இதே நாளில் அன்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : மே 21, 2019
  இதே நாளில் அன்று

மே 22, 1940 பி.விருத்தாசலம்:
தஞ்சை, மேலத்திருப்பூந்துருத்தியில், 1940, மே 22ல், எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். புலவர் பட்டம், தமிழாசிரியர் பயிற்சி, முதுகலையிலும் பட்டம் என, தகுதிகள் பெற்றுள்ளார்.சென்னையில், மேல்நிலைப் பள்ளிகளில், தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். தஞ்சை, கரந்தைத் தமிழ்ச்சங்கப் புலவர் கல்லுாரியில், பேராசிரியராகவும், துணை முதல்வராகவும், பொறுப்பு முதல்வராகவும் பணியாற்றினார்.இதையடுத்து, 70 நாடுகளை உள்ளடக்கிய, உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத் தலைவராகப் பொறுப்பேற்றார். 2007ல், பன்னிரு திருமுறைகள் பாதுகாப்பு மாநாட்டை, கரந்தைத் தமிழ்ச் சங்கவளாகத்தில் நடத்தினார்.தன், ஓய்வூதிய நிதியில், தஞ்சை வெண்ணாற்றங்கரையில், 7.5 ஏக்கர் நிலம் வாங்கி, தனித்தமிழ் புலவர் படிப்பும், தமிழாசிரியர் பயிற்சி வகுப்பும் நடத்தினார். 'மரூஉ மொழிகளும் வழூஉ மொழிகளும், சிந்தனைச்சுடர்' உள்ளிட்ட, எட்டுக்கும் மேற்பட்ட நுால்கள் எழுதியுள்ளார்.'தமிழ்ச் சான்றோர், குறள் நெறிக் காவலர், தமிழ்ப் பேரவைச் செம்மல், மாமன்னன் ராசராசன்' என, எண்ணற்ற விருதுகள் பெற்றுள்ளார். 2010, நவ., 17ல் காலமானார். தமிழ் மொழிக்கு தொண்டாற்றிய, பி.விருத்தாசலம் பிறந்த தினம் இன்று!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X