மும்பையில் கண்காணிப்பு கேமராக்களில், வேக அளவிடும் கருவி இணைக்கப்பட்டுள்ளது. அதுபோல், சென்னையிலும் இணைக்கப்பட்டால், விபத்துகள் குறையும் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில், குற்றங்களை குறைக்கும் வகையிலும், குற்றவாளிகளை விரைவில் அடையாளம் கண்டறிந்து, கைது செய்யவும், 2016ம் ஆண்டு முதல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.சென்னை போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதனின் தீவிர முயற்சியால், பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் உதவியுடன், சென்னை முழுவதும், 2.50 லட்சம் கேமராக்களை, போலீசார் பொருத்தியுள்ளனர்.பிரதான சாலை முதல், தெருக்கள் வரை, 50 மீ., இடைவெளிக்கு ஒன்று என்ற வகையில், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.குற்ற வழக்குகள்இதனால், குற்றங்கள் குறைந்துள்ளன. குற்றவாளிகளையும், எளிதில் அடையாளம் காண முடிகிறது. பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த, 2016ம் ஆண்டில், 615 ஆக இருந்த குற்ற வழக்குகள், படிப்படியாக குறைந்து, இந்தாண்டு, ஏப்ரல் வரை, 82 குற்ற வழக்குகள் மட்டுமே, பதிவு செய்யப்பட்டுள்ளன.மேலும், கொலை, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவேரை, கண்காணிப்பு கேமரா உதவியுடன், போலீசார் கைது செய்து வருகின்றனர்.இது போன்ற பல்வேறு பயன்பாடுகளால், சென்னையில், சட்டம் - ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீசாருக்கு வேலைப்பளு, மன அழுத்தம் குறைந்து உள்ளதாக, உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குற்றச்சம்பவங்கள் குறைந்தாலும், போக்குவரத்து விதிமீறல் மற்றும் விபத்துகளை, போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதற்கு காரணம், போக்குவரத்தை சீர் செய்வதற்கான வசதிகள், அரசு தரப்பில், செய்து தரப்படுவதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.போக்குவரத்து போலீசார் கூறியதாவது:விதி மீறலில் ஈடுபடுவோரை பிடித்து, நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனாலும், விதிமீறலில் ஈடுபடுவோரில், 40 சதவீதம் பேரை மட்டுமே, பிடிக்க முடிகிறது. மற்றவர்கள், வாகனத்தை வேகமாக ஓட்டி, தப்பி விடுகின்றனர். கண்காணிப்பு இல்லாததால், விபத்துகள் அதிகரித்து வருகின்றன.இவற்றை தடுக்க, மும்பையில் பின்பற்றப்படும், போக்குவரத்து கட்டுப்பாடுகளை, சென்னையிலும் அமல்படுத்த வேண்டும்.குறுஞ்செய்திஅங்கு, கண்காணிப்பு கேமராவுடன், வாகனத்தின் வேகத்தை அளவிடும் கருவி இணைக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, வாகனம், 80 கி.மீ., வேகத்தை தாண்டி சென்றால், உரிமையாளருக்கு, 500 ரூபாய் அபராதம் என, அவர்களது மொபைல் போனில், குறுஞ்செய்தி வந்து விடும்.அபராத தொகையை, குறிப்பிட்ட நேரத்திற்குள் கட்ட தவறினால், வட்டியுடன் கட்ட வேண்டியிருக்கும். மேலும், தலை கவசம் அணியாதது, 'சிக்னல்' மதிக்காதது, வெள்ளை கோடு தாண்டுவது, இருசக்கர வாகனம், ஆட்டோக்களில் அதிகம் பேர் பயணிப்பது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரை, கண்காணிப்பு கேமரா வாயிலாக கண்காணித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.சென்னையில், அனைத்து பிரதான சாலைகளிலும், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.
ஆனாலும், போக்குவரத்தை மீறுவோர் குறித்து, கண்காணிப்பு கேமராவில் பதிவானாலும், நடவடிக்கை எடுப்பதில்லை.எனவே, மும்பையை போல், கண்காணிப்பை தீவிரப்படுத்தினால் மட்டுமே, போக்குவரத்து விதிமீறல் குறையும். இதை, உயரதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.