தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர், இளங்கோவன்: தேனியில், என் தோல்வி உருவாக்கப்பட்ட ஒன்று. காங்கிரசில் உள்ள, எட்டு பேர் வெற்றி பெறும் போது, திருஷ்டி பரிகாரம் போல, தோற்கடிக்கப்பட்டுள்ளேன்.
டவுட் தனபாலு: பரிகாரம் என்பது, ஆய்ந்து, அறிந்து, தெரிந்து செய்வது... அப்படீன்னா, கொங்கு மண்டலத்தில் உங்களை நிறுத்தாமல், தெரிந்தே, தேனியில் நிற்க வைத்து, பழிவாங்கிட்டாங்கன்னு சொல்ல வர்றீங்களோ என்ற, 'டவுட்' ஏற்படுதே...!
தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை: கச்சத்தீவை தாரை வார்த்தது, தி.மு.க., -- காங்., கூட்டணி. இப்போது, அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள திருமாவளவன், கச்சத்தீவை மீட்க வேண்டும் எனக் கூறுவது, என்ன நாடகம்?
டவுட் தனபாலு: அருமையா கேட்டீங்க... அப்படியே, 'நீட் தேர்வை அமல்படுத்திய, பா.ஜ.,வோடு கூட்டணி வைத்துள்ள, அ.தி.மு.க., அதை ரத்து செய்யக் கேட்பது, என்ன நாடகம்... எட்டு வழிச் சாலை திட்டத்தில் தீரமாக இருக்கும், அ.தி.மு.க.,வோடு கூட்டணி வைத்துள்ள, பா.ம.க., அதை கைவிடணும்னு கேட்பது, என்ன நாடகம்' என்ற, 'டவுட்'டையும் தீர்த்திருங்க, தாமரை மலரே...!
நடிகர் ரஜினிகாந்த்: லோக்சபா தேர்தல் வெற்றி, மோடி என்ற தனி மனிதருக்கு கிடைத்த வெற்றி. ஒரு தலைவரால் தான், அந்தக் கட்சிக்கு வெற்றி கிடைக்கும்.
டவுட் தனபாலு: அரசியல் என்பது, தனி நபர் செல்வாக்கைச் சார்ந்த விஷயம்னு சொல்லுங்க... திரைத் துறை செல்வாக்கை மூலதனமாகக் கொண்டு, அரசியலில் காலடி எடுத்து வைக்க உள்ள நீங்களே, இதைச் சொல்லலைன்னா, வேறு யாருங்க சொல்வாங்க... தமிழகத்தில், தி.மு.க., கூட்டணி பெற்ற வெற்றி, ஸ்டாலின் என்ற தனி மனிதருக்கு கிடைத்த வெற்றியா, கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியா... இதையும் சொல்ல எதற்கு தயங்குறீங்க என்பது தான், மக்களின், 'டவுட்!'
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE