ஓட்டு எண்ணிக்கை நாளில் மது விற்பனை தாராளம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணிக்கை நாளில் மது விற்பனை தாராளம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

Added : மே 24, 2019

திருப்பூர்:திருப்பூர் உட்பட பல்வேறு இடங்களில் நேற்று தடை மீறி மது விற்பனை செய்யப்பட்டது.லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதன்படி டாஸ்மாக் மதுக்கடைகள், அவற்றுடன் இணைக்கப்பட்ட பார்கள் உள்ளிட்டவை நேற்று அடைக்கப்பட வேண்டும். 'மீறி மது விற்றால், உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல், திருப்பூர், பல்லடம், அவிநாசி உள்ளிட்ட இடங்களில், மது விற்பனை சக்கைப்போடு போட்டது. மதுக்கடைகள் அருகிலும், பார்களில் சிறிய சந்துகள் வழியாகவும், கூடுதல் விலைக்கு மது விற்கப்பட்டது. அதிகாலை முதலே இந்த விற்பனை துவங்கிவிட்டது.ஓட்டு எண்ணிக்கையையொட்டி, தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்வதற்காக, பலர் பணிக்குச் செல்வதில்லை. இவர்களில் சிலர், தடை மீறி விற்கப்பட்ட மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு வாங்கினர்.ஓட்டுப்பதிவை முன்னிட்டு, மது விற்பனை தடை செய்யப்பட்டிருந்தது. அப்போது, தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி இருந்ததால், தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது. அதையும் மீறி, மது விற்பனை நடக்கத்தான் செய்தது. நேற்று, மது விற்பனை குறித்து அந்தளவு கண்காணிப்பு இல்லை. இதனால், 'குடி'மகன்கள் உற்சாகமாக, எந்தத் தடையுமின்றி குடித்தனர். மது பார்களும் லாபம் பார்த்தன. சிலர், மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி வைத்தும் கள்ளத்தனமாக விற்று சம்பாதித்தனர். திருப்பூர் மட்டுமின்றி, பல மாவட்டங்களிலும் இதுதான் நிலைமை.ஓட்டு எண்ணிக்கை நாளில், பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிரக் கவனம் செலுத்திய மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும், மது விற்பனையைக் கண்டுகொள்ளவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X