சென்னை:ஆந்திராவில் பாயும் கோதாவரி ஆற்றின் வழியாக ஆண்டு தோறும் 1100 டி.எம்.சி. நீர் கடலில் வீணாக கலக்கிறது. காவிரியுடன் கோதாவரி நதியை இணைத்தால் வீணாகும் நீரை தடுத்து வறட்சி மாநிலங்களில் பயன்படுத்தலாம்.
இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என முதல்வர் பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மத்திய நீர் வளத்துறையும் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக நீர் வளத்துறை காத்திருக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கவில்லை.இந்நிலையில் 'காவிரி - கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதே என் முதல் பணி' என மத்திய நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.அதற்கு நன்றி தெரிவித்து முதல்வர் பழனிசாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு:காவிரி - கோதாவரி இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளதற்கு என் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திட்டம் இந்த நேரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் தமிழகத்தில் பரவலாக நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க முடியும்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.