ஹிந்து என சான்றிதழ் அளிக்காததால் புனித யாத்திரைக்கான மானியம் கட்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஹிந்து என சான்றிதழ் அளிக்காததால் புனித யாத்திரைக்கான மானியம் 'கட்'

Added : மே 21, 2019 | கருத்துகள் (1)

சென்னை, மானசரோவர் முக்திநாத் புனித யாத்திரைக்கான மானியம் கோரிய பலரின் விண்ணப்பங்கள் ஹிந்து என சான்றிதழ் அளிக்காததால் நிராகரிக்கப்பட்டிருப்பது யாத்திரை சென்றவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.சீனாவில் உள்ள மானசரோவர், நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய தலங்களில் புனித யாத்திரை செய்தவர்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தை அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. மானசரோவர் பயணித்தவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாயும், முக்திநாத் பயணித்தவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் அரசு மானியமாக வழங்குகிறது.முதல் முறையாக பயணிப்பவர்களுக்கு மட்டுமே இந்த மானியம் கிடைக்கும். இந்த ஆண்டு புனித பயணம் மேற்கொண்ட 500க்கும் மேற்பட்டோர் மானியம் கோரி விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் பலரது விண்ணப்பங்களை அறநிலையத்துறை நிராகரித்துள்ளது.இதற்கு விண்ணப்பதாரர்கள் ஹிந்து என சான்றிதழ் அளிக்காதது தான் காரணம் என கூறப்படுகிறது. அறநிலையத்துறையின் இந்த நடவடிக்கைக்கு மானியம் கோரி விண்ணபித்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.யாத்திரிகர்கள் தரப்பில் கூறியதாவது: விண்ணப்பத்தில் ஹிந்து என்பதற்கான சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தாசில்தார் அலுவலகத்தில் ஹிந்து என்பதற்கான சான்றிதழ் வழங்க ஆதாரம் கேட்கின்றனர்.படித்தவர்களுக்கு பிரச்னை இருப்பதில்லை. படிக்காதவர்களுக்கு சான்றிதழ் எங்கிருந்து வாங்குவது. நாங்கள் ஹிந்து என்பதற்கு எந்த ஆதாரத்தை காட்டுவது என புரியவில்லை.மானசரோவர், முக்திநாத் புனித பயணத்திற்கு இஸ்லாமியரும், கிறிஸ்தவர்களும் ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து பயணிப்பார்களா?இந்த அடிப்படை கூட இல்லாமல் ஹிந்து என சான்றிதழ் கேட்கின்றனர். விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு அந்த மானிய தொகை அரசுக்கு திரும்ப செல்லும் வாய்ப்பு உள்ளது. இது குறித்து அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுத்து புனிதப் பயணம் செய்த தகுதியானவர்களுக்கு மானியம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடி செல்வதை தவிர வேறு வழியில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X