பொது செய்தி

தமிழ்நாடு

வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டா...

Added : மே 20, 2019
Advertisement

நீரில் தத்தளித்தபடி இருந்த தேளைக் காப்பாற்ற எண்ணிய முனிவர் ஒருவர் அதைக் காப்பாற்றக் கையிலெடுக்கும் போது அது அவரைக் கொட்டி விட, வலி தாங்காமல் தண்ணீரில் விடும் அவர், மீண்டும் அதைக் காப்பாற்ற முயற்சி செய்ய, மீண்டும் அது கொட்ட, தண்ணீரில் விடுவதுமாக இருப்பதைப் பார்த்த ஒருவன், 'அதுதான் கொட்டுகிறது எனத் தெரிந்தும் ஏன் காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள்' என்று கேட்டதற்கு, கொட்டுவது அதன் சுபாவம், காப்பாற்ற நினைப்பது என் சுபாவம் எனச் சொல்வதாக அந்தக் கதை முடியும்.
இந்தக் கதையில் முனிவரின் குணத்தை நல்லவராகச் சித்தரிப்பது சரி தான் என்றாலும், வேறொரு கோணத்தில் சிந்தித்துப் பார்த்தால், தேளின் குணம் கொடியது என்று தெரிந்தும் விலகாத முனிவரின் செயல் தவறானதோ என்று தோன்றுகிறது. மனிதர்களில் கூட இத்தகைய தேள் போன்ற குணமுடையோர் கலந்தே இருக்கின்றனர்.இயல்புகளைத் தாண்டி துன்பங்களை சகித்துக் கொள்வதை விட, துஷ்டனைக் கண்டால் துார விலகுவதே சரியான அணுகு முறையாகும். இல்லையெனில் தேவையில்லாத மன நெருக்கடிகளைச் சுமக்க நேரிடும்.யாரிடமிருந்து விலகலாம்?இந்தக் கேள்விக்கான பதில் அறிந்தவர்களே வாழ்க்கையை அழகாக வாழ்கிறார்கள்.
. நம்மிடம் பழகும் உறவுகள், நட்புகள் பிரியமாக இருக்கிறார்களா அல்லது நம்மைப் பயன்படுத்திக் கொள்கிறார்களா என்பதில் கவனம் வைத்து, தேவைக்காக பழகும் நபர்களிடமிருந்து விலகுவது நல்லது.
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்உற்றுழித் தீர்வார் உறவல்லர் , அக்குளத்திற்கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் ↔போலவேஒட்டி யுறுவார் உறவு'என்று மூதுரை கூறுவது போல நீர் வற்றிப் போனதும் குளத்தை விட்டுச் செல்லும் நீர்ப் பறவைகளா அல்லது நீரில்லாத போதும் அங்கேயே இருக்கும் ஆம்பல் பூக்கள் போன்றவர்களா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். விக்கிரமாதித்தன் சுமக்கும் வேதாளம் போல இத்தகைய மனிதர்களைச் சுமந்து கொண்டே திரிவது போல துன்பம் வேறொன்றுமில்லை.
அடுத்ததாக நம்மிடம் அன்பு இல்லாதவர்களின் நட்பு, அவர்கள் எவ்வளவு பெரிய நிலையில் இருந்தாலும் சரி, அது தேவையில்லை. அன்பிற்காக யாசகம் கேட்கத் தேவையில்லை. கண்ட இடத்தில் கொட்டக் கூடாதது குப்பையை மட்டுமல்ல. நம் அன்பையும் தான். நம்அருமை தெரியாத மனிதர்களிடம் அன்பைக் கொடுத்து, அதை திரும்ப எதிர்பார்ப்பது தவறு.
எதிர்மறை எண்ணம் கொண்ட நபர்களிடமும் விலகி இருக்கலாம். இவர்கள் நம் முன்னேற்றத்துக்கான மிகப்பெரிய தடைக்கல். எவரின் எண்ணங்களும் நம்மைக் குலைத்து விடக் கூடாது. எப்போது நாம் பிறரின் விமர்சனங்களால் நிலை குலைகிறோமோ, அப்போது நாம் அவர்களின் சிந்தனைகளை வெற்றியடையச் செய்கிறோம்.
எல்லாம் தெரிவதாக காட்டிக் கொள்ளும் அதிமேதாவிகளையும், தான் சொல்வதே சரி என்று வாதிடுபவர்களையும் தவிர்க்கலாம். இத்தகைய மனிதர்கள் ஆபத்தானவர்கள்
எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி நடக்குதோ என்ற சுய இரக்கத்தில் தொலைந்து போகும் மனிதர்களை விட்டு தொலைவில் சென்று விடலாம். அடிக்கடி நம்மை புகழும் நபர்களிடம் கவனம் தேவை. ஆதாயம் ஒன்றே இவர்களின் குறிக்கோள்.
தேவைக்கேற்ப குணம்மாறும் கொள்கையுடையவர்கள். பச்சோந்தி மனிதர்கள் ஆபத்தானவர்கள்.
. நம்பிக்கை துரோகம் மிக்க மனிதர்களை விட்டு பல்லாயிரம் அடி விலகி விடுங்கள். ஏனென்றால் நம்பிக்கை மோசடிகளால் வாழ்க்கையில் வேதனை அடைபவர்கள் அதிகம். கூட இருந்து குழி பறிப்பவர்களை இனங்காணவே முடிவதில்லை. அதிலிருந்து மீளவும் முடிவதில்லை. வஞ்சனைகளும், சூதும் உள்ள மனிதர்கள் தீராத ரணத்தை ஏற்படுத்தி விடுகின்றனர்.
தந்திர மனிதர்கள்... இத்தகைய மனிதர்களிடமும் எச்சரிக்கை தேவை. இவர்களின் நட்பும்,உறவும் ஆபத்தானது.யாரிடம் பழகலாம்இப்போது என்னதான் செய்வது? யாரிடம் தான் பழகுவது என்ற குழப்பம் தோன்றுகிறது அல்லவா? மனிதர்களின் மன நிலை உணர்வுகள் மாறுபட்டது தான். வேறுபட்ட மனிதர்கள், வேறுபட்ட மனநிலை, வேறுபட்ட சூழல் என்று தான் பயணிக்க வேண்டியுள்ளது. ஏமாற்றம், சோகம், விரக்தி, கவலை, அவமானங்கள், நெருக்கடிகளை எதிர்கொள்ளாமல் எவரும் இல்லை. சக மனிதனை நேசிக்கவோ, அவன் துன்பத்தைக் கண்டு கலங்கவோ, ஆறுதல் சொல்லவோ, காது கொடுத்துக் கேட்கவோ யாருக்கும் நேரமில்லை. அவசர யுகம். பரபரப்பான, போட்டிகள் நிறைந்த உலகத்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். வேகமாக வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சி, பெருகி வரும் தொழில்நுட்பங்கள், சவாலான வாழ்க்கை முறை, ஒவ்வொருவரும் தன்னை நிரூபித்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தமான வாழ்வியல் முறை என இன்றைய தலை முறையினர் எதிர்நோக்கும் நெருக்கடிகள் ஏராளம். குடும்ப உறவுகளிடமே மனமொன்றிப் பேச முடியாமல் ஓட்டமும், நடையுமான வாழ்க்கை.இத்தகைய சூழலில், நாம் உணர்ந்து கொள்ள வேண்டியது மற்றவர்களிடம் எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்வது தான். இவர் இப்படித் தான் என்ற வரையறைக்குள் யாரையும் அடக்கத் தேவையில்லை. ஏனெனில் எப்போதும் மனித மனம் மாறிக் கொண்டே இருக்கும் தன்மையுடையது. ஒவ்வொருவருக்கும், அவரவர் வாழ்வை வாழும் உரிமை இருக்கிறது. அதில் நாம் அவர்களுக்குள் நம்மைப் புகுத்தி, நான் அவனை எப்படியெல்லாம் நினைச்சேன், ஆனா இப்படி இருப்பான்னு நினைத்துப் பார்க்கலையே என்று கவலைப் படக் கூடாது. நம் பிரச்னைகளுக்கான ஆறுதல் யார் வேண்டுமானாலும் தரலாம். ஆனால் தீர்வுகள் நம்மிடமே உள்ளது.இரண்டு குணங்கள்பிறரின் கனவுகளைத் துரத்தாமல், பிறரைப் பற்றி யோசிக்காமல் நம் வாழ்வை அழகாய் வாழ்வோம். இங்கு நுாறு விழுக்காடு நல்லவன், கெட்டவன் என்பது யாரும் கிடையாது. எல்லோருக்குள்ளும் இரண்டு குணங்களுமே உள்ளது. அதில் எதன் விழுக்காடு அதிகமாக உள்ளதோ அதை வைத்தே அவரவர் இயல்புகள் தீர்மானிக்கப்படுகின்றன.அவரவர் இயல்புகளோடே மனிதர்களை ஏற்றுக் கொள்ளுங்கள். மற்றவர்கள் நமக்கு என்னவெல்லாம் செய்யக் கூடாதென்று நினைக்கிறோமோ அதை மற்றவர்களுக்கு நீங்களும் செய்யாதீர்கள். நம் வலியை உணர முடிவது போல, அடுத்தவர் வலியையும் எப்போது உணரத் தொடங்குகிறோமோ அப்போது நாம் வாழ்வதற்கான அர்த்தம் ஆரம்பமாகிறது. ஆனால் பல நேரங்களில் மனம் மரத்து போய் விடுகிறது.வாழ்க்கையில் வலி தருகின்ற விஷயம் நிராகரிப்பு. எங்கே, எதனால் நிராகரிக்கப்பட்டோமோ, அங்கே மிகப்பெரிய சக்தியாக உங்களை நிலை நிறுத்துங்கள். நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்லும் வாய்ச் சொல் வீரர்களுக்கு உங்கள் செயலால் பதில் கொடுங்கள். மனம் சோர்வுறும் போதெல்லாம் பாரதியின் வரிகளை அசை போடுங்கள்.நின்னைச் சில வரங்கள் கேட்பேன்- அவை நேரே இன்றெனக்குத் தருவாய்எனக்கேதும் கவலையறச் செய்து-மதிதன்னை மிகத் தெளிவு செய்து- என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்'என்ற வரிகளைத் தினம் தோறும் சொல்லுவோம்.வாழ்தலை இனிதாக்குவோம்.- ம.ஜெயமேரி, ஆசிரியைஊ.ஒ.தொடக்கப்பள்ளிக.மடத்துப்பட்டி.bharathisanthiya10@gmail.com.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X