புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி: தேர்தல் தோல்வி பற்றிய காரணங்கள் சம்பந்தமாக, ஒரே நாளில் முடிவு எடுக்க முடியாது. தேர்தல் முடிவு குறித்து அறிய, சில காலம் ஆகும்.
டவுட் தனபாலு: இதுக்கு எதுக்குங்க இவ்வளவு அவகாசம்... காங்., வெற்றி பெறும் என்பதற்கு, எதை எல்லாம் காரணமாகச் சொன்னீங்களோ, அது எல்லாம் தவறு என்ற, 'சிம்பிளான' கணக்கு கூடவா உங்களுக்குத் தெரியலை என்பது தான், என்னோட, 'டவுட்!'
திருச்சி லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற திருநாவுக்கரசர்: எதிர்க்கட்சியினர் பெற்றிருக்கும் வெற்றி, உரிய முறையில் உள்ளதா, மீண்டும் ஓட்டுச் சீட்டு முறை சரியாக இருக்குமா என்றெல்லாம் ஆராய வேண்டும்.
டவுட் தனபாலு: உங்க வெற்றி மீது, உங்களுக்கு சந்தேகம் ஏதும் இருக்கா... இதுல, 'டவுட்' இல்லை என்றால், மற்றவர்களின், வெற்றி, தோல்வியும் சரியானதாக தானே இருக்கும்ங்கறதுல, உங்களுக்கு ஏன், 'டவுட்' தோணுது?
கரூர் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற, காங்., வேட்பாளர் ஜோதிமணி: அரசியலில் ஒரு பிம்பம் இருக்கிறது. அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்றால், பணம் இருக்க வேண்டும்; அரசியல்வாதிகளின் வாரிசாக இருக்க வேண்டும் என்ற கருத்து உள்ளது. ஆனால், தொடர்ச்சியாக மக்களுக்கு பணியாற்றினால், சாதாரண பின்னணி உடையவரும், எந்த உயர் பதவிக்கும் வர முடியும் என்ற செய்தியை, என் வெற்றி தந்திருக்கிறது.
டவுட் தனபாலு: ஒருத்தர், இரு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது... அதனால், தேர்தலில் அனைவருக்கும் பங்கிட்டுத் தான் தரணும்... அதே நேரத்தில், சாதாரண பின்னணியில் இருப்பவரால், எக்காலத்திலாவது, காங்., கட்சியின் தலைமைக்கு வர முடியுமா என்ற, 'டவுட்'டையும் கொஞ்சம் விளக்கினாத் தேவலை...!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE