பொது செய்தி

இந்தியா

தேசிய கல்வி கொள்கை என்ன சொல்கிறது!

Updated : ஜூன் 03, 2019 | Added : ஜூன் 03, 2019 | கருத்துகள் (57)
Advertisement
தேசிய கல்வி கொள்கை, மத்திய அரசு, பா.ஜ.,

புதிய தேசிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட, கஸ்துாரிரங்கன் தலைமையிலான குழு, தனது பரிந்துரைகளை அளித்துள்ளது. இந்த வரைவு கொள்கைகள் குறித்து, வரும், 30ம் தேதி வரை, பொதுமக்கள் தங்களுடைய கருத்து களை தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த, 1986ல், அப்போதைய பிரதமர் ராஜிவ் தலைமையிலான, காங்., அரசு கொண்டு வந்த, தேசிய கல்விக் கொள்கையே, தற்போது நாடு முழுவதும் அமலில் உள்ளது. பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான, காங்., ஆட்சியின்போது, 1992ல் திருத்தம் செய்யப்பட்டது.'மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில், புதிய தேசிய கொள்கை அறிவிக்கப்படும்' என, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது, பா.ஜ., தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.


எதிர்ப்புமத்தியில் பா.ஜ., அரசு அமைந்த பிறகு, தேசிய கல்வி கொள்கைக்கான பரிந்துரைகளை அளிப்பதற்காக, மத்திய அரசின் முன்னாள் செயலர், டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.இந்தக் குழு, 2016ல் தன் வரைவு அறிக்கையை தாக்கல் செய்தது. உயர் கல்விக்கு தனி ஆணையம்; தனியாரை அதிக அளவில் ஈடுபடுத்துவது உள்பட, பல பரிந்துரைகள் அளிக்கப்பட்டிருந்தன. இதற்கு, பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் முன்னாள் தலைவரான, கஸ்துாரிரங்கன் தலைமையில், ஒன்பது பேர் இடம் பெற்ற மற்றொரு குழு, 2017ல் அமைக்கப்ப்டது.அல்போன்ஸ் கன்னந்தனம், ராம்சங்கர் குரீல், எம்.கே. ஸ்ரீதர், டி.வி.கட்டிமணி, மஸார் ஆசிப், கிஷன் மோகன் திரிபாதி, மஞ்சுல் பார்கவா, வசுதா காமத் ஆகியோர், இந்தக் குழுவில் இடம் பெற்றனர்.


இணைய தளம்இந்தக் குழு, பல்வேறு தரப்பினருடன் ஆலோசனைகளை நடத்தி, 484 பக்கங்கள் உடைய, வரைவு தேசிய கல்வி கொள்கையை, மத்திய அரசிடம் தாக்கல் செய்துஉள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், இணைஅமைச்சர், சஞ்சய் ஷாம்ராவ் தாத்ரேவிடம், இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுஉள்ளது.மேலும், அமைச்சகத்தின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அறிக்கை மீதான கருத்துக்களை, வரும், 30ம் தேதி வரை தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, இந்த அறிக்கை இறுதி செய்யப்பட்டு, அமைச்சரவையின் ஒப்புதலோடு, தாக்கல் செய்யப்படும். முழுமையான புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை, www.mhrd.gov.in என்ற, இணைய தளத்தில் பார்க்கலாம். பொதுமக்கள் தங்கள் கருத்துகளை, nep.edu@nic.in என்ற, இ - மெயில் முகவரிக்கும் அனுப்பலாம் என்று, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தெரிவித்து உள்ளது.


திணிக்க மாட்டோம்!தேசிய கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கையே தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது இறுதி அறிக்கை அல்ல. எந்த மொழியையும் திணிக்க மாட்டோம்.

ரமேஷ் போக்ரியால் நிஷாங்க்

மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர்,
பா.ஜ.,கஸ்துாரி ரங்கன் தலைமையிலான குழு அளித்துள்ள, தேசிய கல்வி கொள்கை, வரைவு

அறிக்கையில் இடம் பெற்றுள்ள, முக்கிய பரிந்துரைகள்:


பள்ளி கல்வி
* மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான, திறன் மற்றும் அறிவை ஏற்படுத்தும் வகையில், கல்வி முறையை மாற்ற வேண்டும்

* அதற்கு, ஐந்தாம் வகுப்பு அல்லது எட்டாம் வகுப்பு வரை, தாய்மொழி வழி கல்வி, கட்டாயமாக்கப்பட வேண்டும்
* வேலை வாய்ப்புக்கு ஏற்ற வகையில், பள்ளிக் கல்வியை மாற்றி அமைக்க வேண்டும்
* அறிவியல், தொழில்நுட்பம், கல்வி மற்றும் தொழில்துறையில் ஏற்படும், திறமைசாலிகள் பற்றாக்குறையை போக்கும் வகையில், பள்ளிக் கல்வி திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும்
* பள்ளிக் கல்வித்துறைக்கு, அதிக நிதி ஒதுக்க வேண்டும்
* அனைத்து மாநிலங்களிலும், மும்மொழி கல்வி திட்டம் கொண்டு வர வேண்டும். ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு, ஹிந்தி தவிர, ஆங்கிலம் மற்றும் வேறு ஓர் இந்திய மொழியை கற்பிக்க வேண்டும். அதேபோல், மற்ற மொழியை தாய்மொழியாக கொண்ட மாணவர்களுக்கு, மூன்றாவது மொழியாக ஹிந்தி கற்றுத்தர வேண்டும்
* ஹிந்தி பேசும் மாநிலங்களில், தாய்மொழி மற்றும் ஆங்கிலத்தை தவிர, மூன்றாவது மொழி எது என்பதை அவர்களே முடிவு செய்யலாம். ஹிந்தி பேசாத மாநிலங்களில், மூன்றாவது மொழியாக ஹிந்தி கற்றுத் தர வேண்டும்
* ஆறாம் வகுப்பில், தாங்கள் கற்கும் மூன்று மொழிகளில் ஒன்றை, மாற்றிக் கொள்ள அனுமதிக்க வேண்டும்
* மேல்நிலைக் கல்விக்கு செல்லும் முன், மூன்று மொழிகளிலும் தங்களுக்கு இருக்கும் திறமையை மாணவர்கள் நிரூபிக்கும் வகையில், வாரியத் தேர்வு அமைய வேண்டும்
* பள்ளிக் கல்வியில் இருந்தே, மாணவர்களை திறன் மிகுந்தவர்களாக தயார்படுத்த வேண்டும்
* ஓவியம், இசை, கைத்தொழில், விளையாட்டு, யோகா, சமூக சேவை ஆகியவற்றை, தனித்திறன் பாடமாக இல்லாமல், பாடத் திட்டத்திலேயே சேர்க்க வேண்டும்
* அடிப்படை கல்வி உரிமையை, 12ம் வகுப்பு வரை கல்வி கற்பதை கட்டாயமாக்கும் வகையில், மாற்ற வேண்டும்
* பள்ளிக் கல்வியை, நான்காக பிரிக்க வேண்டும். எல்.கே.ஜி., முதல், 2ம் வகுப்பு வரை, முன் தொடக்கக் கல்வி; மூன்று முதல் ஐந்தாம் வகுப்பை, தொடக்கக் கல்வி; ஆறு முதல் எட்டாம் வகுப்புகளை, நடுநிலைக் கல்வி; ஒன்பது முதல் 12ம் வகுப்புகளை,

மேல்நிலைக் கல்வி என பிரிக்க வேண்டும்

* ஒன்பது முதல், 12ம் வகுப்பு வரையிலான நான்கு ஆண்டுகளை, கல்லூரிகளில் உள்ளது போல், எட்டு பருவங்களாக பிரித்து, பருவத் தேர்வுகளை நடத்த வேண்டும்
* மாணவர்கள் ஒரு பாடத்தில் தேர்வு எழுதிய பிறகு, மீண்டும் அதே பாடத்தை படித்து, அதைவிட சிறப்பாக எழுத விரும்பினால், அதற்கு அனுமதிக்க வேண்டும்
* தொடக்கக் கல்வி வரையிலான மாணவர்களுக்கு, இலவச மதிய உணவுடன், சத்தான காலை உணவும் வழங்க வேண்டும்
உயர் கல்வி* பல்கலை மானியக் குழு போன்ற கல்வித் துறை சார்ந்த உயர் அமைப்புகளை கலைத்துவிட்டு, தேசிய கல்வி ஆணையத்தை அமைக்க வேண்டும்

* நாடு முழுவதும், உயர் கல்வி திட்டங்களை, இந்த அமைப்பே உருவாக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளுக்கு பாலமாக, இந்த அமைப்பு இருக்க வேண்டும்
* ஆராய்ச்சி கல்வியை வலுப்படுத்தும் வகையில், தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையை உருவாக்க வேண்டும்
* லாப நோக்கமில்லாத வகையில், தனியார் கல்வி நிறுவனங்கள் இருக்க வேண்டும்
* உயர் கல்வியின் நான்கு முக்கிய கட்டங்களான, தர நிர்ணயம், நிதி ஒதுக்கீடு, அங்கீகாரம் மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை, தனி தனி அமைப்புகள் மூலம் செயல்படுத்த வேண்டும்; கண்காணிக்க வேண்டும்
Advertisement* இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழில்முறை கல்வி உள்பட, அனைத்து உயர் கல்வியை கண்காணிக்க, தேசிய உயர் கல்வி கண்காணிப்பு ஆணையம் அமைக்க வேண்டும்

* என்.ஏ.ஏ.சி., எனப்படும், தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலை சீரமைக்க வேண்டும்
* கல்வி தரத்தை உயர்த்தும் வகையில், யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக் குழுவை கலைத்துவிட்டு, மானியங்கள் வழங்க தனி குழு அமைக்க வேண்டும்
* உயர் கல்வியில், உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிப் படிப்பு வழங்க வேண்டும்
* பி.ஏ., - பி.எஸ்.சி., - பி.காம்., உள்ளிட்ட பட்டப் படிப்பை, மாணவர்கள் எப்போது தயாரோ, அப்போது தேர்வு எழுதும் வகையில் மாற்றியமைக்க வேண்டும்
* இளநிலை பட்டப் படிப்புகளில், புதிய மாற்றம் செய்ய வேண்டும். உதாரணத்துக்கு, பி.ஏ., - பி.எஸ்.சி., - பி.காம்., போன்ற படிப்புகளை, நான்கு ஆண்டுகள் உடைய ஹானர்ஸ் படிப்பாக மாற்ற வேண்டும். இதில், முதல் இரண்டு ஆண்டுகளுடன் வெளியேறினால், பட்டயமும், மூன்றாம் ஆண்டில் வெளியேறினால், பட்டமும், நான்கு ஆண்டும் படித்தால், ஹானர்ஸ் பட்டமும் வழங்கலாம்
* 'மிஷன் நாளந்தா' என்ற பெயரில், வரும், 2030க்குள், நாடு முழுவதும், ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் தரும், 100 பல்கலைகள் மற்றும் 500 உயர் தர பல்கலைகள் அமைக்க வேண்டும்
* 'மிஷன் தக் ஷஷீலா' என்ற பெயரில், ஒவ்வொரு மாவட்டத்திலும், குறைந்தபட்சம், ஒரு உயர் தரம் வாய்ந்த, தங்கி பயிலும் கல்வி நிறுவனம் அமைக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கு பயிற்சி
* ஆசிரியர்களுக்கு, மூன்று ஆண்டுக்கு ஒருமுறை பயிற்சியும், ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்வும் வைக்க வேண்டும். அதன்படியே, ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும்

* ஆசிரியர் பயிற்சியிலும், மிக முக்கிய மாற்றங்கள் தேவை. தரமில்லாத ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை மூட வேண்டும்
* ஆசிரியர் பயிற்சி பாடங்களை, பல்கலை அல்லது கல்லூரிகளுக்கு மாற்ற வேண்டும்* நான்கு ஆண்டுகள் உடைய, பி.எட்., படிப்பையே, ஆசிரியர் பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியாக்க வேண்டும்

* மாநில அளவில், பள்ளிகள் ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க வேண்டும்
* தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்த ஆணையம் நிர்ணயிக்க வேண்டும்
* தேசிய மொழி பெயர்ப்பு பல்கலை அமைக்க வேண்டும்
* மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரை, கல்வி அமைச்சகம் என, மாற்ற வேண்டும்
* பள்ளிக் கட்டடங்களையும், மாணவர்கள் கல்வி கற்கும் சூழலுக்கேற்ற வகையில், மாற்றியமைக்க வேண்டும்
முந்தைய கொள்கைகள்முதல் தேசிய கல்வி கொள்கை, 1968ல், பிரதமர் இந்திரா தலைமையிலான, காங்., அரசால் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 1986ல், அப்போதைய பிரதமர், ராஜிவ் தலைமையிலான காங்., அரசு இரண்டாவது கல்விக் கொள்கையை அறிவித்தது.


கோத்தாரி கல்வி குழுபிரதமர் இந்திரா அரசு நியமித்த கோத்தாரி கல்விக் குழு, 1964 - 1966ல் பல்வேறு ஆலோசனைகளை நடத்தி, தனது அறிக்கையை அளித்தது. அதன் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்திரா அரசு, 1968ல், நாட்டின் முதல் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியது. அரசியல் சாசனத்தின்படி, 14 வயதிற்குள் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய கல்வி அளிப்பதற்கான கொள்கை மற்றும் ஆசிரியர்களின் சிறந்த பயிற்சி மற்றும் தகுதி ஆகியவை முக்கியதுவம் பெற்றிருந்தன.மும்மொழி கல்விக் கொள்கை முன்னிலைபடுத்தப்பட்டது. ஹிந்தி மொழியை, தேசிய மொழியாக ஏற்றுக் கொள்வதற்கான முடிவு, சர்ச்சையை ஏற்படுத்தினாலும், 'நாடு முழுவதும் ஒரு பொதுவான மொழியை ஊக்குவிப்பதற்காக ஹிந்தியை கற்றுக் கொள்ள வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது. அதேபோல், நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஒரு முக்கிய பகுதியாக கருதப்பட்ட, பண்டைய சமஸ்கிருத மொழியின் போதனையையும் இந்தக் கொள்கை ஊக்குவித்தது.


இரண்டாவது கொள்கைகடந்த, 1985, ஜனவரியில், புதிய கல்வி கொள்கை கொண்டு வரப்படும் என, அப்போதைய பிரதமர், ராஜிவ் அறிவித்தார். கடந்த, 1986 மே மாதத்தில், நாட்டின் இரண்டாவது கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது.இதில், அனைவருக்கும் கல்வி வாய்ப்பு, குறிப்பாக, பெண்கள் மற்றும் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.


மதிக்கிறோம்!
தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது, வரைவு தேசிய கல்விக் கொள்கையே. நாட்டு மக்களின் கருத்து கோரப்பட்டுள்ளது. மாநில அரசுகளுடன் பேச உள்ளோம். அதன் பிறகே, இறுதி அறிக்கை தயாரிக்கப்படும். அனைத்து மொழிகளையும், மத்திய அரசு மதிக்கிறது. எந்த மொழியும் திணிக்கப்படாது.

ஜெய்சங்கர்
வெளியுறவுத் துறை அமைச்சர், பா.ஜ.,
தமிழை வளர்ப்போம்!
மக்கள் கருத்துகளை கேட்டறிந்த பின்பே, தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும். பிரதமர் அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்க விரும்பியே, 'ஒரே பாரதம்; உன்னத பாரதம்' என்ற, முயற்சியை துவக்கினார். தொன்மையான தமிழை போற்றி வளர்ப்பதற்கு, மத்திய அரசு முன்னின்று ஆதரிக்கும்.

நிர்மலா சீதாராமன்
மத்திய நிதி அமைச்சர்,பா.ஜ.,
மொழி வளர்ச்சி!
அனைத்து மொழிகளும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதுதான், மத்திய அரசின் நோக்கம். எந்த மொழியையும் திணிப்பது அல்ல. அனைத்து தரப்பினருடன் ஆலோசனை நடத்திய பிறகே, தேசிய கல்வி கொள்கை நடைமுறைபடுத்தப்படும்.

பிரகாஷ் ஜாவடேகர்
தகவல் மற்றம் ஒலிபரப்பு துறை
அமைச்சர், பா.ஜ.,

Advertisement
வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palanichamy Thangappan - Madurai,இந்தியா
17-ஆக-201914:07:17 IST Report Abuse
Palanichamy Thangappan உலகின் குரு வாக பாரதம் ஆகும் தருணம் . கடலில் (பரமாத்மா ) இருந்து நீர்த்துளியாக பூமியில் விழுந்துள்ளோம் நாம் (ஜீவாத்மா) . ஏதாவது ஒரு நதி வழி யாக கடலை அடைய வேண்டும் / எல்லா நதியும் ஒன்று எனபது ஹிந்து தர்மம். நதியை பற்றிய அறிவே நீர்த்துளிக்கு வேண்டாம் என்பது மதச்சார்பின்மை. . காவேரி மட்டுமே வழி (கடலை அடையும் ) என்பது ஒருமார்க்கம் (கிறிஸ்துவம் ). காவேரியும் கடலை அடையும் என்பது ஹிந்து தர்மம் . அது போல் வைகை மட்டுமே கடலை அடையும் என்பது ( இஸ்லாம்) . வைகையும் கடலை அடையும் என்பது ஹிந்து தர்மம் . எனவே ஹிந்து என்பது குறுகிய எண்ணம் இல்லை . அது பரந்த மனப்பான்மை . அதனால் தான் முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீ அப்துல் கலாம் சிலை இன் கீழ் பகவத்கீதை மட்டும் வைத்திருக்கிறோம். மத சார்பின்மை வேண்டாம். ஹிந்து தர்மம் (ஹிந்து ராஷ்ட்ரம்) வேண்டும் . அதற்கு 2 / 3 மெஜாரிட்டி பாராளுமன்றத்தில் வேண்டும். மதச்சார்பற்ற அரசின் மதசார்பற்ற கல்வியே தேச பக்தி இல்லாத , சுயநலம் மற்றும் நேர்மையற்ற தன்மைக்கும் காரணம் . கடவுளை காட்டாத கல்வி வேண்டாம் .ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.
Rate this:
Share this comment
Cancel
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
06-ஜூன்-201917:19:25 IST Report Abuse
TAMILAN உங்களை போல் பேசுவதால். பயனில்லை. வரலாற்றைப்பாருங்கள். தமிழ் நாட்டில் ஏன் வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முதலிடமில்லை. கண்ட மாநில காரர்களை முதமைச்சர் ஆக்குவதால் அவரவர் மாநில மக்களை தமிழ் நாடு அரசாங்க உத்தியோகத்தில் உட்கார வைத்து விடுகின்றார்கள். தமிழ் நாட்டில் அரசாங்க வேலைகளில் கருணாநிதியால் தமிழ் பெயர்கொண்ட, தமிழ் பேசும் தெலுங்கர்களும், எம்.ஜீ . .ஆர் ஆல் மலையாளிகளும் , மேலும் அவர்கள் நல்ல நல்ல ஏரியாவில் வீடு கொண்டவர்களாகவும் மாற்றப்பட்டார்கள். சென்னையில் வண்டி இழுப்பவர்களும், காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்பவர்களும், கூலி வேலை செய்பவர்கள் மட்டுமே தமிழர்கள். தப்பி தவறி பள்ளி அட்மிஷனுக்கோ , அல்லது நல்ல ஏரியாவில் ஒரு வீட்டிற்கோ சென்னயில் அலைந்து பாருங்கள் . அன்று உங்களுக்கு தெரியும். அவர்கள் போடும் கண்டிஷன் நீ தெலுங்கரா, இல்லை வடநாட்டினத்தவரா என்று உங்களை கேட்டுத்தான் வீடு தருகின்றார்கள். தமிழன் என்றால் வீடு இல்லை . முக்கியமாக ஸ்ரீ சகராவில் நீங்கள் வீடு வாங்கும் எண்ணம் இருந்தால் முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் தமிழராக இல்லாமல் இருந்தால் தான் வீடே விற்ப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
03-ஜூன்-201916:50:55 IST Report Abuse
Mirthika Sathiamoorthi இங்கே ஹிந்தி எதிர்ப்பு என்பது கலாச்சார காவலர்கள் மாதிரி காதல் தினம் கொண்டாடின புடுச்சு ஓதச்சு கட்டிவைக்கறமாதிரி , ஹிந்தி படிக்கறவனையும் சொல்லிக்கொடுக்கரவணயும் அடிக்கிறது அல்ல...3 மொழி கொள்கையல்ல முப்பது மொழிகளையும் சொல்லிக்கொடுங்க தப்பில்லை....எல்ல குழந்தைகளும் எல்லாவற்றையும் படிக்கட்டும் அதுக்கும் தடையல்ல. ஹிந்தி பல இடங்களில் மக்கள் விருப்பத்துடன் படிக்கிறாங்க, சென்னையில் பிரெஞ்சும், கொரியனும் கூட சொல்லிக்கொடுக்கிறாங்க..எங்கயாவது அதற்க்கு எதிர்ப்பு போராட்டம் நடந்ததா?....ஹிந்தியை நாங்க எதிர்க்கலை ஹிந்தி கட்டாயம் அப்புடீங்கிற தினிப்பைத்தான் எதிர்க்கிறோம்...ஹிந்தி படிங்கன்னு சொல்றதுக்கு, ஹிந்தி கட்டாயம் படிக்கணும்ன்னு சொல்றதுக்கு நெறய வித்தியாசம் உண்டு... கல்வியில் மாற்றம் வரும்போது திட்டமிடல்கள் குறிக்கோள்கள் முக்கியம்...என்ன நோக்கத்திற்காக ஹிந்தி கட்டாயம்? ஹிந்தி கட்டாயம் படிப்பதால் என்ன மாற்றம் கிடைக்கும்? வட நாட்டில் தமிழனுக்கு வேலைகிடைக்கும் ( இதுக்குமுன்னாடி யாரும் வேலைக்கு போனதில்லை?) ..அவன் அவன் லண்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியான்னு போயிட்டுஇருக்கிற இந்த காலத்தில் வட நாடுன்னா அவ்வளவு ஒசத்தியா? ..அதேமாதிரி வட நாட்டான் தமிழ்நாட்டில் அரசு வேலை செய்யுவான் சரியா? இந்த மாதிரி வாடையெல்லாம் சுடவேண்டாம்.... தமிழக வேலைகள் தமிழர்களுக்கே' என்ற முழக்கம் இப்போது மூலை முடுக்கெல்லாம் கேட்க ஆரம்பித்திருக்கிறது. மற்ற மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை என்பது ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது..மண்ணின் மக்களுக்கே வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கட்டாய வேலைவாய்ப்பு அலுவலக, கட்டாய அறிவிப்புச் சட்டம் - 1959 உள்ளது. அரசு, தனியார் வேலைகளுக்கு அந்தந்த மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம்தான் நியமிக்க வேண்டும் என்ற இந்தச் சட்டம் இப்போதும் உள்ளது... அஸ்ஸாமில் "வெளி மாநிலத்தவர் வெளியேற வேண்டும்' என்று மாணவர் அமைப்புகள் நடத்தின போராட்டம்..அந்த மாநிலத்தில் நுழைந்த வங்காளிகள், ஹிந்திக்காரர்களை வெளியேற்றுவது என்று ஒப்புக் கொண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி அவர்கள் வெளியேற்றப்பட்டனர். இப்போதும் அந்தச் சட்டம் நடைமுறையில் உள்ளது....இதேபோன்ற போராட்டம் தமிழக்த்திலும் நடைமுறை படுத்தும் எண்ணமோ? . ஹிந்தி எதிர்ப்பு இப்போ வந்ததில்லை 100 வருசத்துக்கு முன்னாடியே வந்தாச்சு... 1917 இல் காந்தி இங்க வந்து ஹிந்தி பிரச்சார சபா ஒன்னு ஆரம்பிச்சப்பவே அயோத்தி தாச பண்டிதர் வேலையத்த வேலைன்னு எதிர்த்தார்... அப்போ ஆரம்பிச்சது 1937 , 1968 போராடி போராடி தமிழனுக்கு வேற வேலையே இல்லயா? இங்க என்ன சொல்றாங்க ஹிந்தி பேசற மாநிலம் ஹிந்தி பேசாத மாநிலம், ஹிந்தி பேசுற இடம்ன்னு எடுத்துக்குவோம், அங்கே ஹிந்தி, ஆங்கிலம் வேற ஏதவது ஒரு மொழி...அவங்களுக்கு சாய்ஸ் உண்டு...நமக்கும் என்ன சொல்லணும், தாய்மொழி, ஆங்கிலம் , வேறேதாவது மொழி அப்படித்தானே சொல்லணும்? ஆனா, நமக்கு நோ சாய்ஸ்..மற்றவனுக்கு மூன்றாவது மொழி எதுவென்னலும் படிக்கலாம்..நாம் ஹிந்தி கட்டாயம் படிக்கணும், மூன்றாவது மொழியாய் ஏன் ஹிந்தி மட்டும் ? .வட நாட்டான் அவனுக்கு ஹிந்தி இங்கிலிஷ் போதும்.. அவன் 3 வது மொழியை கண்டுக்கவே மாட்டான்...ஆனா நாம மாங்கு மாங்குன்னு முனையும் படிக்கணும் நல்ல இருக்குடா உங்க நியாயம்...மும்மொழி கொள்கை 1968 இல் இருந்து நடைமுறையில் உள்ளது எந்த மாநிலம் தீவிரமா மூன்று மொழியில் பாடம் நடத்தின? ஹரியானாவில் ஹிந்தி, ஆங்கிலம் தவிர மூன்றாம் மொழியாய் பஞ்சாப் வந்திடடாதுங்கறதுக்காக தமிழை வச்சான்....நெஞ்சில கைவெச்சு சொல்லுங்க அவன் அங்க தமிழை வளர்த்தான்னு..இந்த நிலைதான் மற்ற மாநிலத்திலும்...அவர்களுக்கு மூன்றாம் மொழி கண்துடைப்பு...நமக்கு கட்டாயம்....அடுத்தது இந்திய சுதந்திரம் அடைந்து மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பொது ஹிந்தி பேசும் மாநிலம்ன்னு ஏதாவது இருந்திச்சு? ஹிந்தி பேசும் மாநிலம் ஹிந்தி பேசா மாநிலம்ன்னு ரெண்டா பிரிச்சிட்டு போயிருக்கவேண்டியாயதுதானே..எதற்கு 29 மாநிலங்கள் மொழியின் அடிப்படையில்..? ஹிந்தி என்ன தேசிய மொழியா? ஆங்கிலம் மாதிரி அரசு மொழி...அரசு மொழியா ஆங்கிலம் படிக்கபோது எதற்கு இன்னொரு அரசு மொழி? ஹிந்தியை நாங்கள் எதிர்க்கலை.... ஹிந்தி பேசும் மாநிலங்களில் மூன்றாவது மொழியை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு இருக்கும் போது நம்மக்கு மட்டும் ஏன் அந்த உரிமை இல்லை? கர்நாடக மாநிலத்தில் கன்னட வளர்ச்சி ஆணையம் அமைக்கப்பட்டது.அங்கே பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு கன்னட மொழி பாடம் கட்டாயம்... வெளிமாநிலத்தவர் விளைநிலங்களை வாங்கவும் அங்கு தடையுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் 85 சதவீத வேலைவாய்ப்பு மண்ணின் மக்களுக்கே. மீதம் உள்ள 15 சதவீதம், நேபாளிகள் அல்லாத மாநிலத்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அதிலும் அவர்கள் அனைவரும் கட்டாயம் வங்க மொழி பேச, எழுதக் கற்றிருக்க வேண்டும் என்று அரசாணையே வெளியிட்டுள்ளனர். வடநாட்டில் இருந்து அரசு வேலைக்கு தமிழ்நாட்டுக்கு வருபவன் தமிழ் படிக்க தேவையில்லை...ஆனா நாம வடநாட்டுக்கு போகணும்ன்னா இந்தி கட்டாயம் படிக்கணும்..சரீங்களா? ..மக்களே நாங்கள் ஹிந்தியை எதிர்க்கவில்லை....முமொழி கொள்கை எனும் பேரில் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம்...புரிஞ்சுக்கோங்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X