டவுட் தனபாலு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மே 27, 2019 | கருத்துகள் (4)
 'டவுட்' தனபாலு

ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர், ஜெகன் மோகன் ரெட்டி: பா.ஜ., 250க்கும் குறைவான தொகுதிகளில் வென்றிருந்தால், ஆட்சி அமைக்க, எங்களுடைய ஆதரவு தேவைப்பட்டிருக்கும். ஆனால், தற்போது மிகவும் வலுவாக அவர்கள் உள்ளனர். அதனால், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது குறித்து, பிரதமர் மோடியை வற்புறுத்தவோ, உத்தரவிடவோ முடியாது; கோரிக்கை தான் வைக்க வேண்டும்.

டவுட் தனபாலு: இவ்வளவு தெளிவாக யோசிக்கும் நீங்க, தேர்தலுக்கு முன்னமே, பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து இருக்கலாமே... கூட்டணிக் கட்சி என்ற அடிப்படையில், உங்க கோரிக்கையை, எளிதில் வென்றிருக்கலாமே... அதுசரி, சிறப்பு அந்தஸ்துக்கு செவி சாய்க்காத நிலையில், பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறிய, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த, சந்திரபாபு நாயுடு, இதுதொடர்பாக வலியுறுத்திய போது, 'வெறுமனே கோரிக்கை வைத்தால் எப்படி'ன்னு, 'டவுட்' எழுப்பியதை மறந்துட்டீங்களோ...!


பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்: ஒடிசா மாநிலம், அடிக்கடி இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படுகிறது. அதனால், மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும்படி, மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.

டவுட் தனபாலு: இதைத்தவிர வேறு வலுவான காரணமே, உங்களுக்கு சிக்கலையா... இதற்குத்தான், இயற்கைப் பேரிடர் நிதி இருக்கே... அப்புறம் எதற்கு, சிறப்பு அந்தஸ்து... தொடர்ந்து, ஐந்து முறை முதல்வராக தேர்வாகி இருக்கும் நீங்க, மத்திய அரசின் நிதியை நம்பும் அளவில் தான், மாநிலத்தின் நிதி வருவாயை வைத்திருக்கீங்களா என்ற, 'டவுட்' எழுந்திடப் போகுது...!


பா.ம.க., நிறுவனர், ராமதாஸ்: மத்தியிலும், மாநிலத்திலும், நல்லாட்சிகள் தொடர்கின்றன. எங்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டாலும், தீயவர்களிடம் சிக்காமல், நாடும், மாநிலமும் காப்பாற்றப்பட்டுள்ளது. இதுவும், ஒரு வகையில் நமக்கு கிடைத்த வெற்றி தான்.

டவுட் தனபாலு: 'பா.ம.க.,வை கூட்டணியில் சேர்த்ததற்கு என்ன பலன்... அப்புறம், எந்த அடிப்படையில், ராஜ்யசபா, எம்.பி., பதவியைக் கேட்குறீங்க'ன்னு, அ.தி.மு.க.,வில் யாரும், 'டவுட்' எழுப்பிடக் கூடாது என்பதற்காக, இதை எல்லாம், வெற்றியாய் பாவித்து, வசனம் பேசுறீங்களோ...!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X