கோலாலம்பூர்: வளர்ந்த நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் குப்பைகளை, அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்ப மலேசியா முடிவு செய்துள்ளது. இதனையே, இந்தியாவும் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பழைய பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்ய சீனா தடை விதித்ததை தொடர்ந்து, பிளாஸ்டிக் குப்பைகள் மலேசியாவிற்கு அதிகளவில் கொண்டு வரப்படுகின்றன. பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலைகள் அங்கு அதிகளவில் செயல்படுகின்றன. இவற்றில் பல லைசென்ஸ் இல்லாமல் செயல்படுகின்றன. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக பொது மக்கள் பலர் புகார் தெரிவித்துள்ளனர். வளர்ந்த நாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் குப்பைகள் பெரும்பாலானவை தரம் குறைந்தவையாகவும், அவை மறுசுழற்சி முடியாத அளவுக்கு உள்ளன.
இது தொடர்பாக அந்நாட்டு சுற்றுச்சூழல், எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச்சர் யோ பீ யீன் கூறுகையில், இந்த மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகளை மீண்டும், எங்கிருந்து கொண்டு வரப்பட்டதோ, அங்கேயே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற பொருட்களை அனுப்பும் போது வளர்ந்த நாடுகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். பிளாஸ்டிக் குப்பைகளை மலேசியாவிற்கு அனுப்புவது ஐநா விதிகளை மீறிய செயல். 5 கன்டெயனர்களில் கடத்தி கொண்டு வரப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை ஸ்பெயினுக்கு திருப்பி அனுப்பியுள்ளோம். மற்ற பிளாஸ்டிக் பொருட்களை அடுத்த வாரம் முதல் அனுப்பி வைக்கப்படும் என்றார்.
அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் இருந்து தான் அதிகளவு பிளாஸ்டிக் பொருட்கள் மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த 2016 ல் 168,500 டன்னும், 2017 ல் 316,600 டன்னும், 2018 ஜனவரி முதல் ஜூலை வரை 456,000 டன் பிளாஸ்டிக் பொருட்கள் மலேசியாவிற்கு வந்துள்ளன. மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்கள் எரிக்கப்படுவதால், அதிலிருந்து வெளிப்படும் வேதிபொருட்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. நிலம் மற்றும் தண்ணீர் வளங்கள் மாசுபடுகின்றன.

சுவிட்சர்லாந்தின் பசெல் நகரில் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் ஏற்றுமதி குறித்து 180 நாடுகள் ஒரு மித்த முடிவுக்கு வந்தன. சுற்றுச்சூழல் மற்றும் மனிதர்கள் நலனுக்காக பிளாஸ்டிக் கழிவு பொருட்களை ஏற்றுமதி செய்வதை ஒழுங்குபடுத்த ஒப்பு கொண்டன. ஆனால், உலகளவில் பிளாஸ்டிக் கழிவுபொருட்களை ஏற்றுமதி செய்வதில் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா, இதனை ஏற்று கொள்ள மறுக்கிறது.
இந்த ஒப்பந்தம் குறித்து மலேசிய அமைச்சர் யோ பீ யீன் இந்த ஒப்பந்தமானது,, வளர்ந்த நாடுகள் பிளாஸ்டிக் குப்பைகளை திருப்பி அனுப்புவதற்கு கட்டுப்பாடு விதிக்கும். வளர்ந்த நாடுகள், மலேசியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் குப்பைகளை குவிப்பது சரியானது அல்ல. குப்பைகளை வளர்ந்த நாடுகளில் இருந்து வளரும் நாடுகளில் குப்பை அனுப்பப்படும் பிரச்னை முடிவுக்கு வரும் என்றார்.
இந்தியாவிலும் வளர்ந்த நாடுகளில் இருந்து பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து வருகின்றன. இதனால், பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளன. இதனை சமாளிக்க, மலேசியாவை போல், பிளாஸ்டிக் குப்பைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டதோ, அந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE