அ.தி.மு.க., விடம் இருந்து சிதம்பரம் லோக்சபா தொகுதி... பறிபோனது!| Dinamalar

தமிழ்நாடு

அ.தி.மு.க., விடம் இருந்து சிதம்பரம் லோக்சபா தொகுதி... பறிபோனது!

Added : மே 25, 2019 | கருத்துகள் (13)
Share
அ.தி.மு.க., விடம் இருந்து சிதம்பரம் லோக்சபா தொகுதி... பறிபோனது!

சிதம்பரம் : சிதம்பரம் லோக்சபா தொகுதியில், அ.ம.மு.க., வாங்கிய ஓட்டுக்கள், அ.தி.மு.க.,வேட்பாளரின் வெற்றியை தகர்த்து விட்டது.

சிதம்பரம் தொகுதியில் அ.தி.மு.க.,சார்பில் சந்திரசேகரும், தி.மு.க., கூட்டணி சார்பில் வி.சி., கட்சியின் தலைவர் திருமாவளவனும் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 13 வேட்பாளர்களில், அ.தி.மு.க.,வேட்பாளர் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டார். மீதமுள்ள 12 பேர்களில் திருமாவளவன் உள்ளிட்ட அனைவரும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டனர்.

குறைந்த ஓட்டு வித்தியாசம்சிதம்பரம் லோக்சபா தொகுதியில், மொத்தமுள்ள 14,79,108 ஓட்டுகளில், 11,49,538 ஓட்டுகள் பதிவாகியது. தேர்தலில் அ.தி.மு.க.,விற்கும், வி.சி.,கட்சிக்கும் இடையே நேரடி போட்டி இருந்தது. இதில் அ.தி.மு.க.,சார்பில் போட்டியிட்ட சந்திரசேகரை விட, வி.சி.கட்சி தலைவர் திருமாவளவன் 3,219 ஓட்டுக்கள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இந்த தொகுதியில் போட்டியிட்ட அ.ம.மு.க.,வேட்பாளர் இளவரசன் 62,308 ஓட்டுக்கள் பெற்றார். நாம் தமிழர் கட்சி சிவஜோதி 37,471 ஓட்டுக்களும், ம.நீ.மையம் ரவி 15,334 ஓட்டுக்களும் பெற்றனர். அ.தி.மு.க., வருத்தம் சிதம்பரம் தொகுதி ஆரம்பத்திலிருந்தே அ.தி.மு.க.,விற்கு சாதகமான தொகுதியாக இருந்து வந்தது. கடைசி கட்டத்தில் நிலைமை தலைகீழாக மாறி, வி.சி., கட்சி குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அ.தி.மு.க.,கூட்டணி கட்சி தொண்டர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் லோக்சபா தொகுதியை பொறுத்த மட்டில், காங்.,கட்சி அதிகபட்சமாக 6 முறை வெற்றி பெற்றுள்ளது. இதற்கடுத்து தி.மு.க., நான்கு முறையும், அ.தி.மு.க.,இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2009 தேர்தலில் முதன் முறையாக வி.சி., கட்சியின் திருமாவளவன் வெற்றி பெற்றார். தற்போது நடந்த தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். அ.தி.மு.க.,விற்கு சாதகம்கடந்த 2014 தேர்தலில், இந்த தொகுதியில் அ.தி.மு.க.,தனித்து போட்டியிட்டது. இதில் அ.தி.மு.க,வேட்பாளர் சந்திரகாசு, எதிர்த்து போட்டியிட்ட திருமாவளவனை விட, 1,28,495 ஓட்டுக்கள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட பா.ம.க.,வேட்பாளர் சுதா 2,79,016 ஓட்டுக்கள் பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

தப்பு கணக்கு :
இந்த தேர்தலில் அ.தி.மு.க.,உடன் பா.ம.க.,கூட்டணி வைத்திருந்ததால், அ.தி.மு.க.,வேட்பாளர் சந்திரசேகர் சுலபமாக வெற்றி பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், திருமாவளவன் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அ.ம.மு.க., பாதிப்பு:
இத்தொகுதியில் அ.ம.மு.க., சார்பில் போட்டியிட்ட இளவரசன் 62,308 ஓட்டுக்கள் வாங்கினார். ஒருங்கிணைந்த அ.தி.மு.க.,வாக இருந்திருந்தால், இந்த ஓட்டுக்கள் அனைத்தும் அ.தி.மு.க., வேட்பாளருக்கு சென்றிருக்கும்.தனியாக பிரிந்து நின்றதால் , இந்த ஓட்டுக்கள் அனைத்தும் திருமாவளவன் வெற்றிக்கு சாதகமாக போய்விட்டது. ஒத்துழைப்பு இல்லை தி.மு.க.,கூட்டணி கட்சியினர் ஒருங்கிணைந்து, திருமாவளவன் வெற்றிக்கு தோல் கொடுத்தது போல், அ.தி.மு.க.,கூட்டணி கட்சியினர், வேட்பாளர் சந்திரசேகரின் வெற்றிக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தேர்தல் பொறுப்பாளர் இல்லை:
கடந்த 2014 தேர்தலில், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவனுக்கு செக் வைக்கும் வகையில், அப்போதிருந்த முதல்வர் ஜெ.,தேர்தல் நுணுக்கங்களை தெரிந்த முன்னாள் அமைச்சர் செங்கேட்டையனை, சிதம்பரம் லோக்சபா தொகுதி பொறுப்பாளராக நியமித்தார்.இதனால் தேர்தல் களத்திற்கு புதியவரான அ.தி.மு.க.,வேட்பாளர் சந்திரகாசி லட்சக்கணக்கு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் தற்போது நடந்த தேர்தலில் சிதம்பரம் தொகுதிக்கு கட்சியின் தலைமை யாரையும் பொறுப்பாளராக நியமிக்கவில்லை. இதுவும் தோல்விக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X