அ.தி.மு.க.,விற்கு அமைச்சர் பதவி கிடைக்காதது ஏன்?| Dinamalar

அ.தி.மு.க.,விற்கு அமைச்சர் பதவி கிடைக்காதது ஏன்?

Added : ஜூன் 01, 2019
Share

சமீபத்திய லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்று, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்றது. இந்நிலையில், அ.தி.மு.க., சார்பாக, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத் அல்லது சீனியர் தலைவர் வைத்தியலிங்கத்திற்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என, செய்திகள் அடிபட்டன. சில, 'டிவி' சேனல்கள், ரவீந்திரநாத் நிச்சயம் அமைச்சராவார் என, செய்தி வெளியிட்டன. ஆனால், தமிழகத்திலிருந்து யாருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.இதற்கு காரணம் இருக்கிறது. தமிழகத்தைப் பொருத்தவரை, தேர்தல் முடிவுகள், பிரதமருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளன. அ.தி.மு.க., அரசிற்கு, மத்திய அரசு சார்பாக, அதிக அளவில் உதவி செய்தும், பா.ஜ.,விற்கு, வெற்றி பெறக்கூடிய தொகுதி களை, அ.தி.மு.க., தரவில்லை.தமிழகத்தில், மோடியின் பிரசாரத்திற்கு வந்த கூட்டம் கூட, அ.தி.மு.க., தலைவர்களின் கூட்டத்திற்கு வரவில்லை. பா.ஜ.விற்கு வந்த இந்த கூட்டத்தை ஓட்டாக மாற்ற, அ.தி.மு.க.,வால் முடியவில்லை. இதற்கு, அ.தி.மு.க.,வின் உட்பூசலே காரணம் என்கிறது, பா.ஜ., மேலிடம். மேலும், அ.தி.மு.க., தலைவர்கள், சட்டசபை இடைத்தேர்தலில்தான் அதிக கவனம் செலுத்தினர்; பார்லிமென்ட் தேர்தலை கண்டு கொள்ளவில்லை என்றும், பா.ஜ., தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.மேற்கு வங்கத்தில், பா.ஜ., வெற்றி பெறும் போது, தமிழகத்தில் ஏன் நம்மால் வெற்றி பெறமுடியாது என்கிறார் அமித் ஷா. இதனால் கேரளா, தமிழகத்தில் சிறப்பு கவனம் செலுத்த, மோடியும் அமித் ஷாவும் முடிவு செய்துள்ளனராம். இதற்கான வேலைகள் விரைவில் துவங்கும் என, சொல்லப்படுகிறது.இதையெல்லாம் விட, முக்கியமாக ஒரு விஷயம் சொல்லப்படுகிறது. அதாவது, அ.தி.மு.க.,வுக்கு அமைச்சர் பதவி கொடுத்து, அவரால் ஊழல் பிரச்னை ஏதும் வந்துவிடுமோ என்பதாலும் பதவி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு, ரஜினி வந்ததில் பிரதமருக்கு மகிழ்ச்சி. தமிழகத்தில், பா.ஜ., விற்கு ரஜினி மூலமாக வெற்றி கிடைக்கலாம் என்கிறது, பா.ஜ., மேலிடம். அப்படியானால், ரஜினி - - பா.,ஜ கூட்டணி அமைகிறதா என கேட்டால், 'இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது' என, பதில் வருகிறது.


விமானத்திலேயே முடிவான அமைச்சரவை பட்டியல்

லோக்சபா தேர்தலில், மோடியின் அபார வெற்றி, எதிர்க்கட்சிகளை பரிதாப நிலைக்கு தள்ளிவிட்டது. ஒரு பக்கம் ராகுல், தன் அறையிலேயே அடைந்து கிடக்கிறார். தன் அம்மா சோனியா மற்றும் சகோதரி பிரியங்காவை தவிர்த்து, யாருடனும் பேச மறுக்கிறார். பல, 'சீனியர்' தலைவர்கள் ராகுல் வீட்டில் காத்திருந்து விட்டு திரும்பி விடுகின்றனர்.பா.ஜ., தரப்பிலோ கொண்டாட்டம்தான். இருந்தாலும், அமைச்சர் பதவிக்காக, 'லாபி' செய்ய, பல தலைவர்கள் தயங்கினர். காரணம், மோடி மீதுள்ள பயம்தான். அமைச்சரவை பட்டியல் தயாரிப்பிலும், மோடியின் வழி தனி வழி தான்.தேர்தலில், பா.ஜ.,வின் அபார வெற்றிக்குப் பிறகு, தன் தாயாரைச் சந்தித்து ஆசி பெற, மோடி தனி விமானத்தில் ஆமதாபாத் சென்றார். கூடவே, கட்சி தலைவர் அமித் ஷாவும் சென்றார். பிறகு ஆமதாபாதிலிருந்து, மோடியின் தொகுதியான வாரணாசிக்கும், இருவரும் தனி விமானத்தில் சென்றனர். அங்கு, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு, தனி விமானத்தில் இருவரும் டில்லி திரும்பினர்.தனி விமானத்தில் பயணம் செய்த நேரத்தை பயன்படுத்தி, அமைச்சரவை பட்டியலை தயார் செய்து விட்டதாம், மோடி- -அமித் ஷா கூட்டணி.


ராகுல் ராஜினாமா செய்தாரா?

காங்கிரசின் படுதோல்விக்கு பிறகு, ராகுல் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என, சொல்லப்பட்டது. ஆனால், ராகுல் ராஜினாமா செய்தது உண்மைதானா என, 'சீனியர்' காங்கிரஸ் தலைவர்கள் பலர் கேள்வி எழுப்புகின்றனர். ராகுல், தன் ராஜினாமா கடிதத்தை யாரிடம் கொடுத்தார் என்றும், அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.வழக்கமாக இந்திரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், பதவியிலிருந்து விலகினால், உடனே டில்லியில் காங்., தொண்டர்கள் திரண்டு விடுவர்.'ராஜினாமா செய்யாதீர்கள்' என, அவர்களின் அதிகாரபூர்வ இல்லம் முன் அணி வகுத்து கோஷமிடுவர். ஆனால், ராகுல்ராஜினாமா விவகாரத்தில், இப்படி எதுவும் நடக்கவில்லை .இதைப்பார்த்து, சோனியா குடும்பத்திற்கு நெருக்கமான சில சீனியர் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, 'ராகுல் பதவி விலகக் கூடாது' என, ஒவ்வொரு மாநில காங்கிரஸ் கமிட்டியும், தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, டில்லி தலைமையிடத்திலிருந்து உத்தரவு பறந்தது. உடனே தான், மாநில, காங்., கமிட்டி தலைவர்கள் இந்த தீர்மானத்தை நிறைவேற்றி வருகின்றனர்.


விஸ்வரூபம் எடுக்கிறார் அமித் ஷா?

பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, நிதி அமைச்சராகப் போகிறார் என, ஊடகங்கள் செய்தி வெளியிட, பலரும் அது குறித்து, கருத்துகளை தெரிவித்தனர். ஆனால், அவர் உள்துறை அமைச்சராக, நம்ம ஊர் நிர்மலா சீதாராமன், நிதி அமைச்சராகிவிட்டார். யாருக்கு எந்த இலாகா என்ற விபரம் வெளியே கசியவேயில்லை. மோடி அரசில், ரகசியத்தை அப்படி காக்கின்றனர். பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக, அமைச்சரவையில், 'பவர்புல்' ஆக இருப்பவர் அமித் ஷா. கடந்த, 2014 பா.ஜ., ஆட்சியில், இந்த துறையை, ராஜ்நாத் சிங் கவனித்து வந்தார். இவர், அமைதியானவர். எந்த விஷயத்திலும் தடாலடியாக இறங்க மாட்டார். ஆனால், அமித் ஷா அப்படியல்ல. ராஜ்நாத்திற்கு முற்றிலும் நேர் எதிரானவர். உள்துறை அமைச்சகத்தில், பல பரபரப்பான விஷயங்கள் அரங்கேற போகிறது என்கின்றனர், அமித் ஷாவிற்கு நெருக்கமானவர்கள். மோடி மற்றும் அமித் ஷாவிற்கு குடைச்சல் கொடுத்த, காங்கிரஸ் தலைவர்களுக்கு, இனி பிரச்னை தான். அவர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் எல்லாம் துாசி தட்டி எடுக்கப்பட்டு, அவர்களை சிறைக்கு அனுப்ப, அமித் ஷா முயற்சிப்பார் என, சொல்லப்படுகிறது. இன்னொரு முக்கியமான விஷயமும் சொல்லப்படுகிறது. அமித் ஷாவிற்கு இப்போது, 54 வயதாகிறது. மோடி தன் வாரிசாக, அமித் ஷாவைக் கொண்டு வந்துள்ளார். மோடிக்கு பிறகு, பா.ஜ. ஆட்சி அமைக்கும் போது, அமித் ஷாதான் பிரதமர். இப்படி சொல்வது, பா.ஜ., 'சீனியர்' தலைவர்கள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X