பொது செய்தி

தமிழ்நாடு

குறுவை சாகுபடிக்கு தண்ணீர்: தமிழக அரசு வலியுறுத்தல்

Added : மே 24, 2019
Advertisement
குறுவை சாகுபடிக்கு தண்ணீர்: தமிழக அரசு வலியுறுத்தல்

'குறுவை சாகுபடியை காப்பாற்ற, வரும் ஜூன் மாதத்துக்குரிய பங்கீடான, 9.2 டி.எம்.சி., தண்ணீரை, உடனடியாக திறந்துவிட உத்தரவிட வேண்டும்' என, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவிடம், தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.சுப்ரீம்கோர்ட் உத்தர வின்படி, கர்நாடகா மாநிலம், தமிழகத்துக்கு, ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., அளவு தண்ணீரை, காவிரியில் திறந்துவிட வேண்டும்.இந்த பங்கீட்டை உறுதிப்படுத்துவதற்கும், தண்ணீரின் அளவை கண்காணிப்பதற்கும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டன.விதிமுறைகளின்படி, இந்த குழுக்களின் கூட்டம், மாதந்தோறும் கூடி, ஆலோசனை நடத்த வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை.கடைசியாக, டிசம்பர் 3ல், ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில், கர்நாடகாவில், மேகதாது அணை கட்டுவதற்காக, சுற்றுச்சூழலை ஆராய்ந்து, சாத்தியக்கூறு அறிக்கையை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட அனுமதி, கடும் வாக்குவாதத்தை ஏற்படுத்தியது.அதன்பிறகு, ஒழுங்காற்றுக் குழு, எந்த முடிவும் எடுக்காமல், அமைதி காத்து வந்த நிலையில், நேற்று டில்லியில், மீண்டும் கூடி, ஆலோசனை நடத்தியது.குழுவின் தலைவர், நவீன் குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழக அரசின் சார்பில், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் செல்வராஜ், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்ரமணியம், உதவித் தலைவர் கே.எஸ்.ராம்குமார், உறுப்பினர் பட்டாபிராமன், உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன் ஆகியோர், கலந்து கொண்டனர்.காவிரி நதிநீர் பங்கீட்டில் சம்பந்தப்பட்ட, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அரசுகளின் நீர்வளத்துறை உயர் அதிகாரிகளும், கூட்டத்தில் கலந்து கொண்டனர்.கூட்டம் துவங்கியதும், காவிரி நதி நீரில் தங்களுக்கு தர வேண்டிய பங்கீடுகளின் அளவுகள் குறித்து, அனைத்து மாநிலங்களும் விபரங்களை அளித்தன.அணைகளில் உள்ள தண்ணீரின் கையிருப்பு குறித்த விபரங்களும் ஆராயப்பட்டன.அப்போது, தமிழக தரப்பில், குறுவை சாகுபடி பற்றிய விபரமும், அதற்காக, ஜூன் மாதத்தில் மேட்டூர் அணையை திறந்தாக வேண்டியதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தப்பட்டது.'ஜூன் மாதத்தில் மட்டும், 9.2 டி.எம்.சி., அளவு தண்ணீர், தமிழகத்கின் பங்காக வந்து சேர வேண்டும்; அந்த தண்ணீரை, கர்நாடகா, உடனடியாக திறந்துவிட வேண்டும்' என, தமிழகத்தின் சார்பில், வலியுறுத்தப்பட்டது.இருப்பினும், இதுகுறித்து, இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.இந்நிலையில், வரும் 28 ம் தேதி, காவிரி மேலாண்மை வாரியத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.அக்கூட்டத்தில், குறுவை சாகுபடிக்கான தண்ணீரை திறந்து விட வேண்டுமென்ற தமிழகத்தின் கோரிக்கை, பரிசீலிக்கப்பட வாய்ப்புள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. - நமது டில்லி நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X