கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் கவுதமசிகாமணி வெற்றியை, கூட்டணி கட்சியினர் தொகுதி முழுவதும் கொண்டாடினர்.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் தி.மு.க., சார்பில், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி, அ.தி.மு.க., கூட்டணி சார்பில் தே.மு.தி.க., துணைச் செயலர் சுதீஷ், அ.ம.மு.க., வேட்பாளர் கோமுகி மணியன், மக்கள் நீதி மய்யம் கணேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் சர்புதீன் உட்பட 24 பேர் போட்டியிட்டனர்.இதில், நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட முடிவில் கவுதம சிகாமணி 7 லட்சத்து 23 ஆயிரத்து 58 ஓட்டுகள் பெற்றார். இவர் 4 லட்சத்து 1,848 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 3 லட்சத்து 21 ஆயிரத்து 210 ஓட்டுகள் பெற்று சுதீஷ் தோல்வியடைந்தார்.துவக்கத்தில் இருந்தே கவுதமசிகாமணி முன்னிலை பெற்றதால், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தொகுதி முழுவதும் பட்டாசு வெடித்து, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இறுதியாக வெற்றி அறிவிப்பு வெளியானதும், அக்கட்சியின், கூட்டணி நிர்வாகிகள் திரளாக சென்று, அந்தந்த ஊர்களில், பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.