்திருந்தன. திண்ணைகளில் மரத் துாண்கள்; வீட்டுக்குள் நெல் கொட்டி வைக்க, மண் குதிர், மரப்பெட்டி; நெல்லை அளக்க, மரக்கால்; கொல்லைப்புற கிணற்றில் நீர் இறைக்க, மர உருளை; விவசாயத்திற்கு மரத்தால் ஆன, ஏர், கலப்பை, மண்வெட்டி.சற்று யோசித்து பாருங்கள்... எங்கே போய் விட்டன, இந்த பொருட்கள். மரங்களுக்கு மதிப்பளிக்க தவறி விட்டோமே!மரத்தால் ஆன பெட்டிக்கடை, கடைகளில் பணம் வைக்க, கல்லாப் பெட்டி போன்றவை, இப்போது எங்கே இருக்கின்றன?வண்டிகளில் தான் எத்தனை வகைகள்... உழைப்பாளிகளின் நம்பிக்கையை நகர்த்திச் செல்ல தள்ளுவண்டி, கட்டை வண்டி, மாட்டு வண்டி, குதிரை வண்டி என, எல்லா வாகனங்களும், மரத்தால் தயாரிக்கப்பட்டிருந்தன. ஆனால் இப்போது, உலோகங்களும், பிளாஸ்டிக் ஷீட்களும் தான், வாகனங்களாக வலம் வருகின்றன.ஒவ்வொரு கோவிலும், வெவ்வேறு தல விருட்சமாக, விதவிதமான மரங்கள். இறை வழிபாட்டிற்கான இசைக்கருவிகள் அனைத்துமே, மரத்தால் தான் தயாரிக்கப்பட்டிருந்தன.நாதஸ்வரம் -- ஆச்சாமரம்; வீணை; -பலா மற்றும் ரோஸ்வுட் மரம்; வயலின் -- செங்காளி, கருங்காலி மற்றும் ரோஸ்வுட் மரம்; தவில் -- பலா மரம், மிருதங்கம் - -பலா, கருங்காலி மரம்; புல்லாங்குழல் - -மூங்கில்; தபேலா -- பலா; தம்புரா -- பலா... இன்னும் பல இசைக் கருவிகள், மரங்களால் தான் செய்யப்பட்டன.இப்போதும் அப்படித் தான் என்றாலும், பரவலாக அவற்றை காண முடியவில்லையே!நம் பாரம்பரிய விளையாட்டுகளுக்கும், மரங்களே தன்னை உருமாற்றி இருந்தன. கிட்டிப்புல், பல்லாங்குழி, கேரம், மரக்கட்டை செஸ் காய்கள், வில் - அம்பு, ஈட்டி, கவட்டை, பம்பரம், கிரிக்கெட், ஹாக்கி மட்டை, பந்து தவிர்த்து அனைத்தும், மரப் பொருட்களாகவே இருந்தன.
இப்போது புரிந்திருக்கும், மரத்தின் அருமை. மரப் பொருட்களுக்கு மதிப்பளிக்க தவறி விட்டதால், பிளாஸ்டிக் என்ற அரக்கன் எத்தகைய ரூபங்களில், நம் வாழ்வுடன் இணைந்து விட்டான். அவனை அப்புறப்படுத்துவது, மிகவும் கடினம்.நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மரங்கள் குறைந்ததால், மின் விசிறி, 'ஏசி' போன்றவற்றை மக்கள் நாடுகின்றனர். மின் தேவை அதிகரித்து, சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. புவி வெப்பமாகிறது. மனித உயிர்களில், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, வீரியம் மங்கிவிட்டது.எல்லாவற்றிற்கும் காரணம் மரம். மரம் வளர்த்தால், மனிதர்கள் வாழ முடியும். எனவே, மரங்களை வெட்டாதீர்; காடுகளை உருவாக்குங்கள்; அழிக்காதீர். மரங்களுக்கு நன்றிக் கடன் செலுத்துவது நம் கடமை. உங்கள் வாழ்க்கையில், ஒரு மரக் கன்றாவது நடுங்கள். ஆளுக்கொரு மரக்கன்று நடுங்கள்; 130 கோடி மரங்கள் உருவாகி விடும்; மகனாக, மகளாக அதை கருதி வளருங்கள். எதிர்காலத்தில் நிச்சயம் அது, உங்களை காப்பாற்றும்!அலைபேசி: 98946 87796இ - மெயில்: mdurgn@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X