பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம்

Updated : மே 26, 2019 | Added : மே 26, 2019 | கருத்துகள் (29)
சென்னை,2000 ரூபாய், கள்ள நோட்டு, பதுக்கல், புழக்கம், மோடி, நடவடிக்கை, கறுப்பு பண ஒழிப்பு

சென்னை : கறுப்பு பணத்தை ஒழிக்க அதிரடி நடவடிக்கையாக செல்லாத நோட்டு அறிவிப்பை வெளியிட்ட நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவதால் 2,000 ரூபாய் நோட்டுக்களை பதுக்கியவர்கள் அவற்றை புழக்கத்தில் விட்டு வருகின்றனர்.
அரசியல்வாதிகள் தொழிலபதிபர்கள் முறையாக வரி செலுத்தாமல் தங்களிடம் உள்ள கறுப்பு பணத்தை பினாமி பெயர்களிலும் வெளிநாடுகளிலும் பதுக்கி வருகின்றனர். கறுப்பு பணத்தை ஒழிக்க 500 ரூபாய் 1,000 ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது என 2016 நவம்பர் 8ல் பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார். இதைதொடர்ந்து புதிய 500 ரூபாய் 2,000 ரூபாய் நேட்டுக்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

பொது மக்கள் தங்களிடம் உள்ள பழைய 500 , 1,000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் வழங்கி அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுக்களை பெற்று கொள்ளுமாறு மத்திய அரசு தெரிவித்தது. இதற்கு பொது மக்களிடம் துவக்கத்தில் எதிர்ப்பு எழுந்த நிலையில் அதற்கான காரணம் தெரிந்ததும் அமைதியாகினர். ஒரு நபர் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் தொழிலதிபர்கள் என வசதி படைத்த பலரும் தாங்கள் பதுக்கி வைத்திருந்த பழைய நோட்டுக்களை வேலையாட்கள் வாயிலாக வங்கிகளில் வழங்கி புதிய ரூபாய் நோட்டுக்களை வாங்கினர்.

மேலும் 2,000 ரூபாய் நோட்டுக்களும் சில காலத்திற்கு பின் செல்லாதவையாக அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இதனால் கறுப்பு பண பதுக்கல் குறித்து பலரிடமும் அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை பல நுாறு கோடி ரூபாய் அளவுக்கு பதுக்கியவர்கள் அந்த அளவுக்கு புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுக்களை பதுக்கவில்லை.

லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சிகள் செல்லாத நோட்டு அறிவிப்பை முக்கிய பிரச்னையாக முன்வைத்தன. அதை மக்கள் கருத்தில் கொள்ளாமல் கறுப்பு பண ஒழிப்புக்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கையை பாராட்டும் வகையில் பா.ஜ.வை மட்டும் 303 தொகுதிகளில் வெற்றி பெற வைத்துள்ளனர். இதனால் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்க உள்ளார். அவர் கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக 2,000 ரூபாய் நோட்டையும் செல்லாதவை அறிவிக்க வாய்புள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதையடுத்து 2,000 ரூபாய் நோட்டுக்களை பதுக்கியவர்கள் அவற்றை புழக்கத்தில் விட்டு வருகின்றனர். இதனால் அந்த நோட்டுக்களின் புழக்கம் தற்போது வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X