'லொள்ளு' ஆபீசர் தில்லு... லேடி போலீசிடம் 'ஜொள்ளு!'

Added : மே 31, 2019
Advertisement
சித்ராவும், மித்ராவும், திருமுருகன்பூண்டியிலுள்ள மாதவவினேஸ்வரர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். மாலை நேரம் என்றாலும், மழை போல, வெயில் இருவரையும் குளிப்பாட்டி கொண்டிருந்தது.இருந்தாலும், ராகு காலம் முடிவதற்குள் கோவிலுக்கு செல்ல வேண்டுமென, சித்ரா வேகமாக வண்டி ஓட்டினாள்.''அக்கா... பார்த்து போங்க. அப்புறம் ஆளுங்கட்சி மாதிரி குழியில் விழ வேண்டியதுதான்,''''நல்லா
'லொள்ளு' ஆபீசர் தில்லு... லேடி போலீசிடம் 'ஜொள்ளு!'

சித்ராவும், மித்ராவும், திருமுருகன்பூண்டியிலுள்ள மாதவவினேஸ்வரர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். மாலை நேரம் என்றாலும், மழை போல, வெயில் இருவரையும் குளிப்பாட்டி கொண்டிருந்தது.இருந்தாலும், ராகு காலம் முடிவதற்குள் கோவிலுக்கு செல்ல வேண்டுமென, சித்ரா வேகமாக வண்டி ஓட்டினாள்.

''அக்கா... பார்த்து போங்க. அப்புறம் ஆளுங்கட்சி மாதிரி குழியில் விழ வேண்டியதுதான்,''

''நல்லா சொன்னேடி மித்து. மக்கள் என்ன மனநிலையில் இருக்காறாங்கன்னே கணிக்க முடியலை. இந்தியா பூராவும் ஒரு முடிவெடுத்தா, இங்க மட்டும் மாத்தி எடுத்துட்டாங்க,''

''திருப்பூரை ஆளுங்கட்சி கோட்டைன்னு அ.தி.மு.க., காரங்க, மார்தட்டிட்டு இருந்தாங்க. ஆனால், நிலைமை தலைகீழாயிடுச்சே''

''வேட்பாளர் மட்டும் தோத்துட்டார்ன்னு சொல்லக்கூடாது. இரண்டு அமைச்சர், நான்கு எம்.எல்.ஏ.,க்களும்தான், தோத்திருக்காங்க'' என்றாள் சித்ரா.

''நீங்க சொல்றதும் கரெக்ட் தான்,'' ஆமோதித்தாள் மித்ரா.

'அ.தி.மு.க., வளர்ந்த காலத்தில, கோஷ்டி இல்லை; இப்ப ஓராயிரம் இருக்கு. இதனால், கம்யூ., வளர்ந்துட்டு இருக்காங்க, என்ன பண்றதுன்னு, ஆளுங்கட்சிக்குள்ளேயே ஒரு பெரிய பட்டிமன்றமே நடக்குது,''

''1,400 கோடியில், நான்காவது குடிநீர் திட்டம், 2 ஆயிரம் கோடியில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம், அத்திக்கடவு - அவிநாசி திட்டம், இப்படி எல்லாத்தையும் செயல்படுத்தியும், மக்கள் இப்படி ஏமாத்திட்டாங்களே. இனி நமக்கும் மதிப்பு இருக்காதோன்னு, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் புலம்பறாங்களாம்டி,''

''ஏங்க்கா... இந்த வெற்றியால், உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த தி.மு.க., எப்படியும் அழுத்தம் கொடுக்கும். அதனால, தேர்தல் வந்தா, எப்படி சமாளிக்கிறதுன்னு ஆளுங்கட்சிக்கு பயம் வந்திடுச்சு போல,''

''அது உண்மைதான். மித்து, தேர்தலில் யார் ஜெயிச்சாங்களோ இல்லையோ, 'ஜாக்டோ - ஜியோ' ஜெயிச்சிட்டாங்க. கோரிக்கையை கண்டுக்காம இருந்த அரசுக்கும், ஊழியர் சங்கத்துக்கும் 'லடாய்' இருந்துச்சு. அவங்க, தங்களோட சொந்தக்காரங்க, மொத்தமா வெச்சு செஞ்சுட்டாங்க,''கோவில் வரவே, வண்டியை பார்க் செய்து விட்டு, இருவரும் கோவிலுக்குள் சென்றனர். கூட்டம் அதிகமாக இருந்தாலும், வரிசையில் நின்று, சுவாமி தரிசனம் செய்தனர். பிரசாதம் வாங்கி கொண்டு, கோவில் வளாகத்தில் அமர்ந்தனர்.

''ஒழுங்கா, யாரும் தேர்தல் வேலை செய்யலேன்னு, முதல்வர்கிட்ட புகார் செய்ய போனவரு, அப்பல்லோ ஹாஸ்பிடல் போற மாதிரி ஆயிடுச்சு''

''என்னக்கா சொல்றீங்க. மா.செ., வையா சொல்றீங்க''

''ஆமாண்டி அவரேதான். தேர்தல் முடிவு வந்தன்னைக்கு நைட்டே, முதல்வர்கிட்ட புகார் செய்யணும்னு, சென்னைக்கு போனாராம். திடீர்னு, நெஞ்சுவலி வந்து, அப்பல்லோவில் அட்மிட் ஆயிட்டாரு. ரத்த குழாயில் 'பிளாக்' இருந்ததால், 'ஆஞ்சியோ' பண்ணாங்களாம்,''

''தோல்வியுற்றதால், நெஞ்சு வலி வந்திருச்சு போல,''

''ஒருவேளை அப்படிகூட இருக்கலாம். மித்து, தோழர்கள் கொண்ட ஒரு குரூப், பா.ஜ.,வுக்கு தாவும் முடிவுக்கு தடை வந்து விட்டதாமே தெரியுமா,'' என்றாள் சித்ரா.

''பா.ஜ.,தான் தனி மெஜாரிட்டியில் ஆட்சி அமைக்க போகிறதே. அப்புறம் என்ன பிரச்னைங்க்கா?''

''ஒட்டு மொத்த ரிசல்ட் ஒரு மாதிரியும், தமிழகத்தில் வேற மாதிரியும் இருந்ததால் குழப்பமாகி விட்டதாம். தோழர் ஜெயித்து விட்டதால், கட்சி மாறும் தங்கள் முடிவை தற்காலிகமாக ஒத்தி வைத்து விட்டனராம். ஆனாலும், எப்போ வேணாலும் போகத்தயார் நிலையில் இருக்கறதா பேச்சு,''

''இருந்தாலும் இருக்கும். ஏன்னா... இனி, அஞ்சு வருஷத்துக்கு வண்டியை ஓட்டணுமே,''

''சரியா சொன்ன மித்து. இந்த லிங்கேஸ்வரர் ஊரில் நடந்த பாலிதீன் ரெய்டு பற்றி பேசினோமே, ஞாபகமிருக்கா,''

''ஆமாங்க்கா. சீல் வைச்ச குடோனையும், பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பண்டல்களையும், வியாபாரிக்கு மீண்டும் ஒப்படைக்க வேண்டுமென, ஆளுங்கட்சியினர் பிரஷர் கொடுத்தாங்களே அதுதானேங்க்கா,''

''யெஸ். பிடிபட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அந்த மொத்த வியாபாரி, தன்னோட பேரை, சங்கர்குமார் என, கூறியிருந்தார். அவருக்கு, 50 ஆயிரம் பைன் போட்ட அதிகாரிகள், அவரோட ஆவணங்களை பரிசோதிச்சப்ப, அவர் பெயர், மானாராம் சவுத்ரி என இருந்தது. தன்னோட பெயரையே மாத்தி வைச்சு வியாபாரம் செய்றாங்கன்னு, அதிகாரிகள் அதிர்ச்சி அடைஞ்சிட்டாங்களாம்,''

''அங்க மட்டுமல்ல.. எல்லா ஊர்களிலும் அவங்க அப்படித்தான் பண்றாங்க. இரண்டு வாரத்துக்கு முன்னாடி, திருப்பூரில் ஒரே நைட்டில், 10 டன் பிளாஸ்டிக் கவர் எடுத்தாங்க. என்ன பிரயோஜனம் இன்னும் வித்துட்டுத்தான் இருக்காங்க,'' ஆதங்கப்பட்டாள் மித்ரா.

''பிளாஸ்டிக் கவர் பிரச்னை ஒரு பக்கம் உள்ளபோது, வெளியூரில் இருந்து வந்து ஒரு கும்பல், 'பார்'களில் ஒரு நம்பர் லாட்டரியை ஜோராக ஓட்டறாங்க. தெரியுமா,'' சித்ரா கேட்டாள்.

''அதற்குள் குறுக்கிட்ட மித்ரா, ஏங்க்கா, நம்ம 'சிட்டி' கமிஷனர்தான், ஐ.எஸ்., போலீஸ்காரங்களை வச்சு, வளைச்சு வளைச்சு பிடிச்சு வராங்களே, அப்புறம் எப்படிக்கா,''

''மித்து, திருப்பூர் 'சிட்டி'க்குள்ள, நிறைய பார்களில், ஒரு நம்பர் லாட்டரி ஜோரா நடத்துறாங்களாம். 'பாரு'க்கு வர்றவங்க, ஒரு நம்பர் லாட்டரியில் மூழ்கி, பணத்தை தொலைச்சிட்டுத்தான் வீட்டுக்கு போறாங்களாம். போலீஸ்காரங்க, இவுங்க பக்கத்துல கூட, நெருங்க முடியலையாம்,''

''அதிலும், ஈரோட்டிலிருந்த வந்த ஒருத்தர்தான் இவங்களுக்கு 'ெஹட்'டாம். இப்படியே போச்சுன்னு, நிறைய பிரச்னை வருமுன்னு, ஓப்பனாவே சொல்றாங்க. அதுக்குள்ள கமிஷனர் நடவடிக்கை எடுத்தா பரவாயில்லை,''
''இல்ல... கண்டிப்பா, எடுப்பாருன்னு நம்பலாங்க. அப்புறம் சித்து அக்கா. இந்த வடக்கால ஒதுக்குப்புறமா இருக்கிற ஸ்டேஷன் அதிகாரி திருந்தின மாதிரி தெரியலைன்னு பேசிக்கறாங்க,''

''ஓ... அந்த 'வாட்ஸ்அப்' புகழ் அதிகாரியா? ஏன்... என்னாச்சு?''

''அக்கா.. 'லேடி' போலீசை, 'சரண்' அடைய வைச்ச அந்த அதிகாரியோட, சேட்டை இன்னும் குறையலையாம். இப்ப, லேட்டஸ்டா, தன்னோட ஸ்டேஷனை விட்டுட்டு, அடுத்த ஸ்டேஷனில் வேலை பார்க்கிற, 'லேடி' போலீஸ்கிட்ட வழியறாராம்,''

''கிட்டத்தட்ட, 25 ஆயிரம் வட மாநில தொழிலாளர் குடியிருக்கிற அதுவும், 24 மணி நேரம் வாகன போக்குவரத்து உள்ள அந்த ஊர் ஸ்டேஷனில் நடக்கற குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தாமல், எப்ப பார்த்தாலும், 'ஜொள்ளு' விடற அந்த அதிகாரி மீது, நடவடிக்கை எடுத்தா பரவாயில்லைதானே...!''

''கொண்டாத்தாள் குடியிருக்கிற அந்த ஊருக்கு இப்படி ஒரு அதிகாரியா?''

''விடுங்க.. எல்லாத்தையும் அவ பார்த்துட்டுதானே இருக்கா,''

''வெற்றி பெற்ற பின், கட்சிக்காரங்களை கொஞ்சம் கூட கண்டுக்காம போயிட்டாரு, நம்ம தோழர்,'' என்று 'டாபிக்' மாற்றினாள் சித்ரா.''எங்க நடந்ததை சொல்றீங்க?''

''திருப்பூர் தொகுதியில்தான். கம்யூ., வேட்பாளர் முன்னிலையில் இருப்பது தெரிஞ்சும், பெரியளவில் யாரும் கவுன்டிங் சென்டர் முன்னாடி வரலை. அவர் ஜெயிச்சதா அறிவித்தவுடன்தான், சூரிய கட்சி பட்டாசு வெடிச்சாங்க,''

''சரி.. வேட்பாளர் வரட்டும். சால்வை போட்டுடலாமுன்னு, வெயிட் பண்ணாங்க. ஆனா, வெளியில வந்த வேட்பாளர், காரை விட்டு இறங்காம போயிட்டாரு. ஜெயிக்கற வரைக்கும், 'வாங்க தோழரே' சொன்ன அவர், ஜெயிச்சவுடன், மதிக்காம போறாரேன்னு, தொண்டர்கள் புலம்பிட்டே போனாங்களாம்,''

''அதே மாதிரிங்கா. வளம் ரோட்டில், வைச்ச பேனரை, ஆளுங்கட்சிக்காரங்க கிழிச்சிட்டாங்கனு பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. கடைசியில பார்த்தா, சூரிய கட்சியை சேர்ந்தவர்கள்தான், இந்த வேலையை செஞ்சுட்டாங்கன்னு போலீஸ் கண்டுபிடிச்சிட்டாங்க. ஆனா, கம்ளைன்ட் ஏதும் வரலைன்னு, அப்படியே விட்டுட்டாங்க,''

''அதுசரி மித்து. எதுக்கு கிழிச்சாங்களாம்,''

''அக்கா.. சூரிய கட்சிக்காரங்களோட பேர் எதுவும் அச்சிடாமல் பேனர் வச்சிட்டாங்களாம். அதுக்குத்தான்,''

''ஏம்ப்பா... உளவுத்துறை போலீசுக்கு செம டோஸ் கிடைச்சுதாம். தெரியுமா?''

''ம்...ம்.. உண்மைதாங்க்கா. அ.தி.மு.க.,வின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்த அவிநாசி தொகுதியில், தி.மு.க.,வை விட, 17 ஆயிரம் ஓட்டு, குறைவாக கிடைச்சது, அக்கட்சியினரை மட்டுமல்ல, உளவுத்துறை போலீசையும், அதிர்ச்சியடைய வச்சிருக்காம்,''

''ரெண்டு நாளைக்கு முன்னாடி, உளவுத்துறை போலீசார் ஆலோசனை கூட்டத்தில், கொங்கு மண்டலத்துக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க.,வுக்கு கூடுதல் ஓட்டு கிடைக்கும்னு, உறுதியா சொன்னா போலீஸ்காரங்களுக்கு, அதிகாரிங்க, 'செம டோஸ்' விட்டாங்களாம்,''

''இந்த மோசமான தோல்விக்கு என்ன காரணம், உள்ளடி வேலை செஞ்சது யார்'னு, புள்ளி விவரத்தோட, 'பக்காவா' பைல் செஞ்சுதாங்கன்னு, உயரதிகாரி உத்தரவு போட்டு இருக்காராம்,''

''என்ன அறிக்கை கொடுத்து, என்ன பண்றது மித்து. எதையுமே பிளான் பண்ணி செய்யணும்,'' என, வடிவேல் பாணியில், சித்ரா சொன்னதை கேட்டு சிரித்த மித்ரா, ''ஏக்கா.. கோவிலில், ஜோடியா உக்கார்ந்து மணிக்கணக்கில் பேசுறாங்களே. இவங்ெகல்லாம், லவ்வர்ஸா?''என்றாள்.

''அட... நீ வேற. இவங்களில், பாதி 'நல்ல' இல்ல, 'கள்ள'காதலர்கள். கலி முத்திடுச்சு. 'சிசிடிவி' கேமராவும் வச்சிருக்காங்க. அதையும் மீறித்தான் இப்படி ஜொள்ளு விட்டுக்கறாங்க...'' என்ற சித்ரா, ''சரி... வாடி கிளம்பலாம்'' என்று எழுந்தாள். மித்ராவும் பின் தொடர்ந்தாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X