சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒப்பந்ததாரர், டேங்க் ஆப்பரேட்டரை மாற்றுங்க...: மக்கள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

Added : மே 23, 2019
Advertisement

வீரபாண்டி: ஒப்பந்ததாரர், டேங்க் ஆப்பரேட்டரை மாற்றக்கோரி, மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டதால், இளம்பிள்ளை - காகாபாளையம் சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே, பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சியில், வறட்சியால், ஆழ்துளை குழாய் கிணறுகள் வறண்டுவிட்டன. காவிரி குடிநீரை நம்பியிருந்த மக்களுக்கு, இரு மாதங்களாக, அந்த நீரும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து, பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி அதிகாரிகள், வீரபாண்டி ஒன்றிய அதிகாரிகளிடம், மக்கள் மனு அளித்தும் பலனில்லை. ஆத்திரமடைந்த மக்கள், நேற்று காலை, 8:00 மணிக்கு, காலிக்குடங்களுடன், இளம்பிள்ளை - காகாபாளையம் சாலையில், பெருமாகவுண்டம்பட்டி பஸ் ஸ்டாப்பில், மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, மக்கள் கூறியதாவது: தொட்டிக்கு வரும் காவிரி கூட்டுக் குடிநீர் இணைப்பை, ஒப்பந்ததாரர் துண்டித்துவிட்டார். இரு மாதங்களாக குடிநீர் வரவில்லை. ஜவுளி உற்பத்தியாளர்கள், தொழிலதிபர்கள் வீடுகளுக்கு மட்டும், டேங்க் ஆப்பரேட்டர் கணிசமான தொகை பெற்றுக்கொண்டு, குடிநீர் வினியோகிக்கிறார். மேலும், குடிநீர் வடிகால் வாரிய பிரதான குழாயில், பலர் திருட்டுத்தனமாக, இணைப்பு ஏற்படுத்தி, மோட்டார் வைத்து, குடிநீர் உறிஞ்சுகின்றனர். வாரிய பிரதான குழாயில், தினமும், ஏராளமான குடிநீர் வீணாகி, சாக்கடையில் கலக்கிறது. இதை, எந்த அதிகாரியும் கண்டுகொள்வதில்லை. ஒப்பந்ததாரர், டேங்க் ஆப்பரேட்டரை இடமாற்றம் செய்து, உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மகுடஞ்சாவடி போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைந்து போகச் செய்தனர். ஆனால், அங்கிருந்து சென்ற மக்கள், பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, திறக்கவிடாமல் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது, வீரபாண்டி பி.டி.ஓ., திருவேரங்கன், 'உடனடியாக மேல்நிலை தொட்டிக்கு குடிநீர் ஏற்றி வினியோகிக்கப்படும். இரு நாளுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படும்' என, உறுதியளித்தார். இதையடுத்து, மக்கள் தர்ணாவை கைவிட்டனர். இச்சம்பவத்தால், இரண்டு மணி நேரம் தாமதமாக, ஊராட்சி அலுவலகம் திறக்கப்பட்டது. மேலும், சாலை மறியலால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

20 நாளாக தவிப்பு: வாழப்பாடி, சந்திரபிள்ளை வலசு ஊராட்சி, பள்ளத்தாதனூரில், 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அங்கு, 20 நாளுக்கு மேலாக, மேட்டூர் குடிநீர், ஆழ்துளை குழாய் தண்ணீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள், நேற்று காலை, 9:00 மணிக்கு, கருமந்துறை சாலையில், பள்ளத்தாதனூர் பஸ் ஸ்டாப் அருகே, காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். வாழப்பாடி போலீசார், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, முறையாக குடிநீர் வினியோகிக்கப்படும் என, உறுதியளித்ததால், மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X