தண்ணீர்: துாங்கும் அரசு!

Added : ஜூன் 02, 2019 | கருத்துகள் (1) | |
Advertisement
பெருநகரங்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க, பெருநகர் குடிநீர் வடிகால் வாரியமும், ஏனைய தமிழகத்தின் குடிநீர் பிரச்னையை தீர்க்க, தமிழக குடிநீர் வடிகால் வாரியமும் செய்தது என்ன... அரசும் இனி செய்யப் போவது என்ன என்ற கேள்வி எழுகிறது.'எத்தனையோ ஆயிரம் அதிகாரிகளும், ஊழியர்களும், இத்தனை மாதமும் என்ன செய்தனர்... ஒவ்வொரு கோடையிலும் இப்படித் தானே வாட்டி வதைக்கின்றனர்' என்ற
 தண்ணீர்: துாங்கும் அரசு!

பெருநகரங்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க, பெருநகர் குடிநீர் வடிகால் வாரியமும், ஏனைய தமிழகத்தின் குடிநீர் பிரச்னையை தீர்க்க, தமிழக குடிநீர் வடிகால் வாரியமும் செய்தது என்ன... அரசும் இனி செய்யப் போவது என்ன என்ற கேள்வி எழுகிறது.'எத்தனையோ ஆயிரம் அதிகாரிகளும், ஊழியர்களும், இத்தனை மாதமும் என்ன செய்தனர்... ஒவ்வொரு கோடையிலும் இப்படித் தானே வாட்டி வதைக்கின்றனர்' என்ற வேதனைக் குரல்கள் எழுகின்றன.ஒன்பது மாதங்களுக்கு ஒரு முறை, நான்கைந்து மாதங்கள் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறதே... இது, அதிகாரிகளுக்கும், அரசுக்கும் தெரியாதது ஏன்?மழை காலத்திற்காக, எறும்பு போன்ற சிறிய உயிர்கள் கூட, தீவனம் போன்றவற்றை சேமித்து வைக்கின்றன. எல்லாம் தெரிந்த மனிதர்களுக்கு, தண்ணீரை சேமிக்க தெரியாமல் போனது எவ்வாறு?'தி.மு.க., ஒரு சில ஏரிகளைத் தான், பெயருக்கு துார் வாருகிறது; குடிமராமத்து திட்டத்தின் மூலம், தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களை, நாங்கள் துார் வாருகிறோம்' என்றனரே, இப்போதைய ஆட்சியாளர்கள்!அதற்காக, முதல் கட்டமாக, பல நுாறு கோடி ரூபாய் செலவழித்தனரே... அவ்வாறு துார் வாரியதால், கோடையில், இந்த ஏரியில் தண்ணீர் இருக்கிறது என, ஒரு ஏரியை அவர்களால் காட்ட முடியுமா...ஆண்களும், பெண்களும் தண்ணீர் லாரி வருவதை எதிர்பார்த்து, விடிய விடிய காத்திருக்கின்றனர். 'ஆளுக்கு ஐந்து குடம்' என, கடந்த வாரம் வினியோகிக்கப்பட்டது.இப்போது, இரண்டு குடமாக குறைக்கப்பட்டு விட்டது.இதை விட பெரிய அவலம், சாலையோரங்களில், போலீஸ் வைத்துள்ள கண்காணிப்பு கேமராக்களில், இரவு நேரங்களில், தண்ணீர் கேனை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாவது தான்!'மாடி வீட்டிற்கு எல்லாம் துாக்கிட்டு வர முடியாது; வீட்டு வாசல்ல கொண்டு வந்து வைச்சுடுவேன். ஒரு குடம் தண்ணீர், பத்து ரூபாய். பத்து குடம் தான் தர முடியும். பணத்தை முன்கூட்டியே கொடுத்துடணும்' என, எத்தனை, 'கண்டிஷன்' போட்டாலும், 'பரவாயில்லை' என்று, தண்ணீர் வாங்கியபடி தான் இருக்கின்றனர், நம் மக்கள்.'போனி' புயல் வந்து பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை. அது மழையைக் கொண்டு வரட்டும்' என்ற விரக்தியான மன நிலையில், புயலைக் கூட வரவேற்க தயாராகத் தான் இருந்தோம். ஆனால், அந்த பாவிப்புயல், இருந்த ஈரப்பதத்தையும் துடைத்து எடுத்து போய் விட்ட சோகம், தமிழகத்தில் பலருக்கு இன்னமும் இருக்கிறது.'உலக மக்கள் தொகை தற்போது, 700 கோடி. 2050ம் ஆண்டில், 900 கோடியாகும். அப்போது, மனிதர்களின் தண்ணீர் தேவை இன்னும் அதிகரிக்கும். கிடைக்கும் தண்ணீரோ, இன்னும் குறையும். அப்போது இந்த உலகம் என்ன செய்யப் போகிறது' என, புள்ளிவிபரத்துடன், விஞ்ஞானி ஒருவர் கேட்கிறார்.'தண்ணீர் பிரச்னை, இப்படியே போனால், இன்னும் முப்பது நாள் கூட தாங்க மாட்டோம்' என்ற கவலையே பெரியதாக இருக்கும் போது, முப்பது வருடத்திற்கு பிறகான அந்த கவலை பற்றி, யோசிக்க வில்லை' என, பதில் குரல் வருகிறது.அண்டை மாநிலமான, கர்நாடகாவின் நிலைமையும் சொல்லிக் கொள்வது போல இல்லை. அவர்களிடம் உபரி நீர் இருந்தால் தான், தமிழகத்தில் ஜீவராசிகள் வசிப்பதைக் கவனத்தில் கொள்வர்.பொங்கி வழியும் போதே கொடுக்காதவர்கள், சுப்ரீம் கோர்ட், காவிரி மேலாண்மை ஆணையம் போன்றவற்றின் உத்தரவுக்குப் பயந்து, வறண்ட நிலையில், இப்போது தரவா போகின்றனர்?நதி நீர் இணைப்பு, உபரி நீர் கிடைப்பு என்பது எல்லாம், கானல் நீராக இருக்கும் இன்றைய நிலையில், நமக்கு நாமே, நீர் மேலாண்மை செய்து கொண்டால் தான் பிழைக்க முடியும்; வரும் தலைமுறையும் தழைக்க முடியும்.அது எப்படி?'இனி ஒரு விதி செய்வோம்' என்பது போல, தமிழகத்தில் உள்ள ஆறு, குளம், ஏரி என, எந்த நீர் நிலையானாலும், அதை ஆக்கிரமிக்க விடக் கூடாது; அதை அசுத்தப்பட விடாமல் தடுக்க வேண்டும். நீர் நிலைகளை, வழிபாட்டுத்தலம் போல, பக்தியுடன் நிர்வகிக்க வேண்டும்.மழை காலங்களில் கிடைக்கும் நீரை, பூமிக்கடியில் பொக்கிஷம் போல பாதுகாப்பதற்கும், நீர் கலன்களில் சேமித்து வைப்பதற்கும், புதிய வழிவகை காணப்பட வேண்டும்.பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டம் போல, மழை நீர் சேகரிப்பு திட்டமும், தீவிரமாக அமல்படுத்தப்பட வேண்டும். நீர் மேலாண்மை, நீர் சிக்கனம் பற்றி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; அதை, பள்ளிக் குழந்தைகளுக்கே பாடமாக்கப்பட வேண்டும்.'ஷவரில்' குளிப்பதை நிறுத்துங்கள்; வாளியில் பிடித்து குளியுங்கள்; ஷவரில் தான் குளித்து பழக்கம் என்றால், 2 நிமிடத்திற்கு மேல் செலவிடாதீர்கள். முடிந்தவரை, தண்ணீர் அதிகம் செலவு வைக்காத, 'இண்டியன் டாய்லெட்'டை உபயோகியுங்கள்; 'வெஸ்டர்ன் டாய்லெட்' வேண்டாமே!குழாயைத் திறந்து விட்டு, பல் துலக்குவதும், ஷவரம் செய்வதும் கூட, நீரை வீணாக்கும் செயல் தான். குவளையில் தண்ணீர் பிடித்து உபயோகியுங்கள்.திருமண மண்டபங்களில், இலைக்கு இலை வைக்கப்படும் தண்ணீர் பாட்டிலை, ஒரு மடக்கு குடித்து விட்டு, அதை அப்படியே, குப்பைக்கு அனுப்புவது போன்ற பாவம், வேறு எதுவுமே இல்லை. வெட்கம் பார்க்காமல் மீதி தண்ணீரை, பாட்டிலோடு வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள்.'நான்கு வீட்டிற்கு, ஒரு கிணறு வைத்திருக்கிறோம்; அவற்றை, காலம் காலமாக பராமரிக்கிறோம். எவ்வளவு கோடையிலும், தண்ணீர் குறையுமே தவிர வற்றாது' என்று சொல்லும், ஈரோடு மாவட்ட, கிராம மக்கள் சொல்வதை, காது கொடுத்து கேளுங்கள்'தண்ணீரை, தாத்தா ஆற்றில் பார்த்தார்; அப்பா, கிணற்றில் பார்த்தார்; நான், பாட்டிலில் பார்க்கிறேன்; என் பிள்ளை, எப்படி பார்ப்பான் என நினைக்கவே, திகைப்பாகவும், மலைப்பாகவும், பயமாகவும் இருக்கிறது!' இது, உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர், மனம் கலங்கிச் சொன்ன விஷயம்.அவர் போல பலர், இவ்வாறு ஏற்கனவே சொல்லியுள்ளனர் என நினைத்து, தண்ணீரை அநாவசியமாக செலவழிப்பதால், நஷ்டம் நமக்குத் தான்!

எல்.முருகராஜ்

பத்திரிகையாளர்

அலைபேசி: 9944309637

இ - மெயில்: murugaraj@dinamalar.in


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (1)

Darmavan - Chennai,இந்தியா
09-ஜூன்-201907:29:15 IST Report Abuse
Darmavan எல்லோரும் அழுகிறோமே தவிர சரியான யோசனை சொல்லவில்லை.இந்த தூர்வாரும் பணியை பொதுநல சேவை செய்பவர்களிடம் கொடுக்க ஏன் கோர்ட் ஆணையிடக்கூடாது.இதனால் பாதிக்கப்படுவோரின் மேற்பார்வையில் தூர்வாரவேண்டும் என்று ஏன் ஆணையிடக்கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X