தேனி, தேனி அ.தி.மு.க., வேட்பாளர் ரவீந்திரநாத்குமாரை எம்.பி.,யாக குச்சனுார் கோயில் கல்வெட்டில் பதித்த 'மாஜி' போலீஸ்காரர் வேல்முருகன் 43, கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரன் கோயில் அருகே ஓய்வு பெற்ற போலீஸ்காரர் ராமையா 65 அன்னபூரணி கோயில் கட்டியுள்ளார். மே 16 ல் கும்பாபிேஷகம் நடந்தது. கோயில் கல்வெட்டில் தேனி லோக்சபா அ.தி.மு.க., வேட்பாளரான துணைமுதல்வர் பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் பெயருக்கு மேல் தேனி எம்.பி., என பொறிக்கப்பட்டிருந்தது. சர்ச்சையை உருவானதால் நேற்றுமுன்தினம் அந்த கல்வெட்டின் மீது மற்றொரு கல்வெட்டு வைத்து மறைக்கப்பட்டது.
இது தேர்தல் விதிமீறல், அ.தி.மு.க. வேட்பாளரை கைது செய்ய வேண்டும் என காங். வேட்பாளர் இளங்கோவன், அ.ம.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்தனர்.
எஸ்.பி.,யிடம் புகார்
இந்நிலையில், அ.தி.மு.க. வேட்பாளரின் பவர் ஏஜன்ட் வழக்கறிஞர் சந்திரசேகர், வழக்கறிஞர் பிரகாஷ்குமார் ஆகியோர் நேற்று தேனி பாஸ்கரன் எஸ்.பி.,யிடம் அளித்த புகாரில் 'கோயில் கல்வெட்டில் பெயர் பொறித்ததற்கும், வேட்பாளருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எம்.பி. என குறிப்பிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என குறிப்பிட்டிருந்தனர்.
மாஜி போலீஸ் கைது
இதையடுத்து, கோயில் கட்டிய ராமையாவின் மகனான முன்னாள் போலீஸ்காரர் வேல்முருகன் அவர் கைது செய்யப்பட்டார். ஜெ., நலன் பெற வேண்டி சீருடையுடன் மொட்டை போட்ட பிரச்னையில் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட வேல்முருகன் அடுத்தடுத்து பிரச்னையில் சிக்கியதால் கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டது.
எஸ்.பி., கூறுகையில், ''போலியான ஆவணங்களை உருவாக்கி, பொதுமக்கள் பார்வையில் படும்படி வைத்தது, நம்பிக்கைக்கு மோசடி செய்தது என மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்,'' என்றார்.
வக்கீல் சந்திரசேகர் கூறுகையில்,'' கல்வெட்டிற்கும், அ.தி.மு.க. வேட்பாளருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தோல்வி பயத்தால் வேட்பாளர் மீது களங்கம் ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன, '' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE