கரூர்:“ஆர்.கே.நகர் தொகுதி பாணியில், தி.மு.க.,வினர், 2,000 ரூபாய் டோக்கன் கொடுத்தும், வாக்காளர்களை ஓட்டு போடவிடாமலும் சிறைபிடித்து வைத்தனர்,” என, போக்கு வரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம் சாட்டினார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நேற்று நடந்தது. இதில், கார்வழி உயர்நிலைப் பள்ளி ஓட்டுச்சாவடி அருகே, சீலநாயக்கன்பட்டி அண்ணாநகரில், 2,000 ரூபாய் நோட்டின் ஜெராக்ஸ் நகலை, தி.மு.க.,வினர் கொடுப்பதாகவும், அதைக் காட்டி மாலையில் பணம் பெற்றுக் கொள்ளலாம் என கூறுவதாகவும், அ.தி.மு.க.,வினர் புகார் செய்துள்ளனர்.இது குறித்து, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:தேர்தல் தோல்வி பயத்தில், தி.மு.க., வேட்பாளர் செந்தில் பாலாஜி பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.சீலநாயக்கன்பட்டி பகுதியில், க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய, தி.மு.க., நிர்வாகி ஒருவர், வாக்காளர்களிடம், 2,000 ரூபாய் ஜெராக்ஸ் தாளை கொடுத்து, மாலையில் பணம் பெற்றுக்கொள்ளும்படி கூறியுள்ளார். அப்பகுதி, அ.தி.மு.க., நிர்வாகி, பறக்கும்படை அதிகாரிகளிடம் இதுகுறித்து தெரிவித்தார்.ஆர்.கே.நகர் பாணியில், டோக்கனும் கொடுத்துள்ளனர். வேலாயுதம்பாளைம், புகழூரை சுற்றியுள்ள பகுதிகளில், தி.மு.க.,வுக்கு பாதகமாக இருக்கும் நிலையில், வாக்காளர்களை ஓட்டுப்போட செல்ல விடாமல் சிறைபிடித்து வைத்துஉள்ளனர். அவர்களிடம், மாலை, 3:00 மணிக்கு, 2,000 ரூபாய் தருகிறோம் என கூறி, தி.மு.க.,வினர் தடுத்து வைத்து இருந்தனர்.இவ்வாறு, அமைச்சர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE