புதுடில்லி ; புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையில் இந்தி பேசாத மாநிலங்களில், மும்மொழிகொள்கை என்ற பெயரால், இந்தி திணிக்கப்படுவதாக தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது. இதனை அடுத்து கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கஸ்துாரி ரங்கன் குழு :
சமீபத்தில், கஸ்துாரிரங்கன் தலைமையிலான குழுவினர், புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரிடம் சமர்ப்பித்தனர். அந்த வரைவு அறிக்கை அமைச்சகத்தின் இணையதளத்தில் பொதுமக்களின் கருத்துக்காக, வெளியிடப்பட்டிருந்தது. மக்கள் இதுகுறித்த கருத்துகளை வரும் ஜூன் 30 வரை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

தென்மாநில எதிர்ப்பு :
இந்த நிலையில், அந்த அறிக்கையில், இந்தி பேசும் மாநிலங்களில், மூன்றாவது மொழியாக ஏதேனும் ஒரு இந்திய மொழியும், இந்தி பேசாத மாநிலங்களில், இந்தி மொழியையும் கற்றுத்தர வேண்டும் என்ற முன்மொழிவு இடம் பெற்றிருப்பதாகக் கூறி இந்தியை திணிப்பதாக எதிர்ப்பு எழுந்தது. தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்தி கட்டாயமில்லை :
இதற்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், பிரகாஷ் ஜவடேகர், ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்டோர் வரைவு அறிக்கை இறுதி முடிவல்ல என்றும், இந்தி உள்ளிட்ட எந்தமொழியும், எந்த மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது என்றும் உறுதி கூறினர். இந்த நிலையில், ஏற்கனவே வெளியிடப்பட்ட தேசிய கல்விக்கொள்கை வரைவு ஆவணம் தற்போது மாற்றப்பட்டுள்ளது.
அதில், 'மூன்றாவது மொழியாக இந்தியை ஏற்க வேண்டிய கட்டாயமில்லை,' என்று திருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE