பங்குச்சந்தையில் அதிரடி உயர்வு: 1000 புள்ளியை கடந்தது சென்செக்ஸ்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பங்குச்சந்தையில் அதிரடி உயர்வு: 1000 புள்ளியை கடந்தது சென்செக்ஸ்

Updated : மே 20, 2019 | Added : மே 20, 2019 | கருத்துகள் (3)

மும்பை : பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற கருத்து கணிப்பு முடிவுகளின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் அதிரடியாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகளின் தொடர் அதிரடி உயர்வால் ஒரே நேரத்தில் முதலீட்டாளர்களின் பங்குகளின் மதிப்பு ரூ.3.2 லட்சம் கோடிக்கு உயர்ந்துள்ளது.





காலையில் வர்த்தகம் துவங்கிய போது 920 புள்ளிகளை கடந்து வர்த்தகமான சென்செக்ஸ், பகல் 12.15 மணியளவில் 1000 புள்ளிகளை கடந்தது. தேசிய பங்குச்சந்தையான நிப்டியும் அதிரடியாக உயர்ந்து 11,700 புள்ளிகளை கடந்துள்ளது. நிறுவனங்களை பொருத்தவரை ஐடி தவிர மற்ற அனைத்துத் துறை நிறுவன பங்குகளின் மதிப்பும் 3 சதவீதம் உயர்ந்துள்ளன.
நேற்று (மே 19) வெளியிடப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. பா.ஜ.,வே மீண்டும் ஆட்சிக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்சாகமடைந்த இந்திய பங்குச்சந்தைகள் அதிரடியாக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கருத்துக் கணிப்புக்கள், மோடியே மீண்டும் பிரதமர் ஆவார் என்றும், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 2014 லோக்சபா தேர்தலில் பெற்ற 272 இடங்களை விடவும் கூடுதலாக பெறும் என்றும், இந்த முறை பா.ஜ., 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இது குறித்து சந்தை நிபுணர்கள் கூறுகையில், சந்தை எதிர்பார்ப்புக்களை விடவும் ஆளும் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெறும் என கருத்துகணிப்புக்கள் தெரிவித்துள்ளன. கருத்து கணிப்புக்கள் ஆளும் கட்சிக்கு எதிராக அமைந்தால் வளர்ச்சி பாதிக்கப்படும், பொருளாதார மந்தை நிலை ஏற்படும், சர்வதேச சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என கருதப்பட்டது. தற்போது கருத்துகணிப்புக்கள் சாதகமாக அமைந்துள்ளதால் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுடன் காணப்பட்ட போதிலும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக வெளியாகி உள்ள கருத்துக் கணிப்புக்களால் ஏற்பட்ட உற்சாகம் காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 79 காசுகள் உயர்வுடன் காணப்படுகின்றன.




பா.ஜ., தலைமையிலான அரசு மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும் என தெரிவித்துள்ள கருத்துகணிப்பு முடிவுகளை முதலீட்டாளர்கள் வரவேற்றுள்ளனர். இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் அதிரடியாக உயர்ந்துள்ளதால், ரூபாய் மதிப்பும் உயர்வுடன் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (மே 20, காலை 9.15 மணி நிலவரம்) டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 79 காசுகள் உயர்ந்து 69.44 ஆக உள்ளன. முன்னதாக கடந்த வார இறுதியில் ரூபாயின் மதிப்பு 70.23 ஆக இருந்தது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X