கரன்சி ருசி கண்ட பூனை... உருட்டுது லஞ்ச பானை!| Dinamalar

'கரன்சி ருசி' கண்ட பூனை... உருட்டுது லஞ்ச பானை!

Updated : மே 21, 2019 | Added : மே 20, 2019
Share
லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின் அலசல், 'டிவி' சேனல்களில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது; ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்தாள், சித்ரா.வெளியே சென்றிருந்த மித்ரா, வீட்டுக்குள் நுழைந்ததுமே, ''என்னக்கா, கருத்து கணிப்புல என்ன சொல்றாங்க...'' என, கிளற ஆரம்பித்தாள்.''இப்ப என்னத்த சொல்றது? நாளை மறுநாள் தெரிஞ்சிடும். பொறுமையா இருப்போமே...'' என்றாள்
 'கரன்சி ருசி' கண்ட பூனை... உருட்டுது லஞ்ச பானை!

லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின் அலசல், 'டிவி' சேனல்களில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது; ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்தாள், சித்ரா.வெளியே சென்றிருந்த மித்ரா, வீட்டுக்குள் நுழைந்ததுமே, ''என்னக்கா, கருத்து கணிப்புல என்ன சொல்றாங்க...'' என, கிளற ஆரம்பித்தாள்.''இப்ப என்னத்த சொல்றது? நாளை மறுநாள் தெரிஞ்சிடும். பொறுமையா இருப்போமே...'' என்றாள் சித்ரா.
''சூலுார்ல, இடைத்தேர்தல் நடந்துச்சே...''''ஆமாப்பா, நானும் போயிருந்தேன். தேர்தல் ஆணையத்தோட செயல்பாடுகளை பத்தி, ஏற்கனவே பல கட்சிக்காரங்களும் ஓட்டு ஓட்டுன்னு ஓட்டுறாங்க. அதுக்குத்தகுந்தபடி, சூலுார் தொகுதியிலும் அநியாயத்துக்கு, விதிமீறல் நடந்துருக்கு.''தி.மு.க., - அ.தி.மு.க., - அ.ம.மு.க., என மூணு கட்சிக்காரங்களும், வளைச்சு வளைச்சு வீட்டுக்கு வீடு, ஓட்டுக்கு பணம் கொடுத்திருக்காங்க. பணம் கொடுத்த ஒருத்தரைக் கூட பறக்கும் படைக்காரங்க பிடிக்கலை.
ஏ.டி.எம்.,ல பணம் வைக்கப்போற வண்டிங்களை மட்டுமே பிடிச்சு கணக்கு காட்டியிருக்காங்க.''பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படை, வீடியோ கண்காணிப்பு படைன்னு, விதம் விதமா பேரை வெச்சுட்டு, அதிகாரிங்க, என்னதான் செஞ்சாங்களோன்னு மக்கள் பேசிக்கிறாங்க. இதுமட்டுமா, மதுக்கடைகளை மூடணும்; பார்களை மூடணும்னு உத்தரவு போட்டிருந்தாங்க.
கடைகளை மட்டும் மூடிட்டு, பார்களை தெறந்து வெச்சு, செம கலெக் ஷன் பார்த்துட்டாங்க. போலீஸ் 'சப்போர்ட்' இல்லாம இதெல்லாம் நடக்குமான்னும் மக்கள் கேக்குறாங்க,'' என, விவரித்தாள் சித்ரா.''அதெல்லாம் சரி, கோவை மாவட்ட போலீசுல ஒரு கறுப்பு ஆடு இருக்குனு பேசிக்கிறாங்களே...'' என, நோண்டினாள் மித்ரா.அதற்கு, சித்ரா, ''சொல்றேன்... பொறுமையா இரு. கோவை மாவட்ட போலீசுல ஒரு இன்ஸ்., தனக்கு வேண்டாத எஸ்.ஐ.,க்களையும், மேலதிகாரிங்க கிட்ட உளவு சொல்லும் போலீஸ்காரங்களையும், ஆளுங்கட்சிக்காரங்க மூலமா, 'டிரான்ஸ்பர்' செய்யுற வேலையை செஞ்சிட்டு இருக்காராம். ''இதுக்காக, கட்சிக்காரங்களோடு நெருக்கமா இருக்காரு. கடுப்புல இருக்கிற போலீஸ்காரங்க, கறுப்பு ஆட்டை காலி பண்றதுக்கு தயாராகிட்டு இருக்காங்க. எலக் ஷன் முடிவு தெரிஞ்சதுக்கு அப்புறம் 'ரியாக்சன்' வேற லெவல்ல இருக்கும்னு சொல்றாங்க,'' என்றாள்.
''செல்வபுரம் லிமிட்டுல கட்டப்பஞ்சாயத்து ஓவரா நடக்குதாமே...''சேனலை மாற்றிக்கொண்டிருந்த சித்ரா, ''போலீஸ் ஸ்டேஷன்னாலே, கட்டப்பஞ்சாயத்து செய்ற இடமா மாறிடுச்சுப்பா. பத்திரிக்கைக்காரங்க பெயரில், சில பேரு கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல், வசூல் செய்றாங்க, இவுங்கள போலீஸ்காரங்க கூப்பிட்டு விசாரிச்சா, அசோசியேசன் பெயரைச் சொல்லி, மிரட்டுறாங்களாம். செல்வபுரம் லிமிட்டுல தைரியமா பான்மசாலா வசூல், கட்டப்பஞ்சாயத்து செஞ்சிட்டு இருக்காங்க. இவுங்க மேல கமிஷனர்தான் துணிச்சலா நடவடிக்கை எடுக்கணும்,'' என்றாள்.வடிவேலு காமெடி சீன், 'டிவி'யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதை பார்த்து சிரித்த மித்ரா, ''கோர்ட் வளாகத்துல ஒரே களேபரமா இருந்துச்சாமே; ஒருத்தரை ஓட ஓட விரட்டி அடிச்சதா கேள்விப்பட்டேனே,'' என, கொக்கி போட்டாள்.அதற்கு சித்ரா, ''வேலை வாங்கிக் கொடுக்கறதா சொல்லி, பலரிடமும், 35 லட்சம் ரூபாய் மோசடி செஞ்ச வழக்கில் ஒரு வக்கீல் கைதானார்.
இவரது மகனுக்கும், இன்னொரு வக்கீலுக்கும் கோர்ட் வராண்டாவில் தகராறு ஏற்பட்டிருக்கு. பார் அசோசியேசனுக்கு புகார் போயிருக்கு.''வக்கீல் மகனை மன்னிப்பு கேட்கச் சொல்லியிருக்காங்க. அவரோ, சங்க நிர்வாகிகளையே நக்கலடித்து, தெனவட்டா பேசியிருக்கிறார். கோபமடைந்த சக வக்கீல்கள், அவரை சூழ்ந்து சரமாரியா கொடுத்திருக்காங்க. கோர்ட் வளாகத்துல ஓட ஓட விரட்டியதால, காயமடைஞ்ச வக்கீல் மகன், தனியார் மருத்துவமனையில் 'அட்மிட்' ஆகியிருக்காரு. ரேஸ்கோர்ஸ் போலீஸ்காரங்க விசாரிக்கிறாங்க,'' என்றாள்.
இருவருக்கும் இஞ்சி டீ, முந்திரி பகோடா கொடுத்தாள் சித்ராவின் தாய்.இஞ்சி டீயை உறிஞ்சிய மித்ரா, அன்றைய நாளிதழ்களை புரட்டினாள். அதில், வைகாசி விசாகத்திருவிழாவை பற்றிய செய்தி வெளியாகி இருந்தது. அதைப்படித்ததும், ''அக்கா, மருதமலையில் ஏதோ பிரச்னையாமே...'' என, இழுத்தாள்.''ஒனக்கும் தெரிஞ்சு போச்சா...'' என்றவாறு, முந்திரி பகோடாவை சுவைத்தாள் சித்ரா.''கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்...'' என, மித்ரா அவசரப்பட, ''இரு, இரு சொல்றேன்.
மருதமலையில தங்கத்தேர் இருக்கு. ரூ.1,500 கட்டுனா, பரிவட்டம் கட்டி, மரியாதை செஞ்சு, தங்கத்தேர் இழுக்கறதுக்கு வாய்ப்பு கொடுப்பாங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, ஒரே நாளில், தேர் இழுக்க, 12 பேர் பணம் செலுத்தியிருக்காங்க.''ஆனா, தேர் இழுக்க எல்லாத்துக்கும் வாய்ப்பு கொடுக்காம விட்டுட்டாங்க. பணம் கட்டிய ஒரு பக்தர் கேள்வி கேட்டிருக்கார். அதுக்கு, கோவில் பணியாளர் தகாத வார்த்தையில ரொம்ப மோசமா பேசியிருக்காரு. 'அப்செட்' ஆன உறவினர்கள், அவரை சுத்தி வளைச்சிருக்காங்க. அவுங்களிடம் தப்பிச்சு, கருவறைக்குள் போயி ஒளிஞ்சிக்கிட்டாரு, அந்த பணியாளர். நிர்வாகம் தரப்புல எந்த நடவடிக்கையும் எடுக்காததால, போலீஸ் விசாரணை நடக்குதாம்...'' என, விளக்கமாக கூறிய சித்ரா, ''அரசு பொருட்காட்சி நடக்குதே; போயிருந்தியா,'' என விசாரித்தாள்.''ஆமாக்கா, போயிருந்தேன்.
எல்லாமே 'காஸ்ட்லி'யா இருந்துச்சு...''''அப்படியா, 10 ரூபா, 20 ரூபாய்க்கெல்லாம் பொருள் இருக்குன்னு சொன்னாங்களே...''''அதெல்லாம், பிளாஸ்டிக் அயிட்டம். நான் சொல்றது, ஸ்நாக்ஸ் அயிட்டம். ரெண்டு மிளகாய் பஜ்ஜி-30 ரூபாய், டில்லி அப்பளம் ரூ.40, ஜிகர்தண்டா ரூ.50, ரோஸ்மில்க், பாதாம்பால் ரூ.30, பஞ்சு மிட்டாய் ரூ.30, ஐஸ்கிரீம் ரூ.20ல இருந்து, 50 ரூபாய் வசூலிக்கிறாங்க.''''ராட்டினமாவது சுத்துனியா? இல்லியா?''''ராட்டினத்துல சுத்துறதுக்கு, 60-70 ரூபாய் கேக்குறாங்க; பர்ஸ் காலியாகிடும்.
ஆனா, குப்பை போடுறதுக்கு தொட்டி வைக்காததால, சுத்தமில்லாம இருக்கு. குழந்தைகள கூட்டிட்டு போன, நோய் தொற்று ஏற்பட்டுடும்,'' என, புலம்பினாள் மித்ரா.''கார்ப்பரேஷன் மேட்டர் எதுவும் சொல்லலையே,'' - வம்புக்கு இழுத்தாள் சித்ரா.'
'அக்கா, கார்ப்பரேஷன்ல, அஞ்சு ஜோன் இருக்கு. 'டவுன் பிளானிங்' செக் ஷன்ல, ஆறு ஏ.டி.பி.ஓ., இருக்காங்க. வெளியூர்ல இருந்து, 'டிரான்ஸ்பராகி' வந்திருக்கிற லேடி அதிகாரிக்கு வேலையே இல்லை. மூணு நாளைக்கு ஒரு தடவை மெயின் ஆபீசுக்கு வர்றாங்க; கையெழுத்து போட்டுட்டு போயிடுறாங்க. வேலையே செய்யாம, மாசம் தவறாமா, சம்பளம் வாங்கிட்டு இருக்காங்க. அவுங்களுக்கு ஏதாவது வேலை கொடுத்தா, நல்லா இருக்கும்னு, பேசிக்கிறாங்க...
''''வேற...''''டெபுடி கமிஷனரா இருந்த லேடி அதிகாரி, ரெவின்யூ டிபார்ட்மென்ட்டுக்கு திரும்பி போயிட்டாங்க. இருந்தாலும், அவங்களுக்கு ஒத்தாசையா இருக்க, கார்ப்பரேஷன்ல இருந்து ரெண்டு ஓ.ஏ.,க்கள் போயிட்டு வர்றாங்களாம். ஊழியர்கள் மத்தியில பரபரப்பா ஓடிட்டு இருக்கு...''''ஓ...''''பழி ஒரு பக்கம்; பாவம் ஒரு பக்கம் என்கிற கதையா இருக்கு,'' -என, புதுசா வாங்கிய கூலிங்கிளாஸை துணியால் துடைத்தபடி, ரூட் மாறினாள் மித்ரா.''யார், என்ன பாவம் செஞ்சாங்க,'' என்றாள் சித்ரா.
அதற்கு, மித்ரா, ''அரசு மருத்துவமனையில, இருதயவியல் துறையில் வேலை பார்த்த ஒரு டாக்டர், பல லட்சம் ரூபாய் செலவில், புதிய கருவி வாங்குனாங்க. அதை பயன்படுத்தாமலே, வீணாக்கிட்டாங்க. விசாரிச்சு அறிக்கை கொடுக்கறதுக்கு, சுகாதாரத்துறை உத்தரவிட்டு இருக்கு. சென்னை ஸ்பெஷல் டீம் விசாரிச்சிருக்கு. டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட பலரும் நஷ்டத்தொகை செலுத்த உத்தரவிட்டிருக்காங்க. ஊழியர்கள் அச்சத்துல இருக்காங்க. ஆஸ்பிட்டல் வட்டாரத்துல இந்த பிரச்னை பெரிசா ஓடிட்டு இருக்கு...'' என்றாள்.''ஜி.எச்., தகவல் எங்கிட்டேயும் இருக்கே,'' என, குதுாகலித்தாள் சித்ரா.'
'என்ன விஷயம் சொல்லுங்க,'' என, கண்ணாடியை அணிந்து கொண்டே ஆர்வமுடன் கேட்டாள் மித்ரா.சூப்பரா இருக்குப்பா என சர்ட்டிபிகேட் கொடுத்த சித்ரா, ''அரசு மருத்துவமனையில் முக்கிய பதவியில் இருக்கும் ஒரு டாக்டரை, பதவியில் இருந்து நீக்கணும்னு, டாக்டர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேத்தி, நிர்வாகத் தரப்புக்கு அனுப்பி இருக்காங்க. எந்த நடவடிக்கையும் எடுக்கலை. புகாருக்கு பின், சம்பந்தப்பட்ட டாக்டருக்கு அதிமுக்கியத்துவம் தருவதா புகார் கெளம்பியிருக்கு,'' என்றபடி, நாளிதழை படிக்க ஆரம்பித்தாள்.''அக்கா, இன்னொரு விஷயம் சொல்ல மறந்திட்டேன்...'' என, இழுத்தாள் மித்ரா.''என்னப்பா, சொல்லு''''போன வருஷம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துல, தனி அலுவலரா இருந்த அதிகாரி, ஊராட்சி எல்லைக்குள்ள வீடு கட்டுறதுக்கு, 'கரன்சி' வாங்கிட்டு, தாராளமா வரைபடம் அனுமதி கொடுத்திருக்காரு. விதிமுறைப்படி, அப்படி கொடுக்கக்கூடாது. கொஞ்ச நாள்ல, அவரு, டிரான்ஸ்பராகி வேற ஊருக்கு போயிட்டாரு.
இப்ப, வேறொரு அதிகாரி இருக்காரு; இவர், வரைபட அனுமதிக்கான விண்ணப்பத்துல கையெழுத்து போடுறதில்லை.''பழைய அதிகாரி, முக்கிய பொறுப்புக்கு திரும்பி வந்திருக்காரு. ருசி கண்ட பூனையாச்சே. ஊராட்சிகள்ல வீடு கட்டுறவங்க விண்ணப்பங்களை வாங்கி, போன வருஷம் தேதியிட்டு, சர்வ சாதாரணமா, 'அப்ரூவல்' கொடுத்துக்கிட்டு இருக்காரு. இந்த அதிகாரிக்கு அதிகாரமே இல்லை; இருந்தாலும், பிரச்னை வந்தா, பின்னால பார்த்துக்கலாம்னு துணிஞ்சு செய்றாரு. எல்லாம், 'கரன்சி' செய்ற வேலை,'' என்றவாறு, 'டிவி' நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X