சினிமாக்களின் தாயகமாக திகழும் மேடை நாடகங்களுக்கு இன்றும் மவுசு இருக்கத் தான் செய்கிறது. சினிமா அளவிற்கு நாடகங்களை விரும்பும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதனால் தான் கலை திறமையுள்ள இளைஞர்கள் புராண, நவீன நாடகங்களை இயக்கியும், நடித்தும் வருகிறார்கள்.
மேடை நாடக துறையில் நடிப்பு முத்திரை பதித்து வரும் நாயகி ஸ்மிருதி பேசுகிறார்....''எனக்கு சொந்த மாநிலம் கேரளா, நடிகையாகும் ஆசையுடன் சென்னைக்கு வந்து எம்.ஏ., மீடியா ஆர்ட்ஸ் படித்தேன். ஆரம்பத்தில் விளம்பரங்கள், பைலட் படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்தேன். சினிமாவில் தான் என்றில்லை மேடை நாடகங்களிலும் நடிக்கலாம் என்ற சிந்தனைக்கு பின் அருண்மொழி என்பவரிடம் 'தியேட்டர் ஆக்டிங்' பயிற்சி பெற்றேன்.
'வானம்' கலைக்குழுவில் இணைந்து 'புத்தர்' 'முனைவர்', 'ஒரு பிடி சோறு' மேடை நாடகங்களில் நடித்தேன். 'பூக்காரி', 'உறங்கா நிறங்கள்', 'ஒக்கி' என இதுவரை 9 குறும்படங்களிலும் நடித்துள்ளேன். 'ஒக்கி' படத்தில் 40 பேர் நடித்துள்ளனர், கதை முழுவதும் என்னை சுற்றி நகரும். இந்த படத்தில் நடிக்க என் கூந்தலை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், வெட்டிய முடியை 'கேன்சர்' நோயாளிகளுக்கு தானமாக கொடுத்ததில் மகிழ்ச்சி. சமூக விழிப்புணர்வு குறும்படம், வீதி நாடங்களில் நடிக்க பணம் வாங்குவதில்லை.
எனக்கு நாட்டுப்புற கலை பிடிக்கும் என்பதால் காளீஸ்வரன் என்ற கலைஞரிடம் கரகம், பறை கற்று அரங்கேற்றி வருகிறேன். நடிகை சரண்யா போல வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும். ரசிகர்கள் என்னை அடையாளம் காணும் அளவிற்கு நடிப்பில் என் திறமையை நிரூபிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இதுவரை சினிமாவில் நடிக்க முயற்சி செய்யவில்லை; என் நடிப்பு திறமையை பார்த்து வாய்ப்பு தேடி வர வேண்டும் என காத்திருக்கிறேன். சினிமாவில் நடித்தாலும் காலமெல்லாம் மேடை நாடக நாயகியாக இருக்க வேண்டும் என்பதே என் லட்சியம் என்றார்.இவரை வாழ்த்த smruthishylu49@gmail.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE