லக்னோ: ""அவதூறு வழக்கு என்ற பெயரில், என்னை மிரட்டும் வேலை எல்லாம் வேண்டாம். அதற்குப் பதில், சர்ச்சைக்குரிய "சிடி' மற்றும் நொய்டாவில் பண்ணை வீட்டிற்கான நிலம் பெற்ற விவகாரத்தில், நீங்கள் பரிசுத்தமானவர் என்பதை நிரூபியுங்கள்,'' என, பிரபல வக்கீலும், லோக்பால் வரைவு மசோதா கமிட்டி இணைத் தலைவருமான சாந்தி பூஷனுக்கு, காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய்சிங் சவால் விடுத்துள்ளார்.
லோக்பால் வரைவு மசோதா கமிட்டியில் சமூக பிரதிநிதிகள் தரப்பில் இடம் பெற்றவர் பிரபல வக்கீல் சாந்திபூஷன். இவருக்கு எதிராக, சமீபத்தில், சர்ச்சைக்குரிய, "சிடி' ஒன்று வெளியானது. அதில், நீதிபதி ஒருவருக்கு லஞ்சம் கொடுக்கும் விஷயம் தொடர்பாக, உ.பி., முன்னாள் முதல்வர் முலாயம்சிங் மற்றும் அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலர் அமர் சிங் ஆகியோருடன் விவாதித்த விஷயம் இடம் பெற்றிருந்தது. அதுமட்டுமின்றி, நொய்டாவில் பண்ணை வீட்டிற்கான நிலத்தை உ.பி., அரசிடம் இருந்து சாந்திபூஷனும், அவரின் மகன் பிரசாந்த் பூஷனும் சலுகை விலையில், பெற்றதாக புதிய புகாரும் தெரிவிக்கப்பட்டது. இதனால், சாந்தி பூஷன் மற்றும் அவரது மகனுக்கு எதிராக சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை காங்கிரஸ் பொதுச் செயலரான திக்விஜய்சிங் தெரிவித்திருந்தார். உடன், திக்விஜய்சிங்கிற்கு எதிராக அவதூறு வழக்குத் தொடரப் போவதாக சாந்திபூஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நிருபர்களிடம் நேற்று பேசிய திக்விஜய்சிங் கூறியதாவது: அவதூறு வழக்கு என்ற பெயரில், என்னை மிரட்டும் வேலையில் சாந்திபூஷன் ஈடுபட வேண்டாம். அதற்குப் பதில், சர்ச்சைக்குரிய, "சிடி' விவகாரம் மற்றும் நொய்டாவில் பண்ணை வீட்டிற்கான நிலத்தை உ.பி., அரசிடம் இருந்து பெற்ற விஷயத்தில், தான் பரிசுத்தமானவர் என்பதை அவர் நிரூபிக்க வேண்டும். சாந்திபூஷனின் அவதூறு வழக்கிற்கான நோட்டீசை நான் பெறவில்லை. இதுபோன்ற பல நோட்டீஸ்களை நான் கடந்த காலங்களில் பார்த்துள்ளேன். நோட்டீசிற்கு கோர்ட்டில் தகுந்த பதில் அளிப்பேன். பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில்தான், சாந்திபூஷன் மற்றும் அவரது மகன் பிரசாந்த் பூஷனுக்கு எதிராக நான் சில கருத்துக்களைத் தெரிவித்தேன். முத்திரை தாள் கட்டணம் செலுத்தாமல் சாந்திபூஷன் தவிர்த்தது தொடர்பாக உ.பி., அரசே நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உண்மையில் சாந்திபூஷன் அவதூறு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனில், அவருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பிய உ.பி., மாநில அரசு அதிகாரி அல்லது மாயாவதி அரசுக்குத்தான் அனுப்ப வேண்டும். அலகாபாத் சிவில் லைன் ஏரியாவில், 7,500 சதுர மீட்டர் நிலத்துடன் கூடிய பங்களாவை, ஒரு லட்சத்திற்கு எப்படி வாங்க முடியும். அதுதான் சந்தேகத்தை கிளப்புகிறது. "முலாயம்சிங் மற்றும் அமர்சிங்குடன் பேசியது தொடர்பான, "சிடி'யும் போலி' என, சாந்திபூஷன் கூறியுள்ளார்.
சமீபகாலமாக ஒரு புது நடைமுறை உருவாகியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களே, தங்களுக்கு எதிரான புகார்களை விசாரித்து, தாங்கள் குற்றமற்றவர்கள் என, பறைசாற்றிக் கொள்கின்றனர். அதேபோல், சர்ச்சைக்குரிய, "சிடி' குறித்து சாந்திபூஷன் தரப்பினரே ஆய்வு செய்து, அது தவறானது என, கூறியுள்ளனர். அப்படி எனில், "2ஜி' விவகாரம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவே விசாரணை நடத்திக் கொள்ளலாமே. நொய்டாவில் ஒரு சதுர அடி நிலத்தை மாயாவதி அரசு, 5,000 ரூபாய்க்கு கொடுத்த போது, அதில் ஊழல் நடப்பதாக சாந்திபூஷனுக்கு தெரியவில்லை. தனக்கும், தன் மகனுக்கும் சேர்த்து, 10 ஆயிரம் சதுர மீட்டர் நிலத்தை வாங்கியுள்ளார். அந்த நிலம் குலுக்கல் முறையில் ஒதுக்கப்படவில்லை என்பதையும் அவர் கண்டு கொள்ளவில்லை. படித்துத் தேர்ந்த நபரான சாந்திபூஷன், இந்த விவகாரத்தில் தன் நிலையை நாட்டிற்கு விளக்க வேண்டியது அவசியம். லோக்பால் வரைவு மசோதா கமிட்டியில் இருந்து விலகுவது குறித்து அவரே மன சாட்சிப்படி முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு திக்விஜய்சிங் கூறினார்.
இதற்கிடையில், சாந்திபூஷன் தொடர்பாக வெளியான சர்ச்சைக்குரிய, "சிடி' உண்மையானதே. அதில், எந்த விதமான திருத்தங்களும், முறைகேடுகளும் செய்யப்படவில்லை. மத்திய தடய அறிவியல் ஆய்வக அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. "சிடி'யில் உள்ள உரையாடல்கள் தொடர்ச்சியாக உள்ளன என, டில்லி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சோனியாவுக்கு அக்னிவேஷ் வேண்டுகோள்: ""காங்கிரஸ் கட்சியின் கவுரவம் காக்கப்பட வேண்டும் எனில், திக்விஜய் சிங்கை சோனியா அடக்கிவைக்க வேண்டும்,'' என, சமூக சேவகர் சுவாமி அக்னிவேஷ் கூறியுள்ளார். அவர் கூறுகையில், "அன்னா ஹசாரேயின் கடிதத்திற்கு சோனியா முறையான பதில் அளித்துள்ளார். ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில், தான் உறுதிப்பாடு கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார். ஆனால், இதற்கு மாறாக திக்விஜய்சிங் பேசி வருகிறார். அவரை, சோனியா அடக்கிவைக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், அது காங்கிரஸ் கட்சியின் கவுரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். மிகப்பெரிய இழப்பை உண்டாக்கும்' என்றார்.