பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அமைச்சரவையில் இடம்பெற, அ.தி.மு.க., தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஆனால், மத்திய அமைச்சர் பதவியை பெறுவதில், அக்கட்சியில் கடும் போட்டி ஏற்பட்டு உள்ளதால், யாருக்கு பதவி கிடைக்கும் என்பது, இன்று தெரிய வரும்.
தமிழகத்தில் இருந்து, 2014 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், 37 எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட்டனர். அப்போது, பா.ஜ., விற்கு தனிப்பெரும்பான்மை கிடைத்ததால், ஆட்சி அமைக்க, அ.தி.மு.க., உதவி தேவைப்பட வில்லை.இதன் காரணமாக, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், மத்திய அமைச்சரவையில் இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டது. தேசிய அளவில், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த, அ.தி.மு.க.,விற்கு, லோக்சபா துணை சபாநாயகர் பதவி மட்டும் தரப்பட்டது.
தற்போது நடந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணி, 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இம்முறையும், பா.ஜ., தனிப் பெரும்பான்மை பெற்றது. இதனால், எதிர்க்கட்சியாக உள்ள, தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு, மத்திய அமைச்சராகும் வாய்ப்பு ஏற்படவில்லை.
ஆனால்,அ.தி.மு.க., சார்பில்,துணை முதல்வர்
பன்னீர் செல்வத்தின் மகன்,ரவீந்திரநாத் குமார், தேனி தொகுதியில் வெற்றிபெற்று, எம்.பி., ஆகி உள்ளார். அவருக்கு, மத்திய அமைச்சர் பதவி பெற, பன்னீர்செல்வம் முயற்சிகள் மேற்கொண்டு உள்ளார். கடந்த சில தினங்களாக, ரவீந்திரநாத் குமார், டில்லியில் முகாமிட்டு, மத்திய அமைச்சராக முயற்சித்து வருகிறார். அவர், மத்திய அமைச்சராவதை, இ.பி.எஸ்.,தரப்பு விரும்பவில்லை.
கட்சியில், ஜூனியரான ரவீந்திரநாத் குமாருக்கு பதிலாக, சீனியரான, ராஜ்யசபா, எம்.பி., வைத்திலிங்கத்திற்கு, மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என, இ.பி.எஸ்., தரப்பில் வலியுறுத்தி உள்ளனர்.இது, பன்னீர்செல்வத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. மகனுக்கு, மத்திய அமைச்சர் பதவி பெற வேண்டும் என்றால், வைத்திலிங்கத்திற்கும் அமைச்சர்பதவி பெற்று தர வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். இச் சூழலில், வைத்திலிங்கம், சென்னையில் முதல்வர், இ.பி.எஸ்.,சை சந்தித்து, இந்த விவகாரம் பற்றி பேசினார்.
அ.தி.மு.க., தலைமை, மத்திய அமைச்சரவையில் இடம் பெற முயற்சித்து வரும் நிலையில், இரு மத்திய அமைச்சர் பதவிகளை, பிரதமர் வழங்குவாரா என்பது, சந்தேகமாக உள்ளது. இதன் காரணமாக, அ.தி.மு.க.,விற்கு, மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்குமா, கிடைக்காதா என்ற, விவாதம் கிளம்பி உள்ளது. இதற்கு, இன்று விடை தெரியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று முதல்வர் டில்லி பயணம்!
இந்தியாவின் பிரதமராக, இரண்டாவது முறை யாக, நரேந்திர மோடி, இன்று பதவியேற்க உள்ளார். பதவிஏற்பு விழாவில் பங்கேற்பதற் காக, முதல்வர்,
இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், இன்று காலை, டில்லி செல்ல உள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று உள்ள, ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு, லோக்சபாவில், 16 எம்.பி.,க்கள்; ராஜ்யசபாவில், ஆறு எம்.பி.,க்கள் உள்ளனர். சிவசேனாவுக்கும், லோக்சபாவில், 18; ராஜ்யசபாவில், 3எம்.பி.,க் கள் உள்ளனர். இரு கட்சிகளுக்கும், அமைச்சர வையில் இடம் அளிப்பது உறுதியாகி உள்ளது. எத்தனை பதவி என்பது வெளியாகவில்லை.
அதேபோல், சிரோன்மணி அகாலிதளத்திற்கு, லோக்சபாவில் இரண்டு, ராஜ்யசபாவில், 3 எம்.பி.,க்கள் உள்ளனர். கடந்த முறை, ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. எனவே, இம்முறையும் வாய்ப்பு வழங்கப்படுவது, உறுதியாகி உள்ளது.கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட, அ.தி.மு.க., இம்முறை, பா.ஜ., வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால்,ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றது. ஆனால், ராஜ்யசபாவில், 13 எம்.பி.,க் கள் உள்ளனர். எனவே, அக்கட்சி, மத்திய அமைச்சர வையில் இடம்பெற, விருப்பம் தெரிவித்து உள்ளது.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (17)
Reply
Reply
Reply