சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

தகவல் மற்றும் தொழில்நுட்பத்தை கையாள்வது எப்படி?

Added : மே 27, 2019
Share
Advertisement
தகவல் மற்றும் தொழில்நுட்பத்தை கையாள்வது எப்படி?

உலகெங்கும் இணையத்தால் இன்று இணைக்கப்பட்டிருக்க, உலகம் முழுவதிலிருந்தும் கொட்டும் தகவல்களை மன அழுத்தமின்றி இளைஞர்கள் எப்படி கையாள்வது என்று மத்திய இளைஞர்கள் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன் ராத்தோர் அவர்கள் சத்குருவிடம் கேட்கிறார்.

கர்னல் ராஜ்யவர்தன் ராத்தோர்: இளமைப்பருவம் சவால்களும் சாதனைகளும் இலக்குகளும் இலட்சியங்களும் நிறைந்தது. பல இளைஞர்கள், பிறர் வெற்றியெனக் கருதுவதை எட்டிப் பிடிக்க ஓடுகிறார்கள். உலகெங்கும் இணையத்தால் இன்று இணைக்கப்பட்டிருக்க, தகவல்கள் நிரம்பி வழியும் இந்தக் காலத்தில், இவ்வளவு தகவல்கள் தங்கள்மீது திணிக்கப்படுவதால் கூடுதல் மன அழுத்தத்தையும், அதிகப்படியான வேலைப்பலுவால் வரும் சோர்வையும் எதிர்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட அழுத்தம் இளைஞர்களின் இயல்பான சந்தோஷத்தை அபகரித்துவிடுகிறது. இளைஞர்கள் மத்தியில் மனச்சோர்வு மென்மேலும் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட சவாலான காலகட்டத்தில் இளைஞர்கள் தொடர்ந்து சந்தோஷமாக இருப்பது எப்படி? இளைஞரும் சந்தோஷமும் பற்றிய உண்மையறிய விரும்புகிறேன்.

சத்குரு: நமஸ்காரம் ராஜ். ஒவ்வொரு தலைமுறையிலும், ஏதோவொன்றைப் பற்றி எப்போதும் குறை சொல்லிக்கொண்டே இருக்கும் சிலர் இருக்கிறார்கள். அதே சமயம், அவர்கள் வாழும் காலம் வழங்கும் சூழ்நிலைகளை பயன்படுத்துவோரும் நிச்சயம் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இன்று ஒரு தலைமுறையாக, முன்பு எப்போதும் இல்லாத வசதிகளும் சௌகரியங்களும் நம்மிடம் உள்ளன. சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் சுழன்றதைவிட இன்று பூமி வேகமாக சுழலவில்லை - அதே வேகத்தில்தான் சுழல்கிறது. ஆனால் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தால் தூரங்கள் குறைந்துவிட்டதாக உணர்கிறோம்.

தகவல்கள் தங்கள்மீது கொட்டுவதாக குறைசொல்பவர்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்க்கை எப்படி இருந்திருக்க வேண்டும் என்று கற்பனை செய்து பார்க்கவேண்டும். நூறு கிலோமீட்டர் தூரத்தில் என்ன நடக்கிறதென்று உங்களுக்குத் தெரிந்திருக்காது. அற்புதமான நிகழ்வானாலும், ஏதோவொரு பேரிடர் நிகழ்ந்தாலும், அதுகுறித்த தகவல் உங்களை வந்தடையவே ஓரிரண்டு மாதங்கள் ஆகும். இன்று உலகின் எந்தப் பகுதியிலும் நிகழும் எதுவாயினும், தகவல் வெகுவிரைவாக உங்களை வந்தடைகிறது.

தொழில்நுட்பத்தால் முன்பு எப்போதும் இல்லாத விதத்தில் நாம் வல்லமை படைத்தவராக இருக்கிறோம். ஒரு தலைமுறையாக நம்மிடம் இருக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமிது. தற்போது தங்கள் வாழ்க்கையை சுலபமாக்கி சௌகரியமாக்கியுள்ள தொழில்நுட்பத்தை மனிதர்கள் குறைசொல்கிறார்கள். பிரச்சனை என்னவென்றால், அவர்கள் கையாளத் தேவையான வாழ்க்கை சூழ்நிலைகளுக்கு அவர்கள் தங்களை தயார்செய்யாமல் இருக்கிறார்கள்.


உங்கள் திறமைகளை மேம்படுத்துவது

இந்த உயிரை உயர்ந்த நிலையிலான சாத்தியத்திற்கு எப்படி உயர்த்துவது என்பது மட்டுமே உங்கள் கவனமாக இருக்கவேண்டும்.
நீங்கள் இங்கு ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது நீங்கள் காலையில் எழுந்ததும் பயன்படுத்துவதற்கு தண்ணீர் இருக்காது, ஆற்றுக்கு நடந்துசென்று இரண்டு வாளி நிறைய தண்ணீர் சுமந்து வரவேண்டும். நான் சொல்வதை நம்புங்கள், இன்றைய இளைஞர்களில் பலருக்கு இரண்டு வாளி தண்ணீரை ஒரு மைல் தூரத்திற்கு சுமந்துசெல்லும் உடல்திடம் கிடையாது. உடலளவில் அவர்களால் அப்படி செய்யவே முடியாது.

இங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், தொழில்நுட்பம் இல்லாமல் நீங்கள் தண்ணீர் சுமக்க நேர்ந்திருந்தால், குறைசொல்லாமல் சுமந்திருப்பீர்களா? நிச்சயம் குறை சொல்லியிருப்பீர்கள், ஏனென்றால் உடலளவில் அதற்கான திறமை உங்களிடம் இல்லை. அதேபோல, இன்றைய நிதர்சனங்களைக் கையாள மனதளவில் திறமைகரமானவராக உங்களை நீங்கள் செய்துகொள்ளவில்லை என்றால், நீங்கள் குறைசொல்வீர்கள்.

நீங்கள் வாழ்க்கைக்குத் தகுதியானவராக இருக்கும்விதமாக உங்களை கட்டமைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கையின் முற்பகுதியில் மிக முக்கியமானது, உங்கள் இலட்சியங்களும், ஆசைகளும், நீங்கள் விரும்பும் வாழ்க்கைமுறைகளும் அல்ல. இந்த உயிரை உயர்ந்த நிலையிலான சாத்தியத்திற்கு எப்படி உயர்த்துவது என்பது மட்டுமே உங்கள் கவனமாக இருக்கவேண்டும். உங்கள் உள்நிலை மேம்பாட்டிற்காக நீங்கள் போதிய நேரம் முதலீடு செய்தால், தற்போதைய சூழ்நிலைகளைக் கையாள்வது முயற்சியின்றி நிகழும். அப்போது எல்லாவற்றுக்கும் மேலாக, உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதங்களை நீங்கள் குறைசொல்ல மாட்டீர்கள்.

முன்பு எப்போதும் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு பதினான்கு மணிநேரத்தில் பறந்திருக்க முடியாது, அல்லது ஃபோன் எடுத்து உலகின் எந்தப் பகுதியில் இருப்பவரிடமும் பேசியிருக்க முடியாது, அல்லது உலகெங்கிலும் விண்வெளியிலும்கூட நிகழும் கோடான கோடி விஷயங்களை உங்களால் பார்த்திருக்க முடியாது. இன்று உங்கள் சாதாரண பார்வைத் திறனைத் தாண்டி உங்களால் பார்க்க முடிகிறது, சாதாரண கேட்கும் திறனைத் தாண்டி கேட்க முடிகிறது, சாதாரணமாக உணரக்கூடிய விஷயங்களைத் தாண்டி உங்களால் அனுபவித்துணர முடிகிறது.


உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்வது

சில மாதங்களுக்கு ஒருமுறை, அல்லது சில ஆண்டுகளுக்கு ஒருமுறை உங்களைச் சுற்றியுள்ள தொழில்நுட்பம் தன்னை அபரிமிதமாக மேம்படுத்திக்கொள்கிறது. உங்களை நீங்களே மேம்படுத்தும் நேரம் வந்துவிட்டது. உள்நிலை தொழில்நுட்பம் அல்லது யோகா என்றால், இந்த உயிரை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவது. இந்த உயிரை மேம்படுத்தாமல் உங்கள் செயலை மேம்படுத்தப் பார்த்தால், அந்தச் செயல் உங்களுக்கு வேதனையைத்தான் ஏற்படுத்தும். உதாரணம் சொல்லவேண்டும் என்றால், ஒரு பழைய, பழுதான காரை, F1 பந்தயத்தில் செலுத்துவது போன்றதாகிவிடும் - அப்போது அந்த கார் துண்டு துண்டாகக் கழன்று கீழே விழுந்துவிடும். மனிதர்களுக்கு தற்போது நிகழ்ந்துகொண்டு இருப்பதும் இதுதான்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X