புதுடில்லி ; சொந்தவீடோ, காரோ இல்லாமல், 'சைக்கிளில் பயணம் ;குடிசையில் சயனம்' என்று மக்கள் தொண்டாற்றி வரும் எளிய மனிதர் பிரதாப் சந்திர சாரங்கியை, சிறு,குறுந்தொழில்துறை மேம்பாட்டு இணைஅமைச்சராக இணைத்து அழகு பார்த்துள்ளார், பிரதமர் நரேந்திரமோடி.

லோக்சபா தேர்தலில், 303 தொகுதிகளை பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது பா.ஜ., தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் 354 தொகுதிகளை கைப்பற்றி அசத்தியது. இதனால் மீண்டும் 2வது முறையாக பதவியேற்ற மோடி, இன்று மே 31, ல் தனது அமைச்சரவையில் பங்கேற்றோருக்கு இலாக்காக்களை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அபூர்வ மனிதர் :
அதில், 25 பேர் கேபினட் அமைச்சர்கள், 9 பேர் தனிப்பொறுப்பு கொண்ட இணை அமைச்சர்கள் மற்றும் 24 பேர் இணை அமைச்சர்களாகவும் அறிவிக்கப்பட்டனர். அதில் அமித்ஷா உள்ளிட்ட பல புதுமுகங்கள் உள்ளனர். ஜெயசங்கர் போன்ற சில கவனிக்கத்தக்க புதுமுகங்கள் உள்ளனர். எனினும், அதில் தனித்து கவனிக்கப்படவேண்டியவர், ஒடிசாவை சேர்ந்த இந்த பிரதாப் சந்திர சாரங்கி. இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் மற்றும் பிஜூ ஜனதா தளத்தின் தொழில் அதிபர் வேட்பாளர்களை வென்று, அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

வீடும் இல்லை ; காரும் இல்லை :
இவர் ஒடிசாவின் பாலசோர் தொகுதியில் பா.ஜ.,சார்பில் முதல்முறை எம்.பி., எளியமனிதரான இவர், சைக்கிளில் கிராமம் கிராமமாக சென்றும், ஆட்டோவில் சென்றும் பிரசாரம் செய்து வென்றவர். சொந்தவீடு, கார் போன்றவை இல்லை. குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவர் எளிதில் அணுகத்தக்கவர் என்கின்றனர், அப்பகுதி மக்கள். இவர் ஏற்கனவே, ஒடிசாவின் நிலகிரி தொகுதியில், 2 முறை அதாவது 2004 மற்றும் 2009 ல் சுயேட்சை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். தற்போது பா.ஜ.,வின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர்.
மீடியா அதிபர்கள் ;
இவரிடம் தோற்வர், காங்கிரஸ் வேட்பாளர் நபஜோதி பட்நாயக். இவர் ஒடிசா மாநில காங்கிரஸ் தலைவர் நிரஞ்சன் பட்நாயக்கின் வாரிசு என்ற அடிப்படையில் பிரபலமானவர். இவரது சித்தப்பா, கனக் டி.வி., சம்பாத் பத்திரிகை பத்திரிகை என்னும் பிரபல செய்தி நிறுவனமான ஈஸ்டர்ன் மீடியா நெட்வொர்க்கின் உரிமையாளர் ரஞ்சன் பட்நாயக் ஆவார். மற்றொரு வேட்பாளரான பிஜூ ஜனதா தளத்தின் ரபீந்திரகுமார் ஜென, நியூஸ் வேர்ல்டு ஒரிஸ்ஸா என்னும் செய்தி தொலைக்காட்சியின் அதிபர்.
அப்பேர்ப்பட்ட எளிமையும், நேர்மையும் கொண்ட, பிரதாப் சந்திர சாரங்கியைத் தான் பிரதமர் நரேந்திரமோடி, தனது அமைச்சரவையில் இணைத்து அழகு பார்த்துள்ளார்.