இந்தியா இன்னும் முன்னேறும்!

Updated : மே 26, 2019 | Added : மே 26, 2019 | கருத்துகள் (4) | |
Advertisement
உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடான, நம் நாட்டில், 17வது லோக்சபாவுக்கான, தேர்தல் திருவிழா முடிந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மீண்டும், பா.ஜ., கூட்டணி அரசு, ஆட்சியை தொடர உள்ளது.பா.ஜ.,வை வீழ்த்த, எதிர்க்கட்சிகள் கையிலெடுத்த, 'ஹிந்துத்வா எதிர்ப்பு கொள்கை' என்ற ஆயுதம், 'பூமரங்' எனப்படும், வீசினால் மீண்டும் தன்னையே தாக்க வரும் போர்க்கருவி போல, திரும்பி வந்து,
உரத்த சிந்தனை, இந்தியா, மோடி, பா.ஜ., பிரதமர், எதிர்க்கட்சிகள், ராகுல், சந்திரபாபுநாயுடு, மம்தா,

உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடான, நம் நாட்டில், 17வது லோக்சபாவுக்கான, தேர்தல் திருவிழா முடிந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மீண்டும், பா.ஜ., கூட்டணி அரசு, ஆட்சியை தொடர உள்ளது.பா.ஜ.,வை வீழ்த்த, எதிர்க்கட்சிகள் கையிலெடுத்த, 'ஹிந்துத்வா எதிர்ப்பு கொள்கை' என்ற ஆயுதம், 'பூமரங்' எனப்படும், வீசினால் மீண்டும் தன்னையே தாக்க வரும் போர்க்கருவி போல, திரும்பி வந்து, எதிர்க்கட்சிகளை வீழ்த்தி, படுபாதாளத்தில் தள்ளி விட்டது.

நம் நாட்டில், பயங்கர வாதிகளின் தாக்குதல்களால், அப்பாவி மக்கள், ராணுவ வீரர்கள் கொடூர மாக கொல்லப்பட்ட போது, இந்த, மதச்சார்பற்ற கூட்டணியினர், வாய் திறந்து கண்டனம் தெரிவிக்காமல், மவுனம் சாதித்ததை, மக்கள் அமைதியாக கவனித்து வந்துள்ளனர்.அதன் விளைவு தான், மவுனப் புரட்சியாக வந்த, தேர்தல் முடிவுகள்!தேர்தல் பிரசாரத்தின் போது, மோடியின் மீது தொடுக்கப்பட்ட தனிப்பட்ட, தரக்குறைவான தாக்குதல்கள், மக்களை முகம் சுளிக்க வைத்தன.இந்த மாபெரும் ஜனநாயக நாட்டின் தலைவரான பிரதமரை, 'திருடன்' என, காங்கிரஸ் தலைவர், ராகுல் கூறினார். 'தாலி கட்டிய மனைவியை கைவிட்டு, மோசம் செய்தவர் மோடி' என, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர், மாயாவதி இழிவுபடுத்தினார்.'தேர்தல் முடிவுகளை, பா.ஜ.,வுக்கு சாதகமாக மாற்ற, எந்த தவறுகளையும் செய்ய, மோடி முன் வருவார். 'அத்தகைய மோசடி நாடகத்தின் ஒரு அங்கமே, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியீடுகள்' என, பெரிய மாநிலங்களில் ஒன்றான, மேற்கு வங்கத்தின் முதல்வர், மம்தா பானர்ஜி, தரம் தாழ்ந்து கூறினார்.'மோடியிடம், தேர்தல் ஆணையம் சரணாகதி அடைந்து விட்டது' என, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து, தேர்தல் ஆணையம் மீது, சேற்றை வாரி இறைத்தன.ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டில்லி முதல்வருமான, அரவிந்த் கெஜ்ரிவால், 'என்னைக் கொல்வதற்கு, மத்திய அரசு சதி செய்கிறது' எனக் கூறி, சுய விளம்பரம் தேடிக் கொண்டார். 'குகையில்,- சுடுகாட்டில் தியானம் செய்து, கிளி ஜோசியம் பார்த்து, அரசியல் நடத்துபவர்கள், பா.ஜ.,வினர்' என, மூத்த, காங்கிரஸ் தலைவர், இளங்கோவன் இழிவுபடுத்தினார்.கடந்த, 2018 நவம்பரில் நடந்த, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல்களில், ஆளும் கட்சியாக இருந்த, பா.ஜ., தோல்வியடைந்து, மூன்று மாநிலங்களிலும், காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன் வெற்றி, -வெறும், 0.5 சதவீத ஓட்டு வித்தியாசம் தான்!அப்போது நினைத்திருந்தால், மாநிலத்திலும், -மத்தியிலும், ஆளும் கட்சியாக இருந்த, பா.ஜ., தில்லுமுல்லு செய்து, மீண்டும் ஆட்சியை பிடித்திருக்க முடியும்!தோல்வி அடையும் எதிர்க்கட்சிகள், பழியை, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீது போடுவதை பார்த்து, தேர்தல் ஆணையம், கடந்த ஆண்டு கவலை அடைந்தது. உடனே, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.'எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என நிரூபிப்பவர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் அதை செய்து காட்டலாம்' என, சவால் விடுத்தது. அப்போது, எந்த எதிர்க்கட்சிகளும் முன் வரவில்லை. ஆனால், தங்களுக்கு எதிராக மக்கள் ஓட்டளித்துள்ளனர் என்பதை, எப்படியோ அறிந்த அந்த கட்சிகள், ஓட்டுப்பதிவு இயந்திரத்தை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட் படிகளில் ஏறின. எனினும், அவர்கள் கோரிக்கை நிறைவேறவில்லை.பிரதமர் கனவில் மிதந்த, மாயாவதி, மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ் போன்றோர், சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தனர். அந்த வேளையில், முந்திரிக்கொட்டை போல, தானாக முந்திய, தி.மு.க., தலைவர், ஸ்டாலின், 'அடுத்த பிரதமர் ராகுல் தான்' என, சென்னை கூட்டத்தில் பிரகடனப்படுத்தினார்; 'கிங் மேக்கர்' என, 'பந்தா' காட்டிக் கொண்டார்.அத்தோடு விட்டாரா... மேற்கு வங்கத்தில் நடைபெற்ற அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், அங்கிருந்த பிற கட்சி தலைவர்களின் மனநிலையைப் புரிந்து, பிரதமர் வேட்பாளர் குறித்து வாய்மூடி மவுனியாக இருந்தார்.இது, அவரின் தேசிய அரசியல் முதிர்ச்சியின்மையை பறை சாற்றியது.தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், பா.ஜ.,வுக்கு சாதகமாக இருந்ததை அறிந்த நிருபர்கள், ஸ்டாலினிடம், 'மத்தியில் அமையும் புதிய அமைச்சரவையில், தி.மு.க., பங்கு பெறுமா?' என, கேட்ட போது, 'ஓட்டு எண்ணிக்கைக்குப் பிறகு பரிசீலிக்கப்படும்' என, பச்சோந்தித்தனமாக- பதில் தந்தார். அது, மக்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்தவுடன், யாருக்கும் தனிப் பெரும்பான்மை இன்றி, தொங்கு பார்லிமென்ட் அமைந்தால், அரசியல் அமைப்பு சட்டப்படி, அதிக இடங்களைப் பெற்ற கட்சியை, ஆட்சி அமைக்க, ஜனாதிபதி அழைப்பு விடுப்பார்.இந்த நடைமுறைக்கு எதிராக, தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே, எதிர்க்கட்சிகள் கூட்டாக சேர்ந்து, ஜனாதிபதியை சந்தித்து, 'ஒரு வேளை தொங்கு பார்லிமென்ட் அமைந்தால், தனிப்பெரும் எண்ணிக்கை இருந்தாலும், பா.ஜ.,வை ஆட்சி அமைக்க, அழைப்பு விடுக்கக்கூடாது' என, கேலிக்கூத்தான கோரிக்கை வைத்தன.'பண மதிப்பு இழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறையை அமல்படுத்தியது போன்றவற்றால், பொதுமக்கள் மிகவும் இன்னலுக்கு ஆளாகினர். 'சிறு, குறு தொழில்கள் நலிவடைந்து விட்டன; விவசாயிகள்- மிகவும் பாதிக்கப்பட்டனர்' என, இந்தியா முழுவதும் எதிர்க் கட்சிகள், கண்டனக் குரல் எழுப்பின. ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் என, வரிந்து கட்டி நின்றன.இந்நிலையில், மக்களின் அபிரிமிதமான ஆதரவு, பா.ஜ.,வுக்கு எப்படி கிடைத்தது என, பார்ப்போம்!விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு, 6,000 ரூபாய் நிதியுதவி, முழுவதுமாக சொன்னபடி வினியோகிக்கப்பட்டது. முதல் முதலாக, வீடு வாங்குபவர்களுக்கு பிரதமரின், வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 2.67 லட்சம் ரூபாய் வரை சலுகையை, பல லட்சக்கணக்கான நடுத்தர மக்கள் அனுபவிக்கின்றனர்.நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும், பெண்களின் நலனுக்காக கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது; குடிசை வீடுகள் அகற்றப்பட்டு, தரமான சிறு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன.பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர் ஜாதியினருக்கான, 10 சதவீத இட ஒதுக்கீட்டில் கல்வி, வேலைவாய்ப்பில், பல்லாயிரக்கணக்கானோர் பலன் பெறுகின்றனர். தொலைநோக்கு பார்வையோடு, நதிகள் இணைப்பு திட்டத்திற்கும், தேசிய அளவில், குடிநீருக்காகவும், தனி இலாகா அமைக்க, பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது.'பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால், நாட்டின் பொருளாதாரத்தில் என்ன சாதனை படைக்கப்பட்டது...' என, பொருளாதாரம் தெரியாத சாமானியன் போல, மெத்தப்படித்த, 'பொருளாதார மேதை' சிதம்பரமும், மற்றவர்களும் கேட்பது விந்தையாக உள்ளது.பணமதிப்பு இழப்பு நடவடிக்கை கால கட்டத்தில், பல லட்சம் ரூபாயை வங்கியில் முதலீடு செய்த, 1.5 லட்சம் கணக்குகள், வருமான வரி இலாகாவின் கண்காணிப்பின் கீழ் வந்து உள்ளன. இதன் எதிரொலியாக, அடுத்த ஆண்டிற்குள், பல லட்சம் கோடி ரூபாய், இந்திய அரசுக்கு வருவாயாக வர, பிரகாசமான வாய்ப்பு உள்ளது.வங்கி மோசடி வழக்கில் சிக்கி, வெளிநாட்டில் பதுங்கியுள்ள தொழிலதிபர்கள், விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்றோர் மீது கடுமையான-, விரைவான நடவடிக்கைகள், வெளிநாட்டு நீதிமன்றங்கள் மூலம், மோடி அரசால் எடுக்கப்பட்டுள்ளன. குற்ற வழக்கிலிருந்து அவர்கள் தப்பிக்காத வண்ணம், அவர்களை இந்தியாவிற்கு கொண்டு வர, தீவிர முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்படுகின்றன.ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், நிரந்தர உறுப்பு நாடாக, நம் நாடு இடம்பெற்று, வல்லரசு நாடுகளின் வரிசையில், தலை நிமிர்ந்து, அணிவகுத்து நிற்க, ஏற்கனவே பல முயற்சிகளை, பிரதமர் மோடி மேற்கொண்டு உள்ளார். அதற்காகத் தான் அவர், அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பதும், அரசியல், 'பாமரர்கள்' அறியாதது!நம் நாட்டின் அரசியல் கட்சிகளில், பெரும்பாலானவற்றின் தலைமைப்பீடங்கள், அரச பரம்பரையைப் போல, தொடர்ந்து, வாரிசு அரசியலை வரிந்து கட்டி விளையாடுகின்றன. ஆனால், பா.ஜ.,வில் மட்டும் தான், வாரிசு அரசியல் அணுவளவும் இல்லை. திறமை, நேர்மை, நிர்வாகத்திறன் அடிப்படையில் தான், கட்சி தலைமைக்கும்,- பிரதமர் பதவிக்கும், முக்கிய பொறுப்புகளுக்கும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பா.ஜ.,வில் மட்டுமே காணப்படும் இந்த நடைமுறை, வேறு எந்த கட்சியிலும் காண முடியாத, சிறந்த ஜனநாயக பண்பாடு! இதையும், நாட்டு மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். அதனால் தான், நடந்து முடிந்த தேர்தலில், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணிக்கு, பெருவாரியான வெற்றியை அளித்து உள்ளனர்.பாகிஸ்தானின், 'பாலகோட்' என்ற இடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்து, 200க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்ற நம் ராணுவ துல்லிய தாக்குதலை, பல எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்தன.நாட்டு நலனில், அக்கறையுடன் எடுக்கப்பட்ட அந்த துணிச்சலான ராணுவ நடவடிக்கையை, எதிர்க்கட்சித் தலைவர்கள் கொச்சைப்படுத்தி பேசியது, நியாயமான மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.'பதவிக்காகவும், பணத்திற்காகவும், இத்தகைய எதிர்க்கட்சிகள் எதையும் செய்யத் தயங்க மாட்டர்; எனவே, பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர், மோடி தான். 'அவரை விட, இப்போதைக்கு வேறு யாரும் இல்லை' என்ற முடிவுக்கு, மக்கள் வந்து விட்டனர். அது தான், இந்த தேர்தல் முடிவு!சாதாரண கவுன்சிலராக, ஒன்றிரண்டு ஆண்டுகள் இருந்தாலே, கோடிக்கணக்கில் சொத்துகளை குவிக்கும் ஊழல்வாதிகள், நம் நாட்டில் அதிகம். ஆனால், வளம் கொழிக்கும் குஜராத் மாநிலத்தில், மூன்று முறை முதல்வராகவும், ஐந்து ஆண்டுகள் நாட்டின் பிரதமராகவும் இருக்கும் மோடி மீதும், அவரின் சொத்துக்கணக்கு மீதும், யாரும் குறை சொல்ல முடியுமா? புடம்போட்ட தங்கமாக, தன்னலமற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரின் தலைமையில், நம் நாடு உலக அரங்கில் உன்னதம் காணும்; இது உறுதி!ரிதன்யா

சமூக ஆர்வலர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (4)

Dr. Suriya - சோழ நாடு, பாரதம்.,இந்தியா
27-மே-201911:58:28 IST Report Abuse
Dr. Suriya சூப்பர் சிஸ்டர்
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
27-மே-201908:08:36 IST Report Abuse
ஆரூர் ரங் உண்மையை உரக்கச்சொன்னீர்கள்
Rate this:
Cancel
rajendiran - chennai,இந்தியா
26-மே-201911:47:38 IST Report Abuse
rajendiran அருமையான புரிதல் , இப்போது உள்ள இளைஞர்களுக்கு இது புரிய வேண்டும் , இல்லை என்றால் பிரிவினை வாதிகளின் பிடியில் சிக்கி விடுவார்கள், உலகத்தில் உள்ள அனைத்து பிரிவினை வாத இயக்கங்களும் ஆரம்பத்தில் சிறிய கட்சியாக தொடங்கப்பட்டவை தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X