சும்மா விடாதே உதாரு... | Dinamalar

சும்மா விடாதே உதாரு...

Added : மே 27, 2019
Share
ஈச்சனாரி விநாயகரை தரிசிக்க, சித்ராவும், மித்ராவும் ஸ்கூட்டரில் புறப்பட்டனர்.''அக்கா, உக்கடத்துல பாலம் வேலை நடக்குது. அந்த வழியா போனா, சின்னாபின்னமாகி விடுவோம்,'' என, 'அலர்ட்' செய்தாள் மித்ரா.அதற்கு சித்ரா, ''எதுக்குமே பயப்பட கூடாதுப்பா, போயிதான் பார்ப்போமே,'' என்றவாறு, உக்கடம் சந்திப்பு வந்தடைந்தனர்.மாற்றுப்பாதையை காட்டினர் போலீசார். பேரூர் புறவழிச்சாலையை
 சும்மா விடாதே உதாரு...

ஈச்சனாரி விநாயகரை தரிசிக்க, சித்ராவும், மித்ராவும் ஸ்கூட்டரில் புறப்பட்டனர்.''அக்கா, உக்கடத்துல பாலம் வேலை நடக்குது.

அந்த வழியா போனா, சின்னாபின்னமாகி விடுவோம்,'' என, 'அலர்ட்' செய்தாள் மித்ரா.அதற்கு சித்ரா, ''எதுக்குமே பயப்பட கூடாதுப்பா, போயிதான் பார்ப்போமே,'' என்றவாறு, உக்கடம் சந்திப்பு வந்தடைந்தனர்.மாற்றுப்பாதையை காட்டினர் போலீசார். பேரூர் புறவழிச்சாலையை கடந்து, புட்டுவிக்கி ரோடு வழியாக, போக்குவரத்து நெருக்கடிக்குள் சிக்கி, ஊர்ந்து ஊர்ந்து, பாலக்காடு ரோடு வந்து, பொள்ளாச்சி சாலை செல்வதற்குள் ஒரு வழியாகி விட்டனர்.''அக்கா, அப்பவே சொன்னனே, நஞ்சுண்டாபுரம் ரோடு வழியா போயிருக்கலாம்,'' என, மித்ரா சொல்ல, ''அப்படி இல்லப்பா, எவ்ளோ கஷ்டம் இருக்குன்னு, முதல்ல நாம தெரிஞ்சுக்கிடணும்,'' என்ற சித்ரா,

''தொழில்துறையை சேர்ந்தவங்க ரொம்பவே, 'அப்செட்' ஆகி இருக்காங்களாமே...'' என, இழுத்தாள்.அதற்கு, மித்ரா, ''ஆமாக்கா, மத்தியில, பா.ஜ., மறுபடியும் ஆட்சிக்கு வந்திருக்கு. நம்மூர்ல, பா.ஜ., வேட்பாளர் சி.பி.ஆர்., தோத்துட்டாரு. தொழில் அமைப்புகளை சேர்ந்த சிலர், தேர்தல் பிரசாரத்துல ஜி.எஸ்.டி., பிரச்னையை பரப்புனாங்க. இப்ப எப்படி தொழில் பிரச்னையை மத்திய அரசு கவனத்துக்கு கொண்டு போறதுன்னு தெரியாம, கையை பிசையுறாங்க. இப்போதைக்கு, பா.ஜ.,வுக்கு எதிரா பிரசாரம் செஞ்ச அமைப்புகளை ஓரங்கட்டி வச்சிட்டு, மத்த வேலையை பார்க்குறதுக்கு முடிவு செஞ்சிருக்காங்க,'' என்றாள்.
''என்ன இருந்தாலும், ஆளுங்கட்சி கோட்டையில ஓட்டை விழுந்திடுச்சே. தொண்டாமுத்துார் தொகுதியில கூட, அ.தி.மு.க.,வை விட, தி.மு.க., வேட்பாளர், 21 ஆயிரம் ஓட்டு அதிகமா வாங்கியிருக்காரு,'' என்றாள் சித்ரா.''அதுவா... ஓட்டு எண்ணிக்கை முடிஞ்சதுக்கப்புறம் கட்சிக்காரங்க சிலரிடம் பேசிப்பார்த்தேன். இந்த தடவை அ.தி.மு.க.,காரங்க, பெரிசா 'எலக்சன் ஒர்க்' செய்யவே இல்லையாம். 'கரன்சி' கெடைக்கும்னு நிர்வாகிகள் பலரும் எதிர்பார்த்திருக்காங்க. மேலிடத்துல இருந்து, சப்ளை பண்ணாததால, ஒதுங்கிட்டாங்களாம். அதனாலதான், ஓட்டு குறைஞ்சதாம்,'' என்றாள் மித்ரா.
'ஆனா, சூலுார் இடைத்தேர்தல்ல ஆளுங்கட்சி ஜெயிச்சிருச்சே...'' என, சித்ரா, ஆச்சரியத்துடன் கேட்க, ''அதுக்குத்தான் ரொம்பவே மெனக்கெட்டாங்களே. 'கரன்சி'யை கொட்டியும் கூட, 10 ஆயிரம் ஓட்டுகளே வித்தியாசம் கெடைச்சிருக்கறதுனால, நிர்வாகிகள் இடிஞ்சு போயிட்டாங்க,''''தி.மு.க., 'மாஜி'யும் நொந்து போயிட்டாராமே...''''ஓட்டு எண்ணுறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி, ஓட்டு இயந்திரம் வச்சிருந்த ஜி.சி.டி., காலேஜ்க்கு போயிருக்காரு. காவலுக்கு இருந்த கட்சி ஏஜன்டுகள், கூட்டணி கட்சி ஏஜன்டுகளை சந்திச்சு பேசினாராம்.
'கடைசி நேரத்துல ஜனங்களுக்கு, ரெண்டு ஆயிரம் குடுத்திருக்காங்கப்பா. நமக்கு தகவல் 'லேட்'டாதான் தெரிஞ்சுச்சு'ன்னு சொல்லி வருத்தப்பட்டாராம்.''இருந்தாலும், தி.மு. க., - மா.கம்யூ., ஏஜன்டுகள் மட்டுமில்லாம, பா.ஜ., ஏஜன்டுகளையும் கூப்பிட்டு நல்லா பேசினாராம். கெளம்பும்போது, எல்லாருக்கும் ஓட்டல்ல சாப்பாடு ஆர்டர் சொல்லிட்டுப் போயிருக்காரு. அவரோட பாசத்தை பார்த்து பயந்து போன, பா.ஜ., ஏஜென்டுக, சாப்பிட மறுத்துட்டாங்களாம்''

''ஓ... அப்படியா...''''ஓட்டு எண்ணிக்கை முடிஞ்சதும், சூலுாரில் ஜெயிச்ச அ.தி.மு.க., வேட்பாளர் பேட்டி தருவாருன்னு பத்திரிகை நிருபர்கள் காத்திருந்தாங்க. அவரோ, 'பேட்டியும் வேண்டாம்; ஒண்ணும் வேண்டாம்; ஆளை விட்டாப்போதும்'னு தப்பிச்சு போயிட்டாராம்,'' என்றவாறு, சிரித்தாள் மித்ரா.இருவரும் பேசியபடி ஒரு வழியாக ஈச்சனாரி கோவிலை வந்தடைந்தனர். சுவாமி தரிசனம் முடித்து விட்டு, கோவிலை விட்டு வெளியே வந்ததும், அருகில் இருந்த பேக்கரிக்குள் நுழைந்தனர்.

சித்ரா மொபைல் போனுக்கு, 'மாநகராட்சி வடக்கு மண்டலத்தில், லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு' என, 'வாட்ஸ்ஆப்' தகவல் வந்தது.உடனே, தனது நண்பரை தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய சித்ரா, ''உதவி கமிஷனர் ரவிக்குமாரை, லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ்காரங்க கைது செஞ்சிருக்காங்க. இவரை கைது செய்றதுக்கு, ஏற்கனவே மூணு தடவை முயற்சி பண்ணியிருக்காங்க.

ஒவ்வொரு தடவையும் தப்பிச்சுக்கிட்டே இருந்துருக்காரு. இப்ப, கையும் களவுமா பிடிச்சு, களி தின்ன அனுப்பி இருக்காங்க. கார்ப்பரேஷன் வட்டாரமே பரபரப்பா பேசிக்கிட்டு இருக்கு,''''அப்படியே, 'சென்ட்ரல் ஜோன்' பக்கமும் எட்டிப்பார்த்தாங்கன்னா நல்லா இருக்கும்...'' என்றாள் மித்ரா.''ஏம்ப்பா, அங்க என்ன பிரச்னை,'' என்று, அப்பாவித்தனமாக சித்ரா கேட்க, ''கையெழுத்து வாங்க, எந்த கோப்பு கொண்டு போனாலும், கரன்சி எதிர்பார்க்குறாங்களாம். கார்ப்பரேஷன் ஊழியர்களே பேசிக்கிட்டாங்க. அதான் சொன்னேன்...'' என்றாள் மித்ரா.

அதற்கு, ''லஞ்ச ஒழிப்புத்துறைக்காரங்க இப்பத்தான் சிறப்பா வேலை செஞ்சிருக்காங்க,'' என, சர்ட்டிபிகேட் கொடுத்த சித்ரா, ''இப்ப கைதாகி இருக்கற அதிகாரியும், 'டவுன் பிளானிங்' ஆபீசரும் நெருக்கமாம். 'டவுன் பிளானிங்' செக்சன்ல இருக்கற உதவி அதிகாரி ஒருத்தருக்கு வலை விரிச்சிருக்காங்க.
அடுத்த முயற்சியில நிச்சயம் சிக்குவாங்கன்னு சொல்றாங்க...'' என்றாள்.மித்ரா மொபைல் போனுக்கு, தோழி ஜெயலட்சுமியிடம் இருந்து, 'வாட்ஸ்அப் மெசேஜ்' வந்திருந்தது. அதை படித்ததும், ''கோவை மண்டல ஊரக நகரமைப்பு துறையில இருந்து, திருப்பூரை தனியா பிரிச்சிட்டாங்க. இருந்தாலும், அதற்கான கோப்புகளை கொடுக்க மறுக்குறாங்களாம். 'லே-அவுட்'டுகளை வரன்முறைப்படுத்த வர்ற 'பைல்'கள்ல, காசு வாங்கிட்டு, பழைய தேதி போட்டு, 'அப்ரூவல்' கொடுக்குறாங்களாம்,'' என்றாள்.''இதுக்கெல்லாம், கலெக்டருதான் நடவடிக்கை எடுக்கணும்,'' என, சித்ரா சொல்ல, ''நம்மூருக்கு புதுசா வந்திருக்கிற கலெக்டர் ராஜாமணி கவனத்துக்கு, எந்த தகவல் போனாலும், உடனடியா நடவடிக்கை எடுக்குறாரு.
மேட்டுப்பாளையம் போற தனியார் பஸ்கள்ல, அதிகமான கட்டணம் வசூலிக்கிற தகவலை சொல்லியிருக்காங்க.அதைப்பத்தி விசாரிச்சு, அரசு அறிவித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்கணும்னு அறிவிப்பு வெளியிட்டுருக்காரு. இதே மாதிரி, அதிவேகமா போற பஸ்களையும், 'ஏர்ஹாரன்' பயன்படுத்துற வாகனங்களுக்கும், 'பைன்' போடணும். முதல்ல எஸ்.பி.டி - எஸ்.வி.டி.,'ன்னு மூன்றெழுத்தோட தாறுமாறா அசுர வேகத்துல பறக்குற பஸ்கள, கொஞ்சம் கவனிச்சா நல்லது; காது கிழியுது,'' என்ற மித்ரா, இஞ்சி டீ ஆர்டர் கொடுத்தாள்.

டீ வந்ததும் உறிஞ்சி குடித்த சித்ரா, ''மலுமிச்சம்பட்டி ஊராட்சியில, 89 காசோலைகளுக்கான செலவின ரசீது கேட்டது தொடர்பா விசாரிக்கச் சொல்லி, கலெக்டருக்கு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் உத்தரவிட்டிருக்காராமே...'' என, கேட்டாள்.''ஆமாக்கா, நானும் கேள்விப்பட்டேன். பொருட்கள் வாங்குனதுல, முறைகேடு நடந்திருக்கு போலிருக்கு. காசோலை நம்பர்களை குறிப்பிட்டு, சமூக ஆர்வலர் ஒருத்தரு, சட்ட விதிமுறைக்கு உட்பட்டு செலவின ரசீது கேட்டிருக்காரு. ''கடிதத்தை அதிகாரிங்க வாங்காம, திருப்பி அனுப்பிட்டாங்க. மேல்முறையீடு செஞ்சதுனால, விசாரிச்சு, அறிக்கை சமர்ப்பிக்கச் சொல்லி, கலெக்டருக்கு உத்தரவிட்டு இருக்காங்க,'' என்றாள் மித்ரா.
''அதெல்லாம் சரி, பெண் போலீசுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி, ஒரு அதிகாரி மாட்டிக்கிட்டாராமே...'' என, சித்ரா நோண்டினாள்.''அதுவா, போன வாரம் தேர்தல் பாதுகாப்பு விஷயமா, அந்த போலீஸ் அதிகாரி, பொள்ளாச்சி பக்கமா போயிருக்காரு. ஒரு கார் மட்டும் ரோட்டுல தனியா நின்னுட்டு இருந்திருக்கு. சந்தேகப்பட்ட அவர், காருக்குள் 'எட்டிப்' பார்த்தபோது, ஒரு ஆண் போலீசும் பெண் போலீசும் நெருக்கமா இருந்திருக்காங்க. ரெண்டு பேரையுமே எச்சரிச்சு அனுப்பி இருக்காரு.''கொஞ்ச நாள் கழிச்சு, அந்த பெண் போலீசுக்கு தினமும் எஸ்.எம்.எஸ்., அனுப்ப ஆரம்பிச்சிருக்காரு.

கடுப்பான பெண் போலீஸ், எஸ்.எம்.எஸ்.,ஐ 'ஸ்கிரீன் ஷாட்' எடுத்து, உயரதிகாரிங்க கிட்ட சொல்லியிருக்காங்க. இதத்தான் போலீஸ் வட்டாரத்துல பரபரப்பா பேசிக்கிட்டு இருக்காங்க,'' என்றாள் மித்ரா.அப்போது, சித்ரா மொபைல் போனுக்கு, ரேஷன் கடையில பொருள் வாங்கிட்டதா, ஒரு எம்.எம்.எஸ்., வந்தது.''அடப்பாவிகளா, கடைசியில, நம்ம கார்டிலும் கை வச்சிட்டீங்களா,'' என, புலம்பினாள் சித்ரா.
''அக்கா, ராமநாதபுரத்துல பாரதி நகர்ன்னு ஒரு ஏரியா இருக்கு; அங்க 28ம் நம்பர் ரேஷன் கடையில ஏகப்பட்ட முறைகேடு நடக்குதாம். எந்த பொருளும் ஒழுங்கா கொடுக்கறதில்லையாம். கள்ளச்சந்தையில விற்பனை செய்றாங்களாம்,'' என்றாள் மித்ரா.அதன்பின், இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர். சுந்தராபுரம் வந்ததும் உஷாரான சித்ரா, நஞ்சுண்டாபுரம் பக்கம் ஸ்கூட்டரை திருப்பினாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X