நேற்று, 2000, 500; இன்று, 1...2...3...! எண்ணுறாங்க கம்பி... அழுதாங்களாம் தேம்பி| Dinamalar

நேற்று, 2000, 500; இன்று, 1...2...3...! எண்ணுறாங்க கம்பி... அழுதாங்களாம் தேம்பி

Updated : ஜூன் 05, 2019 | Added : ஜூன் 04, 2019
Share
கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. சித்ராவும், மித்ராவும் ஸ்கூட்டரில் நகரை வலம் வர புறப்பட்டனர்.''அக்கா, ஹெல்மெட் போட்டுக்கோ. சிக்னல்ல நவீன கேமரா பொருத்திருக்காங்களாம். ஹெல்மெட் அணியாம வர்றவங்கள புகைப்படம் எடுக்குமாம்; வண்டி நம்பரை வச்சு, வீட்டு முகவரியை கண்டுபிடிச்சு, நோட்டீஸ் அனுப்புறாங்களாம்,'' என்றாள் மித்ரா.அதற்கு சித்ரா, ''இனியாவது
நேற்று, 2000, 500; இன்று, 1...2...3...! எண்ணுறாங்க கம்பி... அழுதாங்களாம் தேம்பி

கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. சித்ராவும், மித்ராவும் ஸ்கூட்டரில் நகரை வலம் வர புறப்பட்டனர்.''அக்கா, ஹெல்மெட் போட்டுக்கோ. சிக்னல்ல நவீன கேமரா பொருத்திருக்காங்களாம். ஹெல்மெட் அணியாம வர்றவங்கள புகைப்படம் எடுக்குமாம்; வண்டி நம்பரை வச்சு, வீட்டு முகவரியை கண்டுபிடிச்சு, நோட்டீஸ் அனுப்புறாங்களாம்,'' என்றாள் மித்ரா.அதற்கு சித்ரா, ''இனியாவது போக்குவரத்து விதிமீறல் குறைஞ்சா நல்லா இருக்கும்.
ஆனா, போக்குவரத்து போலீஸ்காரங்களுக்கு பயந்துதான், ஏகப்பட்ட பேரு, குண்டக்க... மண்டக்க... வண்டி ஓட்டுறாங்க...'' என்றாள்.''ஏங்கா... அப்படிச் சொல்றீங்க...'' என, நோண்டினாள் மித்ரா.''அவிநாசி ரோட்டுல பன் மால் பக்கத்துல, ஹோப் காலேஜ்ல ஜி.ஆர்.ஜி., ஸ்கூல் பக்கத்துல, திருச்சி ரோட்டுல, சுங்கம் ரவுண்டானா சிக்னல் பக்கத்துல போலீஸ்காரங்க முகாம் போடுறாங்க. ஹெல்மெட் அணியாம வர்றவங்க, வண்டி சாவியை பிடுங்கி வச்சுக்கிறாங்க. பைன் கட்டுனதுக்கு அப்புறம் சாவி கொடுக்குறாங்க.''ஹெல்மெட் அணியணும்ங்கிறதை ஏத்துக்கலாம்; பைன் கட்டிட்டா, ஹெல்மெட் இல்லாம போகலாமா? அப்படி செய்யாம, வீட்டுல ஹெல்மெட் இருந்தா, எடுத்துட்டு வரச் சொல்லலாம். இல்லேன்னா, வண்டி நம்பரை குறிப்பிட்டு, புதுசா வாங்கிட்டு வரச் சொல்லலாம். அதை விட்டுட்டு, பைன் மட்டும் வசூலிக்கிறது சரியா படலை,'' என்றாள் சித்ரா.''அதெல்லாம் சரி, அறிவிச்ச மாதிரி, ஸ்கூல்களை திறந்திட்டாங்க பார்த்தீங்களா,'' என்றாள் மித்ரா.

''ஆமாப்பா, புது பாடத்திட்டம் அமல்படுத்துறாங்க. விடுமுறையை நீட்டிச்சா, வகுப்பு நடத்த போதிய நாட்கள் பத்தாதுன்னு, கல்வித்துறை அதிகாரிக சொல்றாங்க. அதனால, சொன்ன தேதியில ஸ்கூல் ஆரம்பிச்சிட்டாங்க. வகுப்பு துவங்கியதும், கவர்மென்ட், கார்ப்பரேஷன் ஸ்கூல் குழந்தைகளுக்கு இலவச 'புக்' கொடுத்து அசத்திட்டாங்க...'' என, பெருமையா சொன்னாள் சித்ரா.''புத்தகம் கொடுத்தது இருக்கட்டும்; அனுமதி கொடுக்குறதுக்கு லட்சக்கணக்குல கேக்குறாங்களாமே...'' என, இழுத்தாள் மித்ரா.

அதற்கு சித்ரா, ''ஒனக்கும் தெரிஞ்சு போச்சா. சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம் லிமிட்டுல புதுசா ஸ்கூல் ஆரம்பிக்கிறதுக்கு விண்ணப்பம் கொடுத்தா, 'ல'கரம் கணக்குல கரன்சி கேக்குறாங்க. அதனால, ஸ்கூல் நடத்த விருப்பபடுறவங்களோட ஆசை பொசுங்கிடுது,'' என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, மொபைல் போன் சிணுங்கியது.''என்ன, பிரபா நல்லா இருக்கியா. லட்சக்கணக்குல சம்பாதிக்க ஆரம்பிச்சதும் என்ன கண்டுக்கவே மாட்டேங்கிற,'' என, பேச்சு சிறிது நேரம் நீண்டது.மித்ரா குறுக்கிட்டு, ''லஞ்சம் வாங்கி, இப்பத்தானே மூணு அதிகாரிங்க ஜெயிலுக்கு போனாங்க. அரசாங்க அதிகாரிங்க திருந்தவே மாட்டாங்களா,'' என, அங்கலாய்த்தாள்.போன் உரையாடலை துண்டித்த சித்ரா, ''கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கு துணிச்சல் ரொம்பவே அதிகமாகிடுச்சு. போன வாரம், 'நார்த் ஜோன்' உதவி கமிஷனரை கைது செஞ்சாங்க. ஒரே ஒரு நாள்தான் இடைவெளி.

டவுன் பிளானிங் உதவி அதிகாரி, உதவியாளரோடு சிக்குனாரு. எவ்ளோ தைரியம் பார்த்தியா? லஞ்சம் வாங்கி மாட்டிக்கிட்ட மூணு அதிகாரிகளுக்கும் நேத்து தான், 'சஸ்பெண்ட்' ஆர்டரே போயிருக்கு. இதுநாள் வரைக்கும் 2,000, 500ன்னு நோட்டு எண்ணிட்டு இருந்த அதிகாரிங்க, இப்படி மாட்டி கம்பி எண்ற நெலம வந்துருச்சேன்னு நெனச்சு தேம்பித்தேம்பி அழுதாங்களாம்,'' என்றாள்.''செஞ்ச பாவம் சும்மாவா விடும். அது சரி, வழக்கமா, கைது செஞ்ச மறுநாளே 'சஸ்பெண்ட்' செய்வாங்களே...'' என, இழுத்தாள் மித்ரா.''உதவி கமிஷனர் ரவிக்குமார், 'கிரேடு-1' அதிகாரி. அதனால, அரசு விதிமுறையை கரெக்டா, 'யூஸ்' பண்ணணும். எவ்விதத்திலும் தவறான 'ரூட்'டுல போகக்கூடாதுன்னு, கார்ப்பரேஷன் டெபுடி கமிஷனர் பிரசன்னா ராமசாமி சொல்லியிருக்காரு.

அதனால, சி.எம்.ஏ.,வுக்கு பரிந்துரை செஞ்சு, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு பைல் போயிருக்கு. ஜாயின்ட் செக்ரட்டரி கையெழுத்து போட்டுட்டாரு; செக்ரட்டரி ஒப்புதலுக்கு போயிருக்கு...''அதைக்கேட்டு பிரமித்த மித்ரா, ''லஞ்சம் வாங்குன அதிகாரி மேல, துறை ரீதியா நடவடிக்கை எடுக்க, இவ்ளோ பார்மாலிட்டீஸ் பண்ணனுமா,'' என, ஆச்சரியத்தோடு கேட்டாள்.''சி.எம்.ஏ., ஆபீசுக்கு பைல் போனப்ப, நீங்களே 'சஸ்பெண்ட்' ஆர்டர் கொடுத்துட்டு, ஒப்புதலுக்கு அனுப்பி இருக்கலாமேன்னு சொல்லியிருக்காங்க. அப்படி செய்றது, 'இல்லீகல்'. சட்ட நுணுக்கத்தை பயன்படுத்தி, ஆர்டரை 'கேன்சல்' பண்றதுக்கு வாய்ப்பு இருக்காம். இதுக்கும், ஒரு 'லேடி' அதிகாரி முயற்சி செஞ்சிருக்காங்க. 'ரூல்ஸ்'-ஐ பாலோ பண்ணுங்கன்னு உயரதிகாரி சொன்னதும், 'கப்-சிப்'ன்னு போயிட்டாங்க.

''இதுல இன்னொரு விஷயமும் இருக்கு. 'ரூல்ஸ்'-ஐ 'பிரேக்' பண்ண முயற்சி செஞ்ச அதிகாரியை, ரூமுக்குள்ள நிக்க வச்சு, 'சஸ்பெண்ட்' ஆர்டரில் கையெழுத்து வாங்க சென்னை போயிருக்கற ஊழியரை, மொபைல்போனில், 'லெப்ட் - ரைட்' வாங்கிட்டாராம், புதுசா வந்திருக்கிற உயரதிகாரி.''ஆர்டர் வாங்காம, கோயமுத்துார் பக்கம் திரும்பி வரக்கூடாதுன்னு கறாரா சொல்லிட்டாராம். அநேகமா, இன்னைக்குதான், ஊருக்கு திரும்பி வருவாருன்னு, கார்ப்பரேஷன் வட்டாரத்துல பேசிக்கிட்டாங்க...'' என்ற சித்ராவின் மொபைல் போனுக்கு, ஜெயமான சந்திரனிடம் இருந்து, எஸ்.எம்.எஸ்., வந்திருந்தது.''என்னக்கா, 'சஸ்பெண்ட்' பண்ணிட்டாங்களா...'' என, ஆவலோடு கேட்டாள் மித்ரா.''டவுன் பிளானிங் உதவி அதிகாரிக்கும், உதவியாளருக்கும் 'சஸ்பெண்ட்' ஆர்டரை, சனிக்கிழமை சாயாங்காலம், கார்ப்பரேஷன்ல இருந்து, சிறைத்துறைக்கு அனுப்பியிருக்காங்க. அரசு விடுமுறைன்னு சொல்லி, திருப்பி அனுப்பிட்டாங்களாம்...''''அப்புறம்...''''சவுத் ஜோன் அதிகாரிகளை வரவழைச்சு, அவுங்க மூலமே, நேத்து கொடுக்க வச்சிருக்காங்க. இப்ப, லஞ்ச அதிகாரிகளுக்கு தண்டனை கொடுக்கறதுக்கு கூட போராட வேண்டியிருக்கு. அந்தளவுக்கு, 'பவர் புல்'லா இருக்காங்க. அதுமட்டுமல்ல... இந்த லஞ்சப் பேர்வழிக ரெண்டு பேரையும் அடுத்தடுத்து அதிரடியா 'உள்ளே தள்ளி'யதாலதான், மாநில லஞ்ச ஒழிப்பு துறை ஐ.ஜி., முருகனையே, அந்த போஸ்ட்ல இருந்து துாக்கியடிச்சுட்டாரு கொங்கு வி.ஐ.பி.,ன்னு, ஒரு மேட்டர யாரோ போலீசுல கிளப்பி விட்டுருக்காங்க... ஆனா, அதுல உண்மையில்லைன்னு மற்றொரு தரப்பு சொல்லுதாம்,'' என்றாள் சித்ரா.

அப்போது, ஸ்கூட்டர் கலெக்டர் அலுவலகத்தை கடந்தது.கலெக்டர் ஆபீசை பார்த்ததும், ''இங்க வேலை பார்த்த அதிகாரியையும் 'சஸ்பெண்ட்' செஞ்சாங்களாமே...'' என, கேட்டாள் மித்ரா.''ஆமாம், மித்து, 'ரிடையர்மென்ட்' ஆகுற அன்னைக்கு, 'சஸ்பெண்ட்' ஆர்டர் வந்திருக்கு. நீலாம்பூர் பக்கத்துல இருக்குற மகால்ல, பிரிவுபசார விழாவுக்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்க. ஒவ்வொரு ஊராட்சியில இருந்தும், கண்டிப்பா பரிசு கொண்டு வரணும்னு உத்தரவு போட்டிருந்தாங்களாம். தடபுடலா ஏற்பாடு நடந்துருக்கு. மாவட்ட நிர்வாகம் தரப்புல, 'சஸ்பெண்ட்' ஆர்டர் கொடுத்து, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்காங்க...'' என்றாள் சித்ரா.''ரேஷன் கடை ஊழியர்களையும், 'சஸ்பெண்ட்' செஞ்சிருக்காங்களே...''''ஒனக்கு அதுவும் தெரிஞ்சு போச்சா. கரெக்ட்டான நேரத்துக்கு ரேஷன் கடைகளை திறக்கணும்னு ஆர்டர் போட்டுருக்காங்க. அதை, 'செக்' பண்றதுக்கு, பறக்கும்படையும் நியமிச்சிருக்காங்க. சிட்டி லிமிட்டுக்குள்ள மூணு கடை தெறக்காம இருந்துருக்கு...''''ஆனா, ரெண்டு பேரை தானே, 'சஸ்பெண்ட்' செஞ்சாங்க...''''பொறுமையா இரு. முழுசா சொல்றேன்.

பாப்பநாயக்கன்பாளையம் ஏரியாவுல இருக்கற கடையும் தெறக்கலையாம். ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிட்டு விட்டுட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.''என்னக்கா, இப்படிச் சொல்றீங்க. அவ்ளோ ரூபா கொடுக்கறதுக்கு பதிலா, 'சஸ்பெண்ட்' ஆர்டர் வாங்கிட்டு போயிடலாமே. 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வந்ததுக்கு அப்புறம், சம்பாதிக்க முடியறதில்லையே...'' என, அப்பாவித்தனமாக சொன்னாள் மித்ரா.''அப்படியில்ல, மித்து, 'சஸ்பெண்ட்' செஞ்சா, ஆறு மாதம் கடை ஒதுக்க மாட்டாங்க. அரை மாதம் சம்பளமே கெடைக்கும். ஆறு மாசம் கழிந்ததும், ஊழியர் தேவை இருந்தா மட்டுமே கடை ஒதுக்குவாங்க. இல்லேன்னா, சும்மா ஒக்கார வச்சிருவாங்களாம்...'' என்றாள் சித்ரா.''ஓ... அப்படியா...'' என, வாயை பிளந்த மித்ரா, ''போலீஸ் துறையில், 'டிரான்ஸ்பர் லிஸ்ட்' ரெடியாகிட்டு இருக்காமே,'' என கிளறினாள்.
''ஆமாப்பா, ரூரல் ஏரியாவுல கஞ்சா சேல்ஸ் சக்கைப்போடு போடுது. மசாஜ் சென்டர் நடக்குது. சூதாட்டமும் அமர்க்களமா போகுது. சொல்லிப்பார்த்தும், திருந்துற மாதிரி தெரியல. அதனால, ஒரே இடத்துல, ரொம்ப வருஷமா கோலாச்சிக்கிட்டு இருக்கற போலீஸ்காரங்கள துாக்குறதுக்கு, 'லிஸ்ட்' தயார் செஞ்சு வச்சிருக்காங்களாம்,'' என, சித்ரா, முடிப்பதற்குள், ''பொள்ளாச்சி...'' என, குறுக்கிட்டாள் மித்ரா.''மித்து, கொஞ்சம் பொறுமையா இரு. பொள்ளாச்சி பாலியல் விவகாரத்துல, பெண்ணின் பெயரை வெளியிட்டதால, பழைய எஸ்.பி., பாண்டியராஜனை மாத்துனாங்கள்ல, அந்த விவகாரத்துல அறிக்கை தயாரிச்சுக் கொடுத்தது, உளவு பார்க்குற இன்ஸ்பெக்டர்.
இப்ப இருக்கற எஸ்.பி., சுஜித்குமாரிடமும் சென்னையில இருந்து அறிக்கை கேட்டுருக்காங்க. இப்பவும், சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயரோடு, மீண்டும் அறிக்கை கொடுத்திருக்காரு அந்த இன்ஸ்பெக்டர். அதை படித்து டென்ஷனான எஸ்.பி., அவரை ஒரு பிடி பிடிச்சிட்டாராம்...''''அப்புறம்...''''எஸ்.பி.,யே, அந்த அறிக்கையை முழுசா படிச்சு பார்த்து, புதுசா தயாரிச்சு அனுப்பியிருக்காரு. 'செம டோஸ் வாங்கிய' இன்ஸ்பெக்டர், 'லீவு' போட்டுட்டு, 'எஸ்கேப்' ஆகிட்டாராம்,'' என்றாள் சித்ரா.அப்போது, மித்ராவின் மொபைல் போனுக்கு, லோகுவிடம் இருந்து அழைப்பு வந்தது.பேசி முடித்ததும், ''போலீஸ் எஸ்.ஐ., மிரட்டுறாருன்னு புகார் கொடுத்திருக்காங்களாமே,'' என, இழுத்தாள் மித்ரா.''அதுவா, மார்ட்டின் கேஷியர் பழனிசாமி இறப்பு விவகாரம் இன்னும் இழுத்துக்கிட்டு இருக்கு.
ரெண்டு தடவை பிரேத பரிசோதனை செஞ்சும், இன்னும் உடலை வாங்காம இருக்காங்க. அவரது மனைவி சாந்தாமணி, கலெக்டர் ஆபீசுல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க.''அதுல, எல்லாருமே எங்கள்ட்ட விசாரிக்கிறாங்க; மார்ட்டின் தரப்புக்கு ஆதரவா செயல்படுறாங்க. உடலை வாங்கச்சொல்ல, காரமடை போலீஸ் எஸ்.ஐ., மிரட்டுறாருன்னு புகார் சொல்லியிருக்காங்க. அதனால, அரசு அதிகாரிங்க, டாக்டருங்க, போலீஸ்காரங்க ஆடிப்போயிருக்காங்க. இவ்விவகாரத்துல அரசியல் கட்சிக்காரங்க மூக்கை நுழைச்சா, விவகாரம் வேற விதமா மாறிடும்னு பேசிக்கிறாங்க,'' என்றவாறு, வீட்டுக்கு முன் வந்து, ஸ்கூட்டரை நிறுத்தினாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X